செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

2 minutes read

குரோஷியாவுக்கு எதிராக டொரொன்டோ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பீபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றில் போர்த்துக்கல் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிகவும் கடினமான வெற்றியை ஈட்டி 16 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஒரு கோல் பின்னிலையில் இருந்த நிலையில் போர்த்துக்கல் அணிக்கு அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகுத்திய பெனல்டி கோல், உபாதையீடு நேரத்தில் கோன்சலோ ரமோஸ் தலையால் முட்டி அடித்த கோல் என்பனவே போர்துக்கல்லை வெற்றிபெறச் செய்தன.

இந்த வெற்றியை அடுத்து தனது 41ஆவது வயதிலும் போர்த்துக்கல் சீருடையில் மற்றொரு போட்டியில் விளையாடும் வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார்.

இப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் குரோஷியா வீரர் ஒருவர்   அடித்த கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து போடப்பட்டதாக உதவி மத்தியஸ்தர் கொடியை நீட்டி சமிக்ஞை செய்ததால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து உபாதையீடு நேரத்தில் குரோஷியாவின் இரண்டு பின்கள வீரர்களுக்கு மேலாகத் தாவிய கொன்சாலோ ரமோஸ் தனது தலையால் பந்தை முட்டி கோல் போட்டு  போர்த்துக்கல்லை வெற்றிபெறச் செய்தார்.

போர்த்துக்கல் அணியின் தலைமைப் பயிற்றுநர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸ் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் ரமோஸை மாற்று வீரராக களம் இறக்கினார். அவரது அந்த முடிவு மிகவும் சரியானது என்பதை உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம் ரமோஸ் நிரூபித்தார்.

 

இந்தப் போட்டியில் 40 வயதைக் கடந்த இரண்டு கால்பந்தாட்ட விற்பன்னர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லூக்கா மொட்றிக்கும் அணித் தலைவர்களாக எதிரும் புதிருமாக விளையாடியமை விசேட அம்சமாகும்.

போட்டிக்கான நாணய சுழற்சியின்போது இருவரும் புன்முறுவலுடன் கைகுலுக்கிக்கொண்டதுடன் போட்டி முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர்  ஆரத்தழுவி   வாழ்த்தியது அனைவரையும் நெகிழ வைத்தது.

மேலும் அவர்கள் இருவரும் ரியல் மெட்றிட் கழகத்தில் பல வருடங்களாக விளையாடிய சக வீரர்களாவர்.

குரோஷியா மிரட்டல்

போர்த்துக்கல்லும் குரோஷியாவும் போட்டியின் முதலாவது பகுதியில் சம அளவில் மோதிக்கொண்டதுடன் இரண்டு அணிகளும் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டன.

பல தடவைகள் ரோனால்டோ கோல் போட எடுத்த முயற்சிகள் ஒன்றில் குறி தவறியது அல்லது பின்கள வீரர்களாலும் கோல் காப்பாளராலும் தடுக்கப்பட்டது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.

 

ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில், ஜோசிப் ஸ்டானிசிக் வலப்புறத்திலிருந்து பரிமாறிய பந்தை முறையாக் பெற்றுக்கொண்ட ஐவன் பெரிசிக்  கோலாக மாற்ற, குரோஷியா 1 – 0 என முன்னிலை பெற்று போர்த்துக்கல்லுக்கு மிரட்டலாக விளங்கியது.

எவ்வாறாயினும் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் குரோஷிய மத்திய கள வீரர் நிக்கோலா விலாசி தனது பெனல்டி எல்லைக்குள் முரணான வகையில் செயல்பட்டது வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்புடன் நிரூபணமானதை அடுத்து போர்த்துக்கல்லுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ   மிக நேர்த்தியாக பெனல்டியை கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தி தனது அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சியத்தன.

போட்டி முழு நேரத்தைத் தொட்ட போது இரண்டு அணிகளும் தலா ஒரு கொலை போட்டிருந்ததால் போட்டி மேலதிக நேரத்திற்கு நீடிக்கப்படலாம் என கருதப்பட்டது.

ஆனால் உபாதையீடு நேரத்தில் (90 + 4 நி.) முன்கள பக்கநிலை வீரர் ரபாயல் லியோ இடதுபுறத்தில் இருந்து உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி குரோஷியாவின் பின்கள வீரர்களுக்கும் மேலாகத் தாவிய ரமோஸ் தனது தலையால் முட்டி போர்த்துக்கல்லின் வெற்றிகோலைப் போட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.