Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 43 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 43 | பத்மநாபன் மகாலிங்கம்

17 minutes read

கச்சதீவு (Katchatheevu)

கச்சதீவு, இலங்கையின் நெடுந்தீவிற்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இலங்கையும் இந்தியாவும் அந்த தீவின் மீது உரிமை கோரியதால் 1974 ஆம் ஆண்டு வரை கச்சதீவின் உரிமையைப் பற்றி இரண்டு நாடுகளுக்குமிடையே பிரச்சினைகள் இருந்தது.

285-ஏக்கர் (285-acre) தீவான (island) கச்சதீவு, தமிழ்நாட்டின் தென் மாவட்டமான இராமநாதபுரத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரத்திலிருந்து 17 km தூரத்தில் உள்ளது. வரலாற்று பதிவுகளின் படி 1609 ஆம் ஆண்டு தொடக்கம், இராமநாதபுரம் மாவட்டத்தை ஆட்சி செய்த சேதுபதிகள் என்ற, அரச குடும்பத்திற்கு சொந்தமானதென்ற சான்றிதழ்கள் இருந்தன.

இலங்கை அரசிற்கும், இந்திய அரசிற்கும் நடைபெற்ற பலசுற்று பேச்சு வார்த்தைகளின் பின் 1976 ஆம் ஆண்டு, இந்தியா அயல் நாட்டுடன் நல்லுறவைப் பேணல் என்ற கொள்கையின் அடிப்படையில் (good neighbourly relations), கச்சதீவின் நிர்வாகத்தை இலங்கையிடமே ஒப்படைத்தது.

கச்சதீவில் மக்கள் வாழ்வதில்லை, ஆனால் இலங்கை, இந்தியா இரண்டு நாடுகளின் மீனவர்களும் தமது வலைகளை காய விடுவதற்கு இந்த தீவை பயன்படுத்தினார்கள். கச்சதீவில் ஒரு பெரிய கத்தோலிக்க தேவாலயம் இருந்தது.

கச்சதீவு கத்தோலிக்க தேவாலயம்

வருடாவருடம் இந்த தேவாலயத்தில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவிற்கு (St.Antony’s festival) இரு நாட்டு யாத்திரிகர்களும் வருவார்கள். ஒப்பந்தம் செய்யும் வரை இந்திய பாஸ்போர்ட்டோ, இலங்கை விசாவோ இல்லாமல் இந்திய யாத்திரிகள் வந்து போனார்கள்.

இலங்கையில் வாழ்ந்த இந்திய மக்கள், இந்தியாவிலுள்ள தமது உறவினர்களை சந்திப்பதற்கு கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை பயன்படுத்தினார்கள். கச்சதீவில் குடிநீர் எள்ளளவும் இல்லை. தேவாலய நிர்வாகம் குடிநீர் வசதியை ஏற்படுத்தியது.

கச்சதீவு இப்போது இலங்கை கடற்படை முகாமாக (Sri Lankan Naval base and no civilians allowed there , except for 2 days and 1  night allowing pilgrims for annual St.Antony’s festival) இருப்பதால் ஒருவரையும் தீவிற்குள் அனுமதிப்பதில்லை. தேவாலய திருவிழாவிற்காக இரண்டு பகலும் ஒரு இரவும் மட்டும், இலங்கையிலிருந்து 4000 யாத்திரிகர்களையும், இந்தியாவிலிருந்து 2000 யாத்திரிகர்களையும் அனுமதிக்கிறார்கள்.

கடல் ஊருக்குள் வந்ததால், வயல்கள் உவராக மாறியதை அறிந்திருந்த அரசாங்க அதிபர் (G.A), குஞ்சுப்பரந்தனுக்கு அருகாமையில் இருந்த ‘நீவில்’ என்ற இடத்தில் காணி வழங்கும் போது பெரியபரந்தன், குஞ்சுப்பரந்தன் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க பணித்தார். அதன்படி பெரியபரந்தன் மக்களுக்கு வழங்கும் போது, வேலுப்பிள்ளைக்கும் நான்கு ஏக்கர் வயல் காணி கிடைத்தது.

மகாலிங்கம், வேலுப்பிள்ளை காடு வெட்டி திருத்த உதவிகள் செய்து, காணி விதைக்கத் தொடங்க, கல்வயலில் ஒரு பெண்ணைப் பார்த்து வேலுப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். பொன்னம்மாவிடம் “நான், உனது ஐயாவுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி நடந்திருக்கிறேன்” என்று கூறி மன நிம்மதியை அடைந்தார்.

நாதனும் நாபனும், யாழ்ப்பாணத்து பொடியள் தலைமயிர் வெட்டைப் பார்த்து பகிடி பண்ணிய நாள் தொடக்கம், யாழ்ப்பாணத்திலை சலூனுக்கு போய் தலைமயிரை வெட்டி விடுவார்கள். அவர்களுக்கு அங்கு வெட்டியது அழகாக இருந்தது. நாபன் ஒரு முறை லீவில் வந்த போது மகாலிங்கத்தின் தலையை தடவி “ஐயா, தலையில் சட்டி கவிட்ட மாதிரி வடிவாய் இருக்குது” என்றான்.

“ஏன் இந்த வெட்டுக்கு என்ன குறை?” என்று சொன்ன மகாலிங்கம், மறுநாள் கிளிநொச்சிக்குப் போன போது, ஒரு சலூனுக்கு (saloon) போய் தலைமயிரை வெட்டிக் கொண்டு வந்து விட்டார். பரமர் வந்து விதானையாரும் சலூனில் தலைமயிர் வெட்டி விட்டதைக் கண்டு “என்ன ஐயா, தம்பியவை தான் சலூனில் வெட்டீனம் எண்டு பார்த்தால் நீங்களும் வெட்டி விட்டீங்கள்” என்று கேட்க, மகாலிங்கம் “பரமர் எனக்கு இனிமேல் குந்தியிருக்கேலாது. அது தான் சலூனுக்கு போய் வெட்டிக் கொண்டு வந்திட்டன். நீர் யோசிக்காதையும், நான் தாற நெல்லை குறைக்க மாட்டன்” என்று சொல்லி சமாளித்தார்.

சாதி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்த போது, கட்டாடிமார் வீடுகளுக்கு போய் தொழில் செய்யக்கூடாது என்றும், ‘லோண்றிகளில்’ (laundry) தான் வேலை செய்ய வேண்டும் என்றும் சலவைத்தொழிலாளர் சங்கம் அறிவித்தது.

கட்டாடியாரின் மகன் காசி வவனியாவில் ஒரு லோண்றியை போட்டுக் கொண்டு போய் விட்டான். காசி “ஐயா, அடிமையாக இருந்தது காணும். என்னுடன் வாருங்கள்” என்ற போது, கட்டாடியார் “தம்பி, நீ போய் சந்தோசமாக தொழில் செய். நான் பெரியபரந்தன் மக்களுடன் இவ்வளவு நாளும் நிம்மதியாக தொழில் செய்தனான். என்னாலை முடியுமட்டும் இஞ்சை தொழில் செய்கிறன். ஏலாத காலத்திலை உன்னட்டை வாறன்.” என்று சொல்லி மகனுடன் போக மறுத்து விட்டார்.

சிகை அலங்காரத் தொழிலாளர்களின் சங்கமும் “ஒருவரும் வீடுகளுக்குப் போய் தலைமயிர் வெட்டக்கூடாது, சலூன்களிலே தான் முடி வெட்ட வேண்டும்” என்று அறிவித்தது. பரமரின் மகன்மார் கொழும்பிலுள்ள தங்கள் உறவினர்களின் சலூன்களில் வேலை பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள். பரமர், தான் பெரியபரந்தன் மக்களுடன் அன்பாக பழகியதை நினைத்து பெரியபரந்தனுக்கு வழமை போல வந்து போனார்.

மீனாட்சிக்கு ஏற்கனவே கடவுள் பக்தி அதிகம். அந்த வருடம் காளி அம்மனின் வைகாசி பொங்கலின் போது, தம்பியாரான கந்தையாவிற்கு சோதிடம் கற்பித்த சோதிடர், வேறு சில பக்தர்களுடன் கதிர்காமத்திற்கு கரைப்பாதையாக யாத்திரை போக வந்தார். பொங்கலின் போது நிறைய விறகுகள் அடுக்கி, தீ மூட்டி செந்தணல் வரும் வரை எரிப்பார்கள். பூசையின் போது பூசாரி அந்த நெருப்பு தணலில் இறங்கி தீ குளித்தபின், கதிர்காம யாத்திரை போக விரும்புபவர்கள் வரிசையாக தீயில் இறங்கி தீ குளிப்பார்கள்.

தீ குளிக்கும் போது காலில் நெருப்பு சுட்ட புண் ஏற்பட்டால், காளி அம்மன் அனுமதி வழங்கவில்லை என்று புரிந்து கொள்வார்கள். தீயால் சுடப்படாதவர்கள் கரை யாத்திரையாக வெளிக்கிட்டு முதலில் வன்னிவிளாங்குளம் கோயிலுக்குச் செல்வார்கள்.

மீனாட்சிக்கும் தம்பியாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. அவர்கள் யாத்திரைக் குழுவுடன் இணைந்து கொள்ள விரும்பினார்கள். கணபதியாரிடம் “நீங்களும் வாருங்கள், ஒன்றாய் போய் வருவோம்” என்று கேட்டார்கள். கணபதியார் “நான் காளியாச்சியை விட்டிட்டு வர மாட்டேன். நீங்கள் சந்தோசமாக போய் வாருங்கள்” என்று சொல்லி மீனாட்சிக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தார்.

குழு முதலில் வன்னிவிளாங்குளம் கோவிலுக்கு சென்றது. வன்னிவிளாங்குளம் கோவிலிலும் ஒரு குழு யாத்திரை போக தயாராக இருந்தது.

வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலயம்

இரண்டு குழுக்களும் வற்றாப்பிள்ளை அம்மன் கோவிலுக்கு போனார்கள். அங்கு சேர்ந்த பக்தர்களுடன் இணைந்து கடற்கரை பாதையால், தென்னை மரவடி போன்ற ஊர்களினூடாக மட்டக்கிளப்பிற்கு போனார்கள். போகும் இடமெல்லாம் முருக பக்தர்கள் உணவு கொடுத்து, ஆதரித்து தங்கள் கோவில்களில் தங்க வைத்து அனுப்புவார்கள். மீனாட்சியும் கந்தையரும் சளைக்காமல் கதிர்காமக்கந்தனை நோக்கி நடந்தார்கள்.

கதிர்காமக் கந்தன் ஆலயம்

கரைப்பாதையால் போனவர்கள் கோவிலை அடைந்த நேரம், கதிர்காமக்கந்தனுக்கு கபராலைகள் பூசையை ஆரம்பித்தனர். யாத்திரிகர்கள் கதிர்காமத்தில் திருவிழா முடிய கொழும்பில் நடக்கும் ஆடி வேல் திருவிழாவிற்கு போனார்கள். ஆடி வேல் முடிய ரெயிலில் ஏறி ஊர் போய் சேர்ந்தார்கள்.

மீனாட்சியும் தம்பியாரும் மூன்று மாதங்களுக்கு பின்னர் ஊர் வந்து சேர்ந்தார்கள். கணபதியார் ஊர் மக்களுக்கு மனைவியின் சார்பில் அன்னதானம் கொடுப்பதற்கு ஆயத்தங்கள் செய்தார். மகாலிங்கம், பொன்னம்மா, கந்தையரின் மனைவி, சுந்தரம் முதலியோர் உதவி செய்தார்கள்.

அன்னதானத்துடன் தமது விரதத்தை முடித்த மீனாட்சியும் தம்பியாரும் தமது அன்றாட கடமைகளை ஆரம்பித்தார்கள்.

கணபதியார் வீட்டில் இரண்டு சமையல் கொட்டில்கள் இருந்தன. ஒன்றில் மீனாட்சி சைவமாய் சமைப்பா, மற்றதில் கணபதியார் தனக்கு விரும்பமான மீன்களை அல்லது இறைச்சியை சமைப்பார். மீனாட்சி கரைப்பாதையால் யாத்திரை போன நாட்களில், கணபதியார், மீனாட்சியின் குசினியில் சமைத்து விடுவார்.

மீனாட்சி வரப்போகிறா எண்டு தெரிஞ்சதும், மீனாட்சியின் குசினியை சுந்தரத்தின் உதவியுடன் நன்கு சாணகத்தினால் மெழுகி விட்டார். மீனாட்சி வந்த பிறகு அவ சைவமாய் சமைக்க, கணபதியார் தனது கொட்டிலில் மச்சம் சமைப்பார். மீனாட்சியின் சோறு கறியை போட்டுக் கொண்டு, தனது கொட்டிலுக்கு போய் தான் சமைத்த இறைச்சி கறியுடன் சாப்பிடுவார்.

ஒரு நாள் மறந்து போய் இறைச்சிக்கறி போட்ட கோப்பையுடன் கணபதியார் மீனாட்சியின் சமையலறைக்குள் போய் விட்டார். அன்று மீனாட்சி விரதம் பிடிக்கும் நாளாகவும் இருந்து விட்டது. மீனாட்சிக்கு அன்று தான் முதல் முதலாக கணபதியாரின் மேல் அடக்க முடியாத கோபம் வந்தது. கோபத்துடன் கணபதியாரை பேசிவிட்டு, சாப்பிடாமல் தலைவாசலில் போயிருந்து விட்டா.

மகாலிங்கம் வேலை முடிந்து வந்த போது, தகப்பன் ஒரு பக்கம் பார்த்த படி இருக்க, தாய் மறுபக்கம் பார்த்த படி கோபமான முகத்துடன் இருக்க, மகாலிங்கத்திற்கு தாய்க்கும் தகப்பனுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை என்று விளங்கி விட்டது. ஒன்றும் பேசாமல் தியாகர் வயலுக்கு போய், நாபனிடம் “தம்பி, கொப்பருக்கும் கோச்சிக்கும் ஏதோ பிரச்சினை. நீ தான் போய் சமாளிக்க வேணும்.” என்று கேட்டுக் கொண்டார்.

நாபன் கணபதியார் வீடு போய்ச் சேர்ந்த போது பேரன் தெற்கு பக்கம் பார்த்தபடி இருக்க, பேர்த்தி வீட்டின் முன் வாசல் படியில், வடக்கு பக்கம் பார்த்தபடி ‘உம்’ என்று இருந்தா. கணபதியார் நாபனைப் பார்த்து புன்னகைத்தார், மீனாட்சி கோபமாக முகத்தை வைச்சு கொண்டிருந்தா. நாபன் கணபதியாரைப் பார்த்து “என்ன பிரச்சினை” என்று சைகை மூலம் கேட்டான்.

கணபதியாரும் “கோச்சிக்கு என்னிலை கோபம்” என்று சைகை காட்டினார். அவன் பேர்த்தியிடம் “ஆச்சி அப்பு என்ன செய்தவர்” என்று கேட்டான். அதற்கு அவ “கொப்பர் செய்த வேலை தெரியுமோ?, இறைச்சிக்கறியோடை நான் விரதம் பிடிக்கிற இடத்துக்கு வந்திட்டார்.” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் ‘உர்’ என்று முகத்தை வைச்சுக்கொண்டு எதிர்ப்பக்கம் திரும்பி இருந்தா.

நாபன் ஆச்சியின் கோபத்தை தணிக்க வேண்டும் என்று நினைத்து “அப்பு, ஆச்சிக்கு உங்கடை பறங்கியரின் மனிசி மாதிரி கவுன் போட்டு, டான்ஸ் ஆட வைத்தால் எப்படி இருக்கும்?” என்றான். மீனாட்சிக்கு அத்தனை கோபத்திலும் அடக்கமுடியாத சிரிப்பு வந்து விட்டது. கோபமாக நடித்து “வடுவா, றாஸ்கல்” என்றவ குலுங்கி, குலுங்கி சிரிக்கத் தொடங்கினா. சண்டையும் அந்த சிரிப்போடை முடிந்தது.

சுந்தரம் இப்போது கணபதியார் வீட்டில் தங்கி, கணபதியாருக்கும் மீனாட்சிக்கும் உதவியாக இருந்தான். சுப்பையாவிற்கு மகாலிங்கம் கார் பழக்கி, கார் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரமும் (Licence) பெற்றுக் கொடுத்தார். இப்போது சில காலமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தனுஷ்கோடி, இருவரையும் கச்சதீவுக்கு கூட்டி செல்வதற்காக திருகோணமலையிலிருந்து வருவார். சுந்தரமும் சுப்பையாவும் பயணம் சொல்ல எல்லார் வீடுகளுக்கும் போனார்கள்.

பெரியபரந்தன் மக்கள் எல்லாரும், அவர்களுக்கு பயணக்காசு கொடுத்தார்கள். கணபதியாரும் மீனாட்சியும் தனித்தனியாக காசு கொடுத்தனர். பொன்னம்மா அவர்கள் இருவரும் கடந்த இரு வருடங்களாக செய்த வேலைகளுக்காக ஒரு தொகையை கணக்கிட்டு அவர்களுக்கு காசாக கொடுத்து அனுப்பினா.

இவர்கள் கணபதியாரையும் மீனாட்சியையும் பார்த்து “அப்பு போட்டு வாறம், ஆச்சி போட்டு வாறம்” என்று கண்கலங்க சொல்லி விடை பெற்றார்கள். இவர்கள் மூவரும் கச்சதீவை அடைய, இந்தியாவிலிருந்து வந்த உறவினர்கள், இவர்களுக்காக கடற்கரையில் காத்திருந்தார்கள். இருவரின் தாய், தந்தையர்கள் ஓடி வந்து பிள்ளைகளை கட்டிப்பிடித்து “எண்ட புள்ளை, எண்ட புள்ளை.” என்று தடவி தடவி அழுதார்கள்.

மீண்டும் இணைந்த உறவுகள் மூன்று நாட்களும் மகிழ்ச்சியாக ஊர்ப்புதினம் பேசி மகிழ்ந்தார்கள். தாங்கள் கொண்டு சென்ற காசை உறவினர்களிடம் கொடுத்தார்கள். உறவினர்கள் தாங்கள் செய்து கொண்டு வந்த பலகாரங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். மூன்றாம் நாள் ஒப்பாரி வைக்காத குறையாக அழுதபடி பிரிந்து சென்றார்கள்.

சுந்தரமும் சுப்பையாவும் இளைஞர்கள் ஆகி விட்டனர். தனுஷ்கோடி மாடாக உழைத்து அனுப்பிய காசில், அவரது மனைவி மதுரையில் ஒரு கல்வீடு கட்டி விட்டா. தனது பருவமடைந்த மகளுக்கு, மருமகனான சுப்பையாவை அனுப்பி, திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார். சுப்பையாவிடம் “தம்பி, உனக்கு எண்ட புள்ளைய கட்டிக்க விருப்பமா?” என்று கேட்க, சுப்பையாவும் “நான் கட்டிக்கிறன் மாமா.” என்றான். அடுத்த முறை கச்சதீவுக்கு போன போது சுப்பையாவை ஊருக்கு அனுப்பிவிட்டு, தனுஷ்கோடியும் சுந்தரமும் மட்டும் திரும்பி வந்தார்கள்.

மீனாட்சி, ‘இனி நான், ஒவ்வொரு வருசமும் கதிர்காம யாத்திரை போறதால், கணபதியார் பாவம் தனிய எல்லாம் செய்ய வேணும். சுந்தரத்துக்கு ஒரு கலியாணம் செய்து வைத்தால், அவனும் மனுசியுமாய் கணபதியாரை தான் இல்லாத நேரத்தில் பார்ப்பினம்.’ என்று நினைத்தா.

தனது உறவினர் ஒருவர், நிறைய பொம்பிளைப் பிள்ளைகளை பெத்து வைச்சுக் கொண்டு கஷ்டப்படுவது தெரியும். அவரிடம் போய் “தம்பி, சுந்தரம் நல்ல பொடியன், கடும் உழைப்பாளி. உன்ரை மகளைக் கட்டிக் கொடுத்தால் நல்லாய் வைத்துத் பார்ப்பான்.” என்று கேட்டா.  அவர் “அக்கா, நான் கஷ்டப்பட்டவன் தான், அதுக்காக இந்தியாக்காரனுக்கு கட்டிக் கொடுக்கேலுமோ?” என்று சற்று கோபத்துடன் கூறினார்.

தாயார் கேட்க, அவர் மறுத்ததை மகாலிங்கம் அறிந்தார். “அம்மா, கொஞ்ச நாள் ஆற விடுவம். அவர் அதுக்கிடையிலை அந்த பிள்ளைக்கு செய்து வைச்சிட்டார் என்றால் சரி. செய்யாட்டி நான் போய் கதைச்சு பார்க்கிறன்.” என்றார்.

வறுமை நிலையிலிருந்த அவரால் தனது மூத்த பொம்பிளைப் பிள்ளைக்கு கலியாணம் செய்து கொடுக்க முடியேல்லை. மகாலிங்கம் பொன்னம்மாவுடன் அவரின் வீட்டுக்கு போனார். “அண்ணை, சுந்தரம் இந்தியாக்காரன் தான், ஆனால் நல்லவன். அவனுக்கு ஒரு கூடாத பழக்கமும் இல்லை, நல்ல உழைப்பாளி. உங்களையும் அவன் பார்ப்பான். அவன்ரை பேரிலை இப்ப காணி எடுக்கேலாது, நீ உன்ரை மகளை கட்டிக் கொடுத்தாயெண்டால், இப்ப முரசுமோட்டையிலை கொடுக்கிற காணியிலை, விதானையாரிட்டை கதைச்சு உன்ரை மகளின்ரை பேரிலை ஒரு காணியை எடுக்கலாம்.” என்று கதைத்தார். தகப்பன் சம்மதிக்க கலியாணமும் நடந்தது.

மகாலிங்கம், சுந்தரம் குடும்பத்தின்ரை நிலமையை முரசுமோட்டை விதானையாரிட்டை சொல்லி, ஒரு ஏக்கர் வீட்டுக்காணியையும் மூண்டு ஏக்கர் வயல் காணியையும் சுந்தரத்தின் மனைவி பேரில் எடுத்து கொடுத்தார். காணி வெட்டி களனியாக்கும் வரை சுந்தரமும் மனைவியும் கணபதியார் வீட்டிலேயே வாழ்ந்தனர். சுந்தரமும் மனிசியின்ரை தகப்பனுமாய் காட்டை வெட்டி துப்பரவாக்கி, களனியாக மாற்றினார்கள்.

அரசாங்கத்தின் உதவியுடன் வீட்டுக்காணியில் ஒரு சிறிய வீட்டையும் கட்டிக்கொண்டு, அங்கை குடிபோனார்கள். இப்போதும் சுந்தரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியுடன் கணபதியாரிடம் வந்து போனான். ஆனால் மீனாட்சி நினைத்ததை போல கணபதியாருடன் தொடர்ந்து இருந்து அவரை பார்க்க அவனால் முடியவில்லை.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

பகுதி 41 –  https://vanakkamlondon.com/stories/2021/06/116949/

பகுதி 42 –  https://vanakkamlondon.com/stories/2021/06/118039/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More