செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது

1 minutes read

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 14 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இரண்டு வாரங்களால் பிற்போடப்பட்டுள்ளது.

சீரற்ற கால நிலையால் முறையான பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் போனதாகத் தெரிவித்து சில கழகங்கள் போட்டிகளைப் பிற்போடுமாறு கோரியதற்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் போட்டிகளைப் பிற்போட நிர்ப்பந்திக்கப்பட்டதாக தயார் நிலையில் இருக்கும் கழகம் ஒன்றின்  பிரதிநிதி தெரிவித்தார்.

சம்பியன்ஸ் லீக் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் நவம்பர் 7ஆம் திகதி போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என சம்மேனத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ஒரு சில கழகங்கள் பயிற்சிகளிலும் பயிற்சிப் போட்டிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அந்த  பிரதிநிதி   தெரிவித்தார்.

சம்பியன்ஸ் லீக் போட்டியை முன்னிட்டு சில கழகங்களுக்கு பகுதி அளவில் அனுசரணையாளர்கள் கிடைத்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. அதேவேளை, இந்த சுற்றுப் போட்டிக்கு ஒவ்வொரு கழகத்திற்கும் ஆகக் குறைந்தது 75 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் செலவினம் ஒரு கோடி ரூபாவை தாண்டலாம் எனவும் மற்றொரு கழக  பிரதிநிதி  தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க ஓவ்வொரு போட்டிக்கும் ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்குவதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் முன்னர் அறிவித்திருந்தார்.

எனினும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருகை தரவுள்ள சென். மேரிஸ் கழகத்திற்கு ஒவ்வொரு போட்டிக்கும் போக்குவரத்து செலவு இரண்டு இலட்சம் ரூபாவரை தேவைப்படும் என அறியக்கிடைக்கிறது.

எனவே, ஒவ்வொரு கழகத்திற்கும் ஓரிரு அனுசரணையாளர்களை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துகொடுப்பது வரவேற்கத்தக்கது என சில கழகங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவல் பெறுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலன்தரவில்லை.

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி இரண்டு குழுக்களில் நடத்தப்படும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 8 சுற்றிலும் மற்றைய அணிகள் தரமிறக்கல் சுற்றிலும் விளையாடும்.

சம்பியன்ஸ் லீக் கடைசியாக 2022இல் நடத்தப்பட்டிருந்தது.

பங்குபற்றும் அணிகள்

ஏ குழு: ஜாவா லேன் (2022இல் இடம்), சோண்டர்ஸ், நியூ ஸ்டார், செரண்டிப், இலங்கை போக்குவரத்துச் சபை, நிகம்போ யூத், கிறிஸ்டல் பெலஸ்.

பி குழு: மாத்தறை சிட்டி (2022 இல் சம்பியன்), அநுராதபுரம் சொலிட், மொரகஸ்முல்லை, பொலிஸ், சுப்பர் சன், பெலிக்கன்ஸ், யாழ். சென். மேரிஸ்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More