September 21, 2023 12:29 pm

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 41 | பத்மநாபன் மகாலிங்கம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கோகிலாம்பாள் கொலை வழக்கு

வட மாகாணத்தையே உலுக்கிய மிகவும் வேதனைக்குரிய இந்த நிகழ்வு பரந்தன் விதானையின் நிர்வாக எல்லைக்குள், உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் 1962 ஆம் ஆண்டு இடம்பெற்றது. காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்ட காசிலிங்க சர்மா ஐயர், தனது ஆகம முறைப்படியான கல்வியைப் பெறுவதற்காக இந்தியா சென்றார். அங்கு சமயக்கல்வியை நிறைவாக கற்றதுடன் தனது வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொண்டார்.

பத்தாம் வாய்க்காலில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலின் பிரதம குருவாக பொறுப்பேற்று, மனைவி கோகிலாம்பாளுடன் குடியிருந்து, தமது கடமைகளை திறம்படச் செய்து வந்தார். ஐயர் மக்களுடன் இனிமையாக பேசி, மரியாதையாக பழகி வந்தார்.

திடீரென்று ஒரு நாள் ஐயரைக் காணவில்லை. அவரது மனைவியான கோகிலாம்பாள்ஐயோ, எனது கணவனாரான ஐயரைக் காணவில்லை. அவர் எனக்கு சொல்லாமல் ஒரு இடமும் போனதில்லை.” என்று அழுதபடி ஊர்மக்களிடம் கூறினார். பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக கவலையுடன் வீட்டுக் கடமைகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஐயரின் தகப்பனுக்கு மனம் கேட்குமா? அவர் தமது உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் போய்எனது மகன் இங்கு வந்தாரா? அவரை யாராவது கண்டீர்களா? அவரைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று தேடித் திரிந்து விட்டு மகன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

ஐயருக்கு பன்னிரண்டு வயதில் ஒரு மகளும், அவளின் பின் சில பிள்ளைகளும் இருந்தார்கள். தகப்பனில் உயிரையே வைத்திருந்த அந்த சிறுமி, தகப்பன் காணாமல் போனதிலிருந்து அழுதபடியே இருந்தாள். ஐயரின் தகப்பனார் பிள்ளையார் கோவில் வாசலில் பழியாகக் கிடந்தார். அவர் அன்றிரவு நித்திரை கொண்ட போது அவரது கனவில் மகன் தோன்றிஐயா, நான் மாட்டுக் கொட்டிலுக்கு அருகிலிருக்கும் சாணகக் கும்பிக்குள் கிடக்கிறேன்என்று கூறினார்.

மகனையே நினைத்தபடி தூங்கியதால் அந்த கனவு வந்திருக்கலாம். அல்லது பேர்த்தி சொன்ன சில விடயங்கள் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, சிறுமியை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று கருதி அவ்வாறு சொன்னாரோ தெரியாது. அவரது கனவைப் பற்றி தெரிந்த ஊர் மக்கள் சாணகக் கும்பியைத் தோண்டத் தொடங்கினார்கள். ஒரு அளவில் தோண்ட நாற்றம் தாங்க முடியாத அளவில் இருந்ததால், தோண்டுவதை நிறுத்தி விசயத்தை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தார்கள்.

அப்போது விதானையை பொலிஸ் விதானை என்று சொல்வார்கள். பொலிஸார், விதானையின் நிர்வாக எல்லைக்குள் ஒரு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் விதானையையும் கூட்டி செல்ல வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் (Police Inspector), பதவி நிலையில் உயர்ந்தவராக இருந்த போதும் அந்த ஒழுங்கை கடைப்பிடிக்க எண்ணி, நேரே பெரிய பரந்தனுக்கு வந்து மகாலிங்கம் விதானையாரையும் கூட்டிக் கொண்டு, சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றார்.

இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் (constables) மகாலிங்கம் விதானையாரும் சாணகக் கும்பியை சுற்றி வந்து ஆராய்ந்தார்கள். மணத்திலிருந்து உடல் சாணகக் கும்பியில் இருக்கலாம் என்று தீர்மானித்த இன்ஸ்பெக்டர், விதானையாரையும் இரண்டு பொலிஸாரையும் காவலுக்கு விட்டு விட்டு, தனது மேலதிகாரிக்கும், டீ. ஆர்.. இற்கும், யாழ்ப்பாண நீதிபதிக்கும், பிரேத பரிசோதனை நடத்தும் டாக்டருக்கும் அறிவிப்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.

விதானையாரும் பொலிஸாரும் சாணகக் கும்பியை அவதானிக்கக் கூடிய, மணம் வந்து சேராத ஒரு மரநிழலில் சென்று தங்கினார்கள்.  எப்படியும் நீதவானும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரும் வந்து சேர இரண்டு மூன்று நாட்கள் செல்லும் என்று தெரிந்த அவர்கள் மரநிழல் தான் தங்களுக்கு தஞ்சம் என்று எண்ணினார்கள்.

காலைக்கடன்கள் கழிக்க, குளிக்க இருவரை காவலுக்கு நிறுத்தி விட்டு ஒருவர் மட்டுமே சென்று வர முடியும். ஊர் மக்கள் அன்றிரவே தடிகளாலும் படங்குகளாலும் அந்த மரத்தடியில் ஒரு கொட்டிலை அமைத்து உதவினார்கள். கோவில் பரிபாலனசபையைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி அவர்களுக்கு உதவியாக வந்து தங்கினார்கள். பொன்னம்மா, மகாலிங்கத்திற்கும் பொலிஸாருக்கும் சாப்பாட்டை நேரத்திற்கு நேரம் அனுப்பி வைத்தா. பிரேத மணத்தில் அவர்களால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை.

வெளிநாடுகளில் பிரேதங்களை களவாடிச் சென்று அழிக்கும் சம்பவங்களும் நடந்து இருப்பதால் அவர்கள் மூவரும் பெரும்பாலும் நித்திரை இன்றியே இருந்தார்கள். மூன்றாம் நாள் நீதவானும் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரும் வந்து சேர்ந்தனர். டாக்டருடன் வந்த தேர்ச்சி பெற்ற உதவியாளர்கள் அவதானமாகத் தோண்டி ஐயரின் உடலை வெளிக் கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனை படங்குகளால் மறைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது. ஐயர் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. பரிபாலன சபையினரும் ஊர் மக்களும் “தானுண்டு தன் கடமையுண்டு என்று மிகவும் அன்பாக எல்லோருடனும் பழகி கடமை செய்து வந்த ஐயரை எந்த பாவி வெட்டினானோ” என்று ஏங்கிப் போனார்கள்.

பெரிய பரந்தன் பெண்கள் சந்தையில் அரிசி விற்பதை அறிந்த குஞ்சுப்பரந்தன் பெண்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இப்போது சனிக்கிழமை அதிகாலையில் ஏழு, எட்டு வண்டில்கள் பெரிய பரந்தனில் இருந்து அரிசியுடன் சென்றன.

பெண்கள் தாமே நேரில் நின்று பதமாக நெல்லை அவிப்பதாலும், முறுக விடாமல் காய வைப்பதாலும், மில் நாகலிங்கத்தார் புழுங்கலை சீராக குத்தி கொடுப்பதாலும் பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன் பெண்களின் அரிசி சிறந்ததாக இருந்தது. குஞ்சுப் பரந்தன் பெண்களும் வந்ததால் சந்தையில் இரண்டு கரையிலும் இருந்து கொண்டு வாங்க வருபவர்களுக்கு ஒரு நடை பாதையை இடையில் விட்டு விட்டு இருந்து அரிசி வியாபாரம் செய்தார்கள். பெண்கள் இவர்களிடமே அரிசியை வாங்குமாறு தமது கணவன்மாரைக் கேட்டார்கள்.

பெண்கள் தாங்கள் வழமையாக செய்து வந்த, பனங்கொட்டைகளைப் பொறுக்கி பாத்திபோடும் வேலையை தொடர்ந்து செய்தார்கள். கிழங்கு விழுந்ததும் பாத்தியிலிருந்து பிடுங்கி ஒரு பகுதி கிழங்குகளைப் பிளந்து, காயவிட்டு ஒடியல்களை பெற்றார்கள். இன்னொரு பங்கு கிழங்குகளை அவித்து, பிளந்து கயிற்றில் காயவிட்டு புழுக்கொடியல்களைப் பெற்றார்கள்.

அவித்த கிழங்குகளை துண்டாக்கி உப்புத்தூள், மிளகு தூள் என்பவற்றுடன் கலந்து இடித்து சாப்பிடுவதும் உண்டு. தொடர்ந்து வேலை செய்த அலுப்பு தீர, ஒடியல் மா கூழ் காய்ச்சி உறவுகளோடு சேர்ந்து குடிப்பதும் உண்டு. பிள்ளைகள் மாலை நேரங்களில் இரண்டு புழுக்கொடியல்களுடன் ஒரு தேங்காய் சொட்டையும் சேர்த்து கடித்து சாப்பிடுவார்கள்.

பொம்பிளையள் தமது கடன் முழுவதையும் கொடுத்து விட்டார்கள். இப்போது வீட்டு செலவை அவர்களே பார்த்தனர். ஆம்பிளையள் தமது வயல்களை திருத்தி அவற்றிலிருந்து ஓரளவு பயன் பெற தொடங்கி விட்டார்கள்.

விவசாயப்பகுதி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, கொல்லன் ஆற்றையும் நீலன் ஆற்றையும் ஆழப்படுத்தி, வயல்களிலிருந்து நீரை வெளியேற்றும் கழிவு நீர் வாய்க்கால்களையும் ஆழப்படுத்தினால் மேற்படையில் படிந்திருக்கும் உப்பு, இரண்டு மாரி மழையில் கரைந்து ஆற்றின் வழியே செல்ல, வயல்கள் பழைய படி திருந்தி விடும் என்றனர். கழிவு நீர் வாய்க்கால்களை ஆழப்படுத்திய ஊரவர்களால் மனிதவளம் போதாமையாலும் இராட்சத இயந்திரங்கள் இல்லாமையாலும் ஆறுகள் இரண்டையும் ஆழப்படுத்த முடியவில்லை.

மணியும் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் சேர்ந்தாள். இரண்டு தமயன்மாரும் அங்கு கற்றதால் அனுமதி பரீட்சை தேவைப்படவில்லை. நாதன் ‘டிசெம்பர்’ (december) மாதம் க.பொ.த. (சா.தரப்) பரீட்சையை எழுதி விட்டு ‘றிசல்ட்’ டுக்காக (result) காத்திருந்தான்.                                                                                  

தெய்வானை பெரிய கோவில்களின் திருவிழாக்களின் போது கடலை விற்ற காசை சேமித்து, வில்லூன்றி பிள்ளையார் கோவில் காணியின் ஒரு பகுதியை, நிர்வாகம் பிரித்து சைவ மக்களுக்கு விற்ற பொழுது ஒரு பரப்பு காணியை வாங்கி, இரண்டு அறைகளுடன் விறாந்தை உள்ள ஒரு வீட்டை கட்டிக்கொண்டா.

கமலாவிற்கு இராணுவத்தின் தொண்டர் படைப்பிரிவில் இருந்த கந்தசாமியை திருமணம் பேசி, அவர் பொம்பிளை பார்க்க வந்த போது, கமலா அவரிடம் “அம்மா, எங்களுடன் தான் இருப்பா. உங்களுக்கு சம்மதமா? ஒத்துக்கொள்பவரை தான் திருமணம் செய்கிறதாய் இருக்கிறேன்.” என்று சொல்ல, கந்தசாமி “நான் சின்ன வயசிலையே அம்மா அப்பாவை இழந்தவன். மாமியை என்ரை சொந்த அம்மாவைப் போலை பார்ப்பேன்” என்று சொல்ல, கல்யாணம் நடந்து அவர்கள் மூவரும் புதிய வீட்டில் குடியேறினார்கள்.

கமலா தாயாரிடம் “அம்மா, நீங்கள் கடலை வறுத்து நெருப்பு குடிச்சது போதும். நானும் இவரும் வேலை செய்கிறோம். இனி நீங்கள் ஆறுதலாக எங்களுக்கு துணையாக இருந்தால் போதும்” என்று கூறி தெய்வானை கடலை விற்பதை தடுத்து விட்டா.

மகாலிங்கம் இரண்டு அறைகள், ஒரு சமையல் அறை, விறாந்தை உள்ள வீட்டை முற்பணம் கட்டி வாடகைக்கு, எடுத்து சின்னாச்சியுடனும், தவத்துடனும் பிள்ளைகளை அங்கு தங்கி இருந்து பாடசாலை செல்ல வைத்தார். அந்த வீடு தனி வளவில், மின்சார வசதியுடன் இருந்தது. வாடகையை மகாலிங்கமே கட்டினார். வழக்கு நடந்த போது மகாலிங்கமும் பொன்னம்மாவும் அந்த வீட்டிலேயே தங்கினார்கள்.

ஐயரின் கொலை வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஒரு மாதம் அளவிற்கு நடந்தது. மகாலிங்கத்திற்கு சாட்சி சொல்வதற்காக ஒரு மாதம் கடமை லீவும், அரச உத்தியோகத்தர் என்றபடியால் ‘பட்டாவும்’ வழங்கப்பட்டது. (bat’ta—> an allowance to officers in addition to their ordinary pay).                                                                          விதானை வேலை என்பது நேரம், காலம் பார்க்காமல் மக்களின் தேவையைப் பொறுத்து இருபத்தினாலு மணித்தியாலமும் வேலை செய்ய வேண்டிய உத்தியோகம். வழக்கு முடியுமட்டும் மகாலிங்கம் ஏனைய உத்தியோகத்தர்கள் போல காலை எட்டு மணிக்கு நீதிமன்றம் போய், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து, சென்று, மீண்டும் ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தார். 

அப்பாவியான ஐயரை, அவருடன் பதின்நான்கு வருடம் வாழ்ந்த மனைவி, மாடு பார்க்க வந்து சேர்ந்தவனுடன் சேர்ந்து இரவு படுக்கையிலேயே வெட்டி கொலை செய்து, சாணக கும்பியில் புதைத்த, பரிதாபம் நிறைந்த வழக்கு அது. தாய்க்கு எதிராக அவளே பெற்ற மகளான சிறுமி சாட்சி சொன்ன சோகமான வழக்கு. ஐயரிடம் வேலை செய்த மற்றொரு வேலைகாரனும் உடந்தை என்று கூறப்பட்ட போதும், அவன் தன்னை பயமுறுத்தி ஐயரை புதைப்பதற்கு பயன்படுத்தினார்கள் என்று விசாரணையின் போது சொல்லி, ‘அப்புரூபர்’ ஆக மாறி (approver) சாட்சி சொன்னான்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த ‘ ஈழநாடு’ தினசரி பத்திரிகை, இந்த வழக்கு காலத்தில் காலை, மாலை என இரண்டு பதிப்புகள் வெளிவந்தன. மக்கள் உடனுக்குடன் விசாரணை விபரங்களை அறிய பத்திரிகைகளை தேடி அலைந்தார்கள்.

அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு சினிமா படம் திரையிடப்பட்டால், உடனேயே படத்தின் கதையின் முற்பாதியை எழுதி மிகுதி வெள்ளித்திரையில் என்று போட்டு ஒரு சிறிய புத்தகம் வெளிவரும். படத்தின் பாடல்கள் முழுவதும் அந்த புத்தகத்தில் இருக்கும். பஸ் ஸ்ராண்டில் (bus stand) அந்த புத்தகத்தைக் கூவி, கூவி விற்பார்கள்.

கோகிலாம்பாள் கொலை வழக்கு விபரமும் ஒவ்வொரு நாள் விசாரணை முடிய சூட்டோடு சூடாக சிறிய புத்தகமாக வெளிவர, அதையும் “கோகிலாம்பாள் கொலை வழக்கு, இன்றைய விசாரணை விபரம்” என்று கூவி கூவி விற்றார்கள்.

வைரமாளிகை (Diamond house) என்ற நகைக்கடை உரிமையாளர்கள், ஒரு உயரமான மனிதரை நடமாடி விளம்பரம் செய்பவராக நியமித்து, அவருக்கு நீல நிறத்தில் முழங்கால் வரை நீளமான நஷனல் ஒன்றைக் கொடுத்து, வைரமாளிகை…. Diamond house என்ற பெயர் எழுதிய பட்டியை குறுக்காக கட்ட வைத்தனர். அவர் வைரமாளிகை விளம்பரத்தை செய்ததுடன், தினசரி பேப்பர்களையும், வழக்கு விபரம் வெளிவந்த புத்தகங்களையும் விற்றார், அந்த விற்பனையுடன் அவரும் பிரபலமாகி விட்டார்.

ஐயரின் மகளினதும் வேலைக்காரனினதும் வாக்குமூலங்களும், கோவில் பரிபாலனசபையினரின் சாட்சியமும் கோகிலாம்பாள் குற்றவாளி என நிரூபித்தன. ஐயரை இரவு வெட்டி, புதைத்து விட்டு அறையை ஐயரின் மனைவி அதிகாலையில் கழுவியிருந்தாள். தரை ஈரமாக இருந்தது.

நித்திரையாலை எழும்பி வந்த மகள் “என்ன அம்மா, வீடு கழுவியிருக்கு. என்ன சுவரில் சிவப்பாயிருக்கு” என்று கேட்க, “அதொண்டுமில்லை. நீ, போய் முகம் கழுவிக்கொண்டு வா” என்று கலைத்து விட்டு, தவற விட்ட சுவரையும் கழுவிய செய்தியையும், தகப்பனைக் காணாது மகள் தொடர்ந்து அழுதபடி இருந்ததைக் கண்டு கோபமடைந்த தாய் “கொப்பர், சாணக கும்பிக்குள் கிடக்கிறார், போய்ப்பார்” என்று கோபத்தில் வாய் தடுமாறி கூறியதையும் பிள்ளை தெளிவாக நீதிபதியியின் முன்னால் கூறினாள்.  

வேலைக்காரன் “நான் நல்ல நித்திரை, மாடு மேய்ப்பவன் சாமத்தில் வந்து, ஐயரை சாணக கும்பியில் புதைக்க வேணும் வா.” என்று கேட்டதையும், தான் மறுத்த போது “ஐயருக்கு நடந்தது தான் உனக்கும் நடக்கும்” என்று வெருட்டியதாகவும் கூறினான்.

வழக்கறிஞர் “எப்படி ஐயரை புதைத்தீர்கள்” என்று கேட்டபோது, அவன் “மாடு மேய்ப்பவனும் அம்மாவும் ஐயரை படுத்த பாயினால் சுத்தினார்கள். அவன் தலை மாட்டில் பிடிக்க, நான் கால் மாட்டில் பிடித்து தூக்கினம். அவன் முதலே சாணக கும்பியில் வெட்டி வைத்திருந்த குழியில் போட்டோம். அவன் குழியை மூடினான். மூடினாப்பிறகு ‘நீ, இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது. சொன்னால் நீயும் சேர்ந்து தான் வெட்டினது எண்டு நான் சொல்லுவன்’ எண்டு வெருட்டினான்” என்று பதில் சொன்னான்.

மகாலிங்கமும் பொலிசாரும் ஒரு மாதமாய் போய் வந்த போதும் ஒரு நாள் தான் அவர்களை விசாரித்தார்கள். வழக்கறிஞர், மகாலிங்கம் சத்தியப்பிரமாணம் எடுத்ததும் “உமது பெயர் என்ன? என்ன வேலை பார்க்கிறீர்?” என்று கேட்க, மகாலிங்கம் “ஐயா, எனது பெயர் மகாலிங்கம். நான் சம்பவம் நடந்த பகுதியின் விதானையாய் இருக்கிறன்” என்றார்.

அதைத் தொடர்ந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் தன்னை சம்பவ இடத்திற்கு கூட்டி சென்றதையும் இரண்டு பொலிஸாருடன் தானும் காவலாக நின்றதையும் கூறியதும் விசாரணை முடிந்தது.   நீதவான் “கோகிலாம்பாளும் மாடு மேய்ப்பவனும் தான் குற்றம் செய்தவர்கள் என்று சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கோகிலாம்பளுக்கு பெண் என்பதால் ஆயுள் கால சிறைத்தண்டனை வழங்கப்படும். மாடு மேய்ப்பவனுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.” என்று தீர்ப்பளித்தார்.

வேலைக்காரனை எச்சரித்து விடுதலை செய்தார். பொடியங்கள் “இந்த ஒரு நாள் விசாரணைக்காக தானா ஒரு மாதம் கடமை லீவும் ‘பட்டாவும்’ ” என்று கேட்க, பொன்னம்மா “டேய், கொப்பர் இவ்வளவு நாளும் பட்டபாடு உங்களுக்குத் தெரியாது. ஐயரை வெட்டினவனுக்கு தூக்கு தண்டனையும் அவளுக்கு ஆயுள் தண்டனையும் எண்ட தீர்ப்பு வந்த பிறகு தான் அவருக்கு கொஞ்சம் நிம்மதி. பாவம் நித்திரை இல்லாமல் தவித்துப் போனார்” என்றா.

கணவனுக்கு துரோகம் செய்து, பிடிபட்டதும் கொலை செய்வித்து, இந்தியாவில் வறுமையில் வாடிய தன்னை கலியாணம் செய்து, தனக்கொரு உன்னதமான வாழ்க்கையை கொடுத்த ஐயரை தனது தவறான நடத்தையால் ஈவிரக்கம் இன்றி கொலை செய்வித்த பாவிக்கு கிடைத்த தண்டனை உலகத்திற்கு என்றும் ஒரு பாடமாக இருக்கும்.

(பின் குறிப்பு: ஆயுள் தண்டனை முடிந்து வெளியில் வந்த கோகிலாம்பாளை ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை. சில நாட்கள் அலைந்து திரிந்தாள், பின்பு இந்தியா போய்ச் சேர்ந்தாள்.)

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்