செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 46 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 46 | பத்மநாபன் மகாலிங்கம்

20 minutes read

அந்த காலத்தில் மக்களிடையே தொடர்புகள் ஏற்படுத்த, தபால்கந்தோர் முக்கிய இடத்தை வகித்தது. கடிதம், போஸ்ட் காட், பதிவு தபால், புத்தக பொதி, பொதிகள் அனுப்புதல், தந்தி (Telegram) என்பவற்றின் மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்புகளைப் பேணினார்கள். தந்தி விரைவாக சென்று செய்தியை அறிவித்தது. திருமண வாழ்த்துகளையும், அரசாங்க உத்தியோகத்தர்கள் திடீரென வேலைக்கு போக முடியாத சந்தர்ப்பங்களில் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவும், இறப்புகள் ஏற்பட்ட போது தகவலை அறிவிக்கவும் தந்தி பயன்பட்டது. (கை தொலைபேசிகள் இல்லாத காலம் அது) தந்தி ஒன்று வந்ததும் மக்கள் பயத்துடன் முதல் சிந்திப்பது “யார் செத்து போனாரோ?” என்று தான், அந்த அளவுக்கு தந்திகள் அதிக அளவில் மரண செய்திகளை தாங்கி வந்துள்ளன.

கணபதியார் தனது வீட்டுக்கு சுகமாகி வந்ததை நினைத்து மீனாட்சி சந்தோசமும் நிம்மதியும் அடைந்தா.  கதிர்காமக் கந்தனிடம் தான் போகும் போது அவரை தனிய விடக்கூடாது என்று எண்ணிய மீனாட்சி, தனது தம்பியாரின் இரண்டாவது மகளை கூட்டி வந்து தனக்கு உதவியாக வைத்துக் கொண்டா. மந்திரம் இப்பொழுதும் கணபதியார் வீட்டிலேயே இருந்தான்.

கந்தையரின் மூத்த மகள் சிவசிதம்பரம் திருமணம் செய்து போய் விட, இரண்டாவது மகள் சிவபாக்கியம், யாழ்ப்பாணத்தில் ஐயாச்சியுடன் நின்று படித்து ஜே.எஸ்.சி. பாஸ் பண்ணிவிட்டு வீட்டில் இருந்தாள். மீனாட்சி கேட்டதும் கந்தையர் முழு மனதுடன் அவளை தமக்கையுடன் அனுப்பி வைத்தார்.

பாக்கியம் முதலில் மீனாட்சிக்கு சைவமாய் சமைத்து வைத்து விட்டு, பிறகு கணபதியாருக்கு மச்சம் சமைப்பாள். மச்சம் சமைத்த கையுடன் போய் குளித்து விட்டு வந்து விடுவாள். அவளும் கூடுதலாக அத்தைக்காரியின் சைவ சாப்பாட்டை விரும்பினாள்.

ஆஸ்பத்திரியால் வந்த பிறகு கணபதியாரின் கையில் காசுப்பிழக்கம் கொஞ்சம் குறைந்து விட்டது. அவரின் வீட்டில் எப்போதும் நெல் இருக்கும். அவரது தோட்டத்திலிருந்து பெரும்பாலான மரக்கறிகள் வரும். மீன் விற்பவன் தொடர்ந்து மீன்களை கொடுத்து விட்டு நெல்லை பண்டமாற்றாக வாங்கி கொள்வான். அதனால் கணபதியார் கையில் காசு இருப்பதில்லை.

ஒருத்தன் “ஐயா, என்ரை பிள்ளைக்கு சரியான காய்ச்சல், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகோணும், பஸ்ஸிற்கும் காசில்லை, ஒரு ஐம்பது ரூபாய் காசு தாருங்கோ.” என்று வந்து நின்றான். கணபதியாரிடம் காசு இல்லை, அவனுக்கு உதவி செய்யாமல் விடவும் முடியாது. பாக்கியத்திடம் “பிள்ளை, அத்தையின்ரை காசு இருக்கும் எடுத்து வா.” என்றார்.

பாக்கியம்          “பெரிய மாமா, நான் அத்தையின்ரை காசை எடுக்க மாட்டன், நீங்கள் விரும்பினால் எடுங்கோ.” என்று மறுத்து விட்டாள்.

கணபதியார் “ஆபத்துக்கு பாவமில்லை.” என்று சொல்லி மீனாட்சியின் றங்கு பெட்டியை திறந்தார். அதற்குள் நூறு ரூபா தாள்களும், ஐம்பது ரூபா, பத்து ரூபா, ஐந்து ரூபா தாள்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கணபதியார் ஐம்பது ரூபா தாள்களுக்குள் ஒரு தாளை உருவி எடுத்து வந்தவனிடம் கொடுத்து “இந்தா, பிள்ளையை கெதியாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போ.” என்றார். வந்தவன்.    “ஐயா, நீங்கள் செய்த இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்கமாட்டன்.” என்று சொல்லி விட்டு அவசரமாக ஓடினான்.

பாக்கியத்திடம் “நாளைக்கு எனக்கு நெல்லு கொடுத்த காசு கொஞ்சம் வருமதி இருக்கு. நான் எடுத்த காசை வைச்சிடுவன்.” என்று சமாதானம் சொன்னார். அவரது கஷ்ட காலம், வெளியிலை போட்டு வந்த மீனாட்சி தனது றங்கு பெட்டியை திறந்து காசை சரி பார்த்தா, ஒரு ஐம்பது ரூபா தாள் மட்டும் குறைந்தது. மீனாட்சிக்கு பாக்கியம் எடுக்க மாட்டாள் என்று நன்கு தெரியும்.

அந்த நேரம் பார்த்து நாபனும் அங்கு வந்தான். மீனாட்சி பேரனைப் பார்த்து “டேய் நீ எங்கையெண்டாலும் நூறு ரூபா காசிருக்க ஐம்பது ரூபாயை மட்டும் களவெடுக்கிற கள்ளனைக் கண்டனியா?  என்ரை காசை எடுத்தது வெளிக் கள்ளன் இல்லை, உள் வீட்டுக் கள்ளன் தான்” என்றா.

நாபனுக்கு பேரன் தான் எடுத்து விட்டார் என்று விளங்கியது, தெரியாத மாதிரி “ஆச்சி கள்ளன் ஆரெணை” என்று கேட்டான். “என்னடா, கள்ளன் ஆரெண்டு உண்மையிலை உனக்குத் தெரியாதா?” என்று கேட்டவ, நாபனுக்கு கிட்ட வந்து காதுக்குள், “கொப்பற்றை வேலை தான்” என்று மெல்லிய குரலில் சொன்னா. நாபன் சிரிப்புடன் பேரனைப் பார்க்க, கணபதியார் கொடுப்புக்குள்ளை ஒரு புன்சிரிப்புடன் பேரனைப் பார்த்தார்.

காதலித்து திருமணம் செய்த கணபதியாரதும் மீனாட்சியினதும் வாழ்வில் இருவருக்கும் இடையில் இது போன்ற சின்ன சின்ன சண்டைகள் வந்தனவே தவிர பெரிய சண்டைகள் வந்ததில்லை. இந்த சிறுசிறு ஊடல்களில் கூட மீனாட்சியம்மா தான் எதாவது பேசுவா, கணபதியார் எப்போதும் கொடுப்புக்குள்ளை புன்சிரிப்புடன் இருப்பார்.

கணபதியார் வீட்டுக்கும் றோட்டுக்குமிடையே ஒரு வாய்க்கால் ஓடியது. அந்த வாய்க்காலின் மேல் கணபதியார் ஒரு மதவைக்கட்டி அதன் இருபுறமும் கால்வாசிக்கு சுவர் கட்டியிருந்தார். பின்னேரங்களில் மீனாட்சி அகலமான அந்த சுவரில் போயிருந்து கொண்டு, றோட்டால் போய் வருபவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பா. பாக்கியம், மீனாட்சியுடன் வந்து இருந்து கதைப்பவர்களுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுப்பாள்.                                                                                                                               

அவசரமாக போறவர்கள் ‘கணபதியார் வீட்டெடியால் போனால் மனுசி கதைக்காமல் விடாது.’ என்று பயந்து வயல்களினூடாக இறங்கி நடப்பார்கள். மீனாட்சி கண்டு விட்டு வரும்படி பெயரை சொல்லி கூப்பிட்டு, “ஏன் உந்த சம்புக்குள்ளாலை போறாய், பாம்பு கீம்பு கடிக்க போகுது.” என்று சொல்லுவா. “அக்கா, நான் அவசரமாய் போகவேணும், இஞ்சை வந்து உங்களோடை கதைச்சு கொண்டு நின்றால் சுணங்கி விடும்.” என்று சொல்லும் போது, “உனக்கு அவசரமெண்டால் சொல்லிப்போட்டு போறது தானே. நான் என்ன உன்னைக் கட்டி வைக்கப் போறனே?” என்றவ, “சரி, சரி போட்டு வா” என்று அனுப்பி வைப்பா.

1969 ஆம் ஆண்டு, க. பொ. த. உயர்தரத்தில் தோற்றி, எழுத்துப்பரீட்சையில் சித்தியடைந்ததால் நாபனுக்கு பௌதீகவியல் (Physics), இரசாயனவியல் (Chemistry) பாடங்களுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் செய்முறைக்கு பரீட்சைக்கு (Practical Test) அனுமதி கிடைத்தது. மற்ற இரண்டு பாடங்களான தூய கணிதம் (Pure Mathematics), பிரயோக கணிதம் (Applied Mathematics) இரண்டினதும் பெறுபேறுகள், செய்முறை பரீட்சை முடிவுடன் சேர்த்து தான் வெளிவரும்.

தனியே கிளிநொச்சிக்கு அப்பால் போய் அறியாத நாபனை, பேராதனைக்கு கூட்டி செல்ல நாதன் கொழும்பிலிருந்து வந்திருந்தான். மகாலிங்கமும் பொன்னம்மாவும் நாபனை வாழ்த்தி அனுப்பி வைக்க கணபதியார் வீடு வரை வந்தனர்.

நாபன் கணபதியாரிடமும் மீனாட்சியம்மாவிடமும் சொல்லி விடை பெறும் போது, மீனாட்சி பேரனின் கையில் ஒரு தொகை காசைக் கொடுத்து “இந்தா இதை வைச்சிரு. சோதனைக்கு போக கொய்யா காசு தந்திருப்பார். இந்தக் காசில் சோதினை முடிய நீயும் கொண்ணனும் கண்டி, நுவரெலியாவை சுத்திப் பார்த்துக் கொண்டு வாருங்கள்.” என்றா.

நாதனும் நாபனும் பரந்தன் ஸ்ரேசனில் ரெயினில் ஏறி குருநாகல் ஸ்ரேசனிலை இறங்கினார்கள். அங்கிருந்து பஸ்ஸில் ஏறி கண்டியை அடைந்தார்கள். கண்டியில் நாதனின் நண்பன் காத்திருந்தான். அவன் அவர்களிருவரையும் பேராதனையில் தான் தங்கியிருந்த அறைக்கு கூட்டிச் சென்றான்.

நாபனுக்கு செய்முறை பரீட்சைகள் அடுத்த நாளும், இடையில் ஒரு நாள் விட்டு மறு நாளும் நடந்தன. அறைக்கு திரும்பி சென்று இருவரும் சாப்பிட்டு ஆற, கண்டி நுவரெலியாவை கூட்டிச் சென்று காட்டுவதற்கு நாதனின் இரண்டு நண்பர்கள் வந்தனர்.

அப்போது நாதன் அவர்களைப் பார்த்து “மச்சான் எனக்கு ஒரு மாதிரி கவலையாய் இருக்குது, பேசாமல் ஊருக்கு போவம் எண்டு பார்க்கிறன்.” என்றான். உடனே நாபனும் “அண்ணை எனக்கும் நெஞ்சுக்கை அடைக்கிற மாதிரி இருக்குது, நாங்கள் வீட்டை போவம்.” என்றான். நாபனுக்கு ஆஸ்மா வருவது வழக்கம், அதனால் நாதன் “கண்டி குளிர் இவனுக்கு ஒத்துக்கொள்ளேல்லை போலை.” என்று நினைத்து மேலும் பயந்து விட்டான்.

நாபனுக்கு இரண்டாம் நாள் செய்முறைப் பரீட்சை நடப்பதற்கு முதல் நாளிரவு கணபதியாரிடம் “பொடியங்கள் நாளைக்கு சோதினை முடிய ஊர் சுற்றிப் பார்ப்பாங்கள்.” என்று மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு படுத்த மீனாட்சி, காலையில் படுக்கையை விட்டு எழும்பவில்லை.

அதிகாலையில் எழுந்து பழக்கப்பட்ட மனைவி நேரம் செண்டும் படுத்திருப்பதைக் கண்டு பயந்து போன கணபதியார் இரண்டு முறை “மீனாட்சி.. மீனாட்சி..” என்று கூப்பிட்டுப் பார்த்தார் எழும்பவில்லை. பக்கத்தில் போய் தோளில் தட்டிப் பார்த்தார். அப்போதும் எழும்பவில்லை. திரும்ப திரும்ப எழுப்பியும் எழும்பாத மீனாட்சியைப் பார்த்து அதிர்ந்து போனார்.  ஒரு நாளும் பெரிதாக கதைக்காத கணபதியார் ஏங்கிப் போய் தவிப்போடு, “ஐயோ, மீனாட்சி என்னை தனிய விட்டிட்டு போட்டியா?” என்று வாய்விட்டு அழுதார்.

மாமனின் அழுகுரல் கேட்டு படுக்கையால் எழும்பி ஓடி வந்த பாக்கியம் மீனாட்சியின் நிலைமையை பார்த்ததும் “ஐயோ.. அத்தை” என்று கத்தி அழுதாள். விபரம் அறிந்து   ஓடி வந்த மகாலிங்கமும் பொன்னம்மாவும் மீனாட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். சுந்தரும் மணியும் மீனாட்சிக்கு அருகில் இருந்து வாய்விட்டு அழுது கொண்டிருந்தார்கள். 

முதலில் தேறிய மகாலிங்கம் அழுது கொண்டிருந்த சுந்தரைக் கூப்பிட்டு, “டொக்டரிடம் போய் விபரம் சொல்லு, பிறகு டீ. ஆர். ஓ. கந்தோருக்கு போய் சொல்லி விட்டு வா.” என்று கூறி அனுப்பினார். டொக்டர் வந்து சோதித்து பார்த்து விட்டு “அம்மா நித்திரையிலேயே இதய நோயால் இறந்து விட்டா. வேதனை அனுபவத்திருக்க மாட்டா” என்று ஆறுதல் சொன்னார்.

பிள்ளைகளுக்கு எப்படி அறிவிப்பது என்று தெரியாத மகாலிங்கம், பேராதனைப் பல்கலைக் கழக ஆய்வு கூடத்திற்கு (Laboratory) தந்தியை அனுப்பச் செய்தார். தந்தி நாபனின் கையில் கிடைக்கவில்லை. உள்ளுணர்வு சொன்னதாலேயே இருவரும் திரும்பி வந்திருந்தார்கள்.

மகாலிங்கம் மரண வீட்டிற்கு ஆயத்தங்கள் செய்யலானார். அப்போது அங்கு வந்த வல்லிபுரம் மகாலிங்கத்தை தனியே கூப்பிட்டு “தம்பி, மீனாட்சி அக்காவுக்கு தன்ரை முடிவு தெரிஞ்சிருக்கு. அதாலை தான் தன்ரை செத்த வீட்டுச் செலவுக்கு எண்டு ஒரு தொகை காசை என்னட்டை தந்து வைச்சிருக்கிறா” என்று சொல்லி காசை கொடுத்தார். மகாலிங்கம் “ஐயோ, என்ரை அம்மா, செத்த வீட்டு செலவை கூட எனக்கு வைக்கேல்லை.” என்று சொல்லி அழத் தொடங்கினார்.

நாதன் ஊர் போக எண்ணியதும் நண்பர்கள் “உடனே வெளிக்கிட்டால் குருநாகல் கடைசி பஸ்ஸை பிடிக்கலாம். குருநாகலில் யாழ்ப்பாணம் போற மெயில் ரெயினை (Mail train) பிடிக்கலாம் என்றனர். இருவரும் பஸ்ஸில் ஏறி குருநாகலை அடைந்தார்கள். அங்கு மெயில் ரெயினில் ஏறி அதிகாலை பரந்தன் ஸ்ரேசனில் இறங்கினார்கள்.

ஸ்ரேசனில் நாதன், நாபன் இருவரும் தந்தி கிடைத்து வருவார்கள் என்று நினைத்து, சுந்தர் முன் வீட்டுக்காரனின் உழவு இயந்திரத்துடன் வந்து பார்த்துக் கொண்டிருந்தான். “நாங்கள் வருவம் எண்டு உனக்கு எப்பிடி தெரியும்.” என்று மைத்துனர்கள் கேட்டதும், தந்தி கிடைக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட சுந்தர் “ஆச்சி எங்களை விட்டிட்டு போட்டா.” என்று சொல்லி அழுதான்.

நாதனும் நாபனும் திகைத்துப் போனார்கள். ‘தங்களை ஊர் சுத்திப் பாக்க சொல்லி சந்தோசமாக வழியனுப்பி வைத்த ஆச்சி திடீரென்று தங்களை விட்டுப் போய் விட்டாவே’ என்று நினைத்து சத்தமிட்டு அழுதார்கள்.

இருவரும் ‘ராக்டரில்’ ஏறி வீட்டில் போய் இறங்கினார்கள். இறங்கியதும் தமது ‘ரவெல்லிங் பாக்’ (Travelling bag) பற்றி நினைக்காது, ஓடிப் போய் வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்த மீனாட்சியை கட்டிப் பிடித்து அழுதார்கள்.

மகன்மார் கதறி அழ பொன்னம்மாவும் மணியும் சேர்ந்து அழுதார்கள். மகாலிங்கம் கண்களில் கண்ணீர் வழிய கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார். அழுதபடி இருந்த கணபதியார் குனிந்து தலையில் கையை வைத்த படி தன்ரை வாழ்க்கையில் மீனாட்சி வந்த பிறகு தாயையும் தகப்பனையும் நன்றாக பார்த்ததையும், ஊர் மக்களை தன்ரை உறவினர்கள் மாதிரி நடத்தியதையும், ஊருக்கு உதவுவதற்கு தன்னோடு தோளோடு தோள் கொடுத்து நின்றதையும் கடல்நீர் வந்து தவித்து நின்ற போது சந்தையில் வியாபாரம் செய்ய கூட்டி சென்றதையும் நினைத்து நினைத்து உருகினார். வாய் ஓயாது எப்போதும் கலகலப்பாக கதைக்கும் மீனாட்சியின் குரலை நான் இனி எப்போது கேட்பேன் என்று கலங்கினார்.

நாதனும் நாபனும் பேரனைத் தேடி ஓடிப் போய் “அப்பு என்ன நடந்தது?” என்று கேட்டு அழுதார்கள்.  நாதனையும் நாபனையும் இரண்டு கைகளாலும் அணைத்த கணபதியார் “ஆச்சி எங்களை எல்லாம் விட்டிட்டு போயிட்டா” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதார். அவர்கள் “அப்பு பேராதனையில் நிக்கேக்கை எங்களுக்கு என்னவோ செய்தது, ஊரில் ஏதோ பிரச்சினை எண்டு விளங்கியது. ஆனால் ஆச்சி இப்படி எல்லாரையும் அழ விட்டு விட்டு போவா என்று நாங்கள் நினைக்கேல்லை.” என்று சொல்லி அழுதார்கள்.

செத்த வீட்டிற்கு ஊர் மக்கள் வந்து கூடி நின்றனர். பெண்கள் ஒப்பாரி வைத்து அழ, ஆண்கள் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு கண்களை துடைத்தபடி நின்றனர். ஒருவரும் எதிர்பாராத பெரும் இழப்பு இது. அப்போது பேராதனையிலிருந்து வந்த நாதனின் நண்பன் தந்தியை அவனிடம் கொடுத்தான். பேராதனை முழுவதும் சுத்திய தந்தி பல இடங்களுக்கும் போய் இறுதியாக அவனிடம் வந்திருந்தது.

மீனாட்சியின் இழப்பின் பின் கணபதியாரை தனியே இருக்க விட விரும்பாத மகாலிங்கமும் பொன்னம்மாவும் கணபதியார் வீட்டிலேயே தங்கி விட்டார்கள்.  மகாலிங்கத்திற்கு கிளிநொச்சி கிராம சேவையாளர் பிரிவுக்கு இடமாற்றம் வந்தது. டீ.ஆர். ஓ. கந்தோருக்கு பக்கத்தில் இரண்டு அரச உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதிகள் இருந்தன. ஒன்றில் அரச உத்தியோகத்தர் தங்கியிருந்தார்கள், டீ.ஆர்.ஓ. மற்றதை மகாலிங்கம் விதானையாருக்கு வழங்கினார்.

மகாலிங்கம் காலை அந்த அலுவலகத்திற்குப் போய், கடமைகளை செய்து விட்டு, இரவு வருவார். மகனின் அலைச்சலை அவதானித்த கணபதியார், பொன்னம்மாவிடம் “பிள்ளை அவன் தனிய போய் கஷ்டப்படுறான். நான் இஞ்சை சமாளிப்பன், நீங்கள் போய் அவனுடன் இருங்கோ.” என்றார்.

பொன்னம்மா “மாமா, உங்களை தனிய விட்டிட்டு நாங்கள் என்னெண்டு போறது. மாமியின்ரை ஆண்டு திவசம் மட்டுமென்றாலும் இஞ்சை தான் இருப்பம்.” என்று மறுத்து விட்டா. இப்போ மணியும் க.பொ.த சோதனை எழுதி விட்டு வீட்டில் நின்றாள். பாக்கியம் தனது வீட்டிற்கு போய் விட்டா.

சுந்தர் க.பொ.த. பரீட்சை பாஸ் பண்ணி விட்டான், தொடர்ந்து உயர்தரம் படிக்குமாறு மகாலிங்கம் கேட்க “இல்லை மாமா, நான் கூட்டுறவு கல்லூரியில் (Co-operative school) சாதாரண தரம் படிக்க போறன். அதுக்கு ஆறுமாதம் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்திருக்க வேணும். என்னை சங்கத்திலை வேலைக்கு சேர்த்து விடுங்கோ.” என்றான்.

மகாலிங்கம், ரங்கூன் மணியத்தாருடன் கதைத்து பரந்தன் சங்கத்தில் விற்பனையாளனாய் (salesman) சேர்த்து விட்டார். பொன்னம்மா அடுத்த ஆறுமாதங்களும் மகாலிங்கத்திற்கு சமைத்து பார்சல் கட்டும் போது சுந்தருக்கும் கட்டி கொடுத்து அனுப்பினா.

சுந்தர் காலையில் வேளைக்கே எழும்பி வீட்டு வேலைகளையெல்லாம் செய்து விட்டு, அவசரம் அவசரமாய் வேலைக்கு போவான். அவன் மகாலிங்கம், பொன்னம்மா இரண்டு பேருக்கும் உதவியாக இருப்பதைக் கண்டு மணிக்கு அவன் மேல் விருப்பம் உண்டானது. நெருங்கி பழகியதால் சுந்தருக்கும் மணியின் மேல் விருப்பம் உண்டானது. இருவரும் மகாலிங்கத்தினதும் பொன்னம்மாவினதும் சம்மதம் பெறும் வரை பொறுமையாக இருக்க எண்ணினார்கள். இருவரின் விருப்பங்களை முதலில் பொன்னம்மா தான் தெரிந்து கொண்டா. உடனே அதை கணவனிடம் கூறிய போது, மகாலிங்கம் “அவன் கூட்டுறவு பயிற்சியை முதலில் முடிக்கட்டும், பிறகு இதைப்பற்றி யோசிப்பம்.” என்றார்.

ஆறு மாதங்களுக்கு பிறகு சுந்தருக்கு கூட்டுறவு கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அவன் கொழும்புத்துறையில் தனது அத்தை வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தான். சனி, ஞாயிறு பெரிய பரந்தனுக்கு வந்து விடுவான்.

கிளிநொச்சி கிராம சேவையாளர் பிரிவில் கிராமங்களும் அதிகம், மக்கள் தொகையும் அதிகம், அதனால் மகாலிங்கத்திற்கு வேலைப்பழுவும் அதிகமாயிற்று. ஆண்டு திவசம் முடிய பொன்னம்மாவையும் கூட்டி செல்லுமாறு கணபதியார் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

அப்போது மலைநாட்டிலிருந்து இரண்டு குடும்ப தலைவர்கள் வேலை தேடி மகாலிங்கத்திடம் வந்தனர். மகாலிங்கம் ஒருத்தனுக்கு தியாகர்வயலிலும் மற்றவனுக்கு கணபதியார் வீட்டுக்கு அருகிலும் சிறிய வீடுகள் போட்டு தருவதாக கூறி குடும்பத்தினரை அழைத்துவரும்படி காசும் கொடுத்து அனுப்பினார்.

இப்போது தியாகர்வயலில் ஒரு குடும்பமும் கணபதியார் வீட்டுக்கு அருகிலும் ஒரு குடும்பமும் குடியிருக்க வந்து விட்டார்கள். கணபதியாரின் காணியில் இருந்தவன் கணபதியாருக்கு துணையாக இரவில் சென்று படுப்பதாக உறுதி கூறியதால், மகாலிங்கம் பொன்னம்மாவையும் மணியையும் தனது அலுவலகம் இருந்த விடுதிக்கு அழைத்து சென்றார்.  கணபதியார் ஊரவர்களின் நன்மை, தீமைகளில் மிகவும் அக்கறையுடன் கலந்து கொண்டு உதவிகள் செய்தவர், இப்போது அவர்கள் அடிக்கடி வந்து கணபதியாரை நன்கு பார்த்துக் கொண்டார்கள்.

நாபன் பௌதீகவியல், இரசாயனவியல் செய்முறை பரீட்சையில் பெயில் (Fail) ஆகிவிட்டான். நாபனுக்கு பத்து பன்னிரண்டு வயதில் கண்ணில் ஒரு பிரச்சினை வந்தது. மாலை ஆறு மணிக்கு கண்கள் இரண்டும் தெரியாமல் போய்விடும். அவன் எங்கே நிற்கிறானோ அந்த இடத்தில் நின்று பாதை தெரியாது தடுமாறுவான். அதனை மாலைக்கண் நோய் என்று டொக்டர்கள் சொன்னார்கள். “விற்றமின்கள் குறைபாடு காரணமாக இந்த நோய் வருகிறது. தொடர்ந்து மருந்தெடுத்தால் சுகமாகிவிடும்.” என்று சொல்லி மருந்து கொடுத்தார்கள். மருந்துகளால் மாலைக்கண் மாறியது.  ஆனால் அவனுக்கு மாலைக்கண் வந்த வயதில் தான் பிள்ளைகள் நிறங்களை பிரித்து அறிந்து கொள்வார்கள், அதனால் நாபன் நிறங்களை பிரித்து அறிந்து கொள்ள கஷ்டப்படுவான். நாபனுக்கு வந்தது நிறக்குருடு (Colour blindness) அல்ல.

இரசாயனவியல் செயல் முறைப் பரீட்சையில் நிறங்களை அறிதல் முக்கியமானது. பௌதிகவியல் செயல் முறைப் பரீட்சையில் அளவுகளை துல்லியமாக அளக்க வேண்டும். அதுவும் நாபனால் முடியாது. மகாலிங்கம் நாபனை இரண்டாம் முறை பரீட்சைக்கு ஆயத்தப் படுத்த கொழும்பில் கொண்டு போய் ‘பெம்புறூக் அக்கடமி’ (Pembroke academy) இல் சேர்த்து, ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து நாதனுடன் தங்க வைத்தார்.

இரண்டாம் முறையும் நாபன் உயர்தரப்பரீட்சை எடுத்தான். எழுத்து பரீட்சையில் பாஸ் பண்ணினான். 1970 ஆம் ஆண்டு இரண்டு பாடங்களுக்கும் செய் முறைப் பரீட்சையை கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் செய்து விட்டு கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தான். இந்த முறையும் பாஸ் பண்ணுவது கஷ்டம் என்று தாயாரிடம் உண்மையை சொல்லி விட்டான்.

நாபன் ஊருக்கு வந்த அதே காலப்பகுதியில் சுந்தரும் கூட்டுறவு கல்லூரியில் இறுதி பரீட்சையை எழுதி விட்டு வந்தான். சுந்தருக்கு கூட்டுறவு துறையில் வேலை கிடைக்கும், ஆனால் நாபனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இருவரும் ஓய்ந்திருப்பதில்லை, ஓடி ஓடி வேலை செய்தார்கள். மகாலிங்கம் இருவரையும் நினைத்து ஒரு ‘போர்ட் ரக்டரை'(Ford tractor) வாங்கினார். இருவரும் ‘ரக்டரை’ ஓடிப் பழகி அனுமதிப் பத்திரம் (Licence) எடுத்துக் கொண்டனர்.

இருவரும் பதினொரு மணி வரை விதானையாரின் வேலையில் உதவினார்கள். பொன்னம்மா மத்தியான சமையலை வேகமாக செய்வா, மணி உதவியாக இருந்தாள். பொன்னம்மா, கணபதியாருக்கும் நாபனுக்கும் சுந்தருக்கும் சாப்பாடு கட்டி கொடுத்து விடுவா. இருவரும் போய் கணபதியாருடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிட்டு ஆறிய பின்னர் தியாகர்வயலுக்கு போய் மாறி மாறி வயலை உழுவார்கள். சுந்தர், நாபனை அதிகம் உழுவதற்கு விடாது கூடிய பங்கு தானே உழுவான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

பகுதி 41 –  https://vanakkamlondon.com/stories/2021/06/116949/

பகுதி 42 –  https://vanakkamlondon.com/stories/2021/06/118039/

பகுதி 43 –  https://vanakkamlondon.com/stories/2021/06/119015/

பகுதி 44 –  https://vanakkamlondon.com/stories/2021/07/120022/

பகுதி 45 –  https://vanakkamlondon.com/stories/2021/07/121109/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More