தஸ்றத் மஞ்சி (Dashrath Manji) என்பவர் ஒரு வரலாறு படைத்த மனிதர். அவர் இந்தியாவில் சொந்த நிலமற்ற ஒரு ஏழை மனிதர். அவரது கிராம மக்கள் வைத்தியம் செய்வதாயின், ஒரு சிறிய மலையின் மறு பக்கத்தில் இருக்கின்ற, வசீர்கஞ்ஜ் (Wazirganj) என்ற இடத்திற்கு, மலைப் பாறைகள் நிறைந்த ஒற்றையடிப் பாதையால், மலையை சுற்றி செல்ல வேண்டும். ஒரு நாள் அவரது மனைவி பல்குனி தேவி (Falguni Devi) காயமடைந்தார். மஞ்சி அவரை தூக்கிக்கொண்டு மலையை சுற்றி பாறைகளூடாக சென்றார். வைத்தியரிடம் உரிய நேரத்தில் போகாமையால் பல்குனி தேவி இறந்து விட்டார்.
மனைவியை இழந்த தசரத் மஞ்சி மலைப் பாறைகளை உடைத்து மலையினூடாக 360 அடி நீளமான ஒரு பாதையை செதுக்க முனைந்தார். ஊர் மக்கள் “ஏழையான மஞ்சி, உழைத்து சாப்பிட வேணும், எப்படி பாதையை அமைப்பார்?” என்று கூறினார்கள். தன்னிடமிருந்த மூன்று ஆடுகளையும் விற்ற மஞ்சி, 1960 ஆம் ஆண்டு ஆரம்பித்து 22 வருடங்கள் சாதாரண சுட்டியலையும் (Hammer), உளியையும் (Chisel), கடப்பாரையையும் (Crowbar) வைத்துக்கொண்டு, அரசாங்கம் போட்டு தருவதற்கு மறுத்த பாதையை, தனி மனிதனாக அமைத்து முடித்தார். மனைவியை இழந்த வேகத்தில் ஆரம்பித்த பாதை வெட்டும் முயற்சியில் பல முறை பாறை உடைந்த கற்கள் விழுந்து காயம் அடைந்தார்.
தனக்கு ஏற்பட்ட இழப்பு போன்று கிராமத்தில் மற்றவர்களுக்கும் வந்து விடக்கூடாது என்ற எண்ணம் தான் மஞ்சியை அந்த அசாதாரண செயலை செய்ய தூண்டியது. தனி மனிதன் கூட தான் செய்யும் செயலில் நம்பிக்கையுடன் ஈடுபட்டால் வெற்றியடையலாம் என்பதற்கு மஞ்சி உதாரண புருஷனானார். மஞ்சியின் முயற்சியால் கிராம மக்கள் எல்லாரும் பயனடைந்தனர்.
மகாலிங்கத்தாருக்கு கூப்பன்கள் கொடுத்தல், வாக்காளர் இடாப்புகள் பதிதல் போன்ற சந்தர்ப்பங்களில் பொன்னம்மாவும் உதவிக்கு போவா. மணியும், சுந்தரும் சில நேரங்களில் கூட செல்வார்கள். நாதனும் நாபனும் லீவில் நின்றால் தகப்பனது இந்த வேலைகளில் மகிழ்ச்சியாக பங்குபற்றுவார்கள். இலங்கையில் மக்கள் அனைவருக்கும் கூப்பன் கொடுக்கும் முறை இருந்தது. கூப்பன் இருந்தால் சிலவேளைகளில் இலவசமாகவும் மற்ற நேரங்களில் கட்டுப்பாட்டு விலையிலும் சங்க கடைகளில் அரிசி முதலிய அடிப்படை சாமான்களை வாங்க முடியும்.
கூப்பன்கள் கொடுக்கும் போது டீ. ஆர். ஓ. கந்தோரில் எடுத்த கூப்பன்களின் தொகையும், மக்களிடமிருந்து பெற்ற பழைய கூப்பன்களின் அடிக்கட்டைகளின் எண்ணிக்கையையும் குழந்தைகளுக்கு புதிதாக கொடுத்த கூப்பன்களுக்கான பிறப்புசான்றிதழ்களின் எண்ணிக்கையையும் கூட்டி வாற தொகையும் சமனாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முதல் முதல் கூப்பன் கொடுப்பதற்கு பிறப்பு சான்றிதழ் பெற வேண்டும். இலங்கை பிரஜா உரிமை இல்லாதவர்களுக்கு வேறு நிறத்தில் வழங்கப்படும் கூப்பன்களையும் அவ்வாறே சரிப்படுத்த வேண்டும். மக்களுக்கு அவர்களின் அருகில் இருக்கும் சங்க கிளையில் எடுக்க கூடியதாக பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கிளைக்கும் எவ்வளவு கூப்பன்கள் ஒதுக்கப்பட்டது என்ற தொகையையும் டீ. ஆர். ஓ. கந்தோருக்கு கொடுக்க வேண்டும்.
மகாலிங்கத்திற்கு கணக்குகளை சரி பார்க்கிற பொறுமை இல்லை. பொன்னம்மா நாட்கணக்கில் நித்திரை முழித்து எல்லா கணக்குகளையும் சரி பார்த்து எழுதி வைக்க, மகாலிங்கம் கண்களை மூடிக்கொண்டு கையெழுத்தை போட்டு, பதவி முத்திரை பதித்து, டீ. ஆர். ஓ. கந்தோரில் கொடுத்து விடுவார். கிளிநொச்சி கிராம சேவையாளர் பிரிவில் சனத்தொகை கூடுதலாக இருந்த போதும், பொன்னம்மாவின் உதவியால் மகாலிங்கம் உரிய நேரத்தில் கூப்பன் கணக்கை சமர்ப்பித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்.
குடும்பம் முழுவதும் அவரோடு இருப்பதால், கணபதியார் முன்பு போல சாதாரண நிலைக்கு வந்து விட்டார் என்றே தோன்றியது. மீனாட்சியை இழந்ததால் அவர் தனிமையில் தவிப்பது வெளிப்பார்வைக்கு தெரியவில்லை. கணபதியார் காலமைகளில் முகம் கழுவி திருநீறு பூச, பொன்னம்மா தேநீருடன் வந்து நிற்பா.
அவருக்கு காலமை பழஞ்சோற்றை குழம்புடன் குழைத்து சாப்பிட விருப்பம் என்பதால், பொன்னம்மா முதல் நாள் சோறு முடிந்திருந்தால், திரும்பவும் இரவு சோறு காய்ச்சி ஆறிய பின் தண்ணீர் ஊற்றி வைத்து, முதல் நாள் குழம்பிலும் கொஞ்சம் வைத்திருப்பா. மத்தியானம் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முதல், இரண்டு துண்டு மீன் பொரியல்களையும் இரண்டு மீன் துண்டுகளுடன் சிறிது குழம்பையும் எடுத்து வைத்திருப்பா.
“அப்புக்கு ஏன் ஸ்பெஷல் கவனிப்பு அம்மா?” என்று நாபன் விளையாட்டாகக் கேட்டால், பொன்னம்மா “டேய், அவர் இராச வாழ்வு வாழ்ந்த மனிசனெடா. அவரை கவனமாய் பார்க்கோணும்.” என்று உணர்ச்சியுடன் சொல்லுவா.
கோவில் காணியில், பிள்ளையார் கோவிலுக்கும் காளி கோவிலுக்குமிடையில், கூத்து வெட்டைக்கு கிழக்கே ஒரு புட்டி காணி இருந்தது. அதை தோட்டக்காணியாக மாற்ற கணபதியார் நினைத்தார். தானே தனிய காட்டில் போய் அலம்பல்களை வெட்டினார். வண்டிலைக் கொண்டு போய் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வந்தார். அந்த காணியின் நான்கு பக்கங்களிலும் அலம்பல் வேலி அமைத்தார். அந்த அடைப்புக்குள் இரவில் மாடுகளை அடைத்தார். ஓரளவு எரு சேர்ந்ததும் காணியை எருதுகளால் நன்கு உழுதார். காணிக்குள் ஒரு கேணியை வெட்டினார். அப்போது பெய்த மழையால் கேணி தண்ணீரால் நிரம்பியது.
கால போகம் இல்லாத, மூன்று நான்கு மாதங்களாக “அப்பு என்ன செய்கிறார்?” என்று பார்க்க நாதனும் நாபனும் சுந்தருடன் ஒரு நாள் போனார்கள். வேலி ஒழுங்காக அடைக்கப்பட்டு, காணி இரண்டு மூன்று முறை உழுது பண்படுத்தப்பட்டிருந்தது. அவர் வெட்டிய கேணியில் தண்ணீர் நிரம்பியிருந்தது.
வழமையாக வயல் விதைக்கும் போது வயல்களுக்கிடையில் அங்கங்கே இருக்கும் புட்டிகளில் பெரிய பரந்தன் மக்கள் தோட்டம் செய்வார்கள். வயலில் இருந்து தண்ணீரை இறைத்து விடுவார்கள். “அப்பு புட்டி காணிக்குள்ளை தோட்டம் செய்ய நினைக்கிறீங்கள். மழை பெய்ததாலை கேணியில் தண்ணி நிக்குது. மழை பெய்யாட்டில் தண்ணிக்கு என்ன செய்வீங்கள்?” என்று நாதன் கேட்க, கணபதியார் சிரித்தபடி “நீ அடுத்த முறை வந்து பாரன்.” என்று நம்பிக்கையோடு சொன்னார்.
நாதனும் நாபனும் லீவு முடிய தாங்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு போய் விட்டார்கள். கணபதியார் கொல்லானாற்றிலிருந்து கோவில் காணி வரையுள்ள அரை மைல் தூரத்திற்கு பெரிய வாய்க்காலை வெட்ட எண்ணி தனி மனிதனாகவே வெட்டத் தொடங்கினார்.
ஊரவர்கள் உதவி செய்யப் போன போது, “நீங்கள் உங்கடை வேலையளை பாருங்கோ. நான் என்னாலை ஏலுமான அளவுக்கு வெட்டுறன்.” என்று தடுத்து விட்டார். ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வெட்டி வாய்க்காலையும் வெட்டி விட்டார். ஆனால் தண்ணீர் வாய்க்காலில் வரவில்லை. ஆற்றில் அணை கட்ட நினைத்தார். முன்பு இடைப்போகம் விதைத்த காலத்தில் வெட்டிய வாய்க்கால்களும் அணைக்கட்டுகளும் கடல் வெள்ளம் வந்த போது அழிந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.
‘முன்பு பள்ளமான வயல்களுக்கு தான் தண்ணீர் பாய்ச்சினவை. இப்போது ஒரு புட்டி காணிக்கு தண்ணி கொண்டு போக வேணும், அணையை உயரமாக கட்ட வேணும்.’ என்று கணபதியார் நினைத்தார். சாக்குகளைக் கொண்டு போய் மண் நிரப்பி ஒவ்வொரு சாக்காக தனியே இழுத்து கொண்டு போய் அடுக்கி அணையை கட்டத் தொடங்கினார். இரண்டு கரைகளிலும் உயரமாக மண்சாக்குகளை அடுக்கி, நடுவே கொஞ்சம் பதிவாக ஒரே மட்டத்தில் அடுக்கி மேலதிகமான தண்ணீரை தொடர்ந்து போக விட்டார்.
ஒரு மாத முயற்சியால் ஆற்றிலிருந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடி கேணியை நிரப்பியது. “மீனாட்சி இருந்த போது அவருடன் கதைத்து பொழுதை போக்குகின்ற கணபதியார், தனிமையை மறக்க இந்த பெரிய செயலை செய்திருக்கிறார்” என்று ஊர் மக்கள் நினைத்தார்கள்.
அடுத்த லீவுக்கு வந்த நாபன் சுந்தருடன் சென்று பார்த்த போது ஆற்றிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. வாய்க்காலின் இரு கரையிலும் மாடுகள் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. வாய்க்காலிலிருந்து கேணிக்குள் தண்ணீர் பாயும் இடத்தில் ஐந்தாறு கப்புகளை நட்டு குறுக்காக வரிச்சும் கட்டியிருந்தார். கோவிலுக்கு வரும் சிறுவர்களோ, மாடுகளோ கேணிக்குள் விழுந்து விடாதிருக்க அந்த முயற்சி. தோட்டத்திற்குள் கணபதியார் இரண்டு கைகளிலும் இரண்டு பனை ஓலை பட்டைகளில் தண்ணீர் ஏந்தி பயிர்களுக்கு ஊற்றிக் கொண்டிருந்தார்.
வேலிக்கு வெளியே நின்று பார்த்த நாபன், ‘நடக்க மாட்டாமல் இருந்த பேரன், தன்ரை தேவைகளை நிறைவேற்ற நடந்தால் போதும் என்று எல்லாரும் நினைத்த பேரன், இவ்வளவு செய்திருக்கிறாரே’ என்று நினைத்து திகைத்து விட்டான்.
காணியில் ஒரு பக்கம் மரவள்ளி தடிகளை நட்டு, அவை செழிப்பாக வளர்ந்திருந்தன. இன்னொரு பக்கம் கத்தரிச் செடிகள், மிளகாய் செடிகள், பாவல் பந்தல்கள், புடோல் பந்தல்கள் எல்லாவற்றிலும் காய்கள் தொங்கின. வேலியில் சுரைக்காய் கொடிகளும் பிசுக்கங்காய் கொடிகளும் தொங்கின. நிலத்தில் பூசனிக்கொடிகளும் வர்த்தகை கொடிகளும் வெள்ளரி கொடிகளும் படர்ந்திருந்தன.
நாபன் ஆச்சரியத்துடன் பார்ப்பதைக் கண்டு விட்டு, காணிக்கு முன் வீட்டிலிருந்த முத்தர்கணபதி வீட்டை விட்டு வெளியில் வந்து, “என்ன தம்பி மலைச்சுபோய் நிக்கிறாய், எல்லாம் அப்புவின்ரை உழைப்பு தான். எல்லாருக்கும் சும்மா தான் காய்கறி குடுக்கிறவர்.” என்றார்.
“என்ன அப்பு, நானும் கூட வந்து தோட்ட வேலை செய்யட்டுமா?” என்று நாபன் கேட்க, “நீ போய் தியாகர்வயலில் தோட்டத்தைச் செய். என்ரை தோட்டத்துக்குள்ளை வராதை” என்று கொடுப்புக்குள்ளை சிரித்தபடி சொன்னார்.
அவருக்கு, தோட்டம் செய்ய நாபன்ரை முதுகு வளையாதெண்டு நல்லாய் தெரியும். கணபதியார் காலையில் பாடசாலை செல்லும் கந்தையரின் பிள்ளைகளிடம் தனது வீட்டிற்கும் காய்கறி கொடுத்து விடுவார். தோட்டவேலை செய்வதிலும், காய்கறிகளை இலவசமாக எல்லாருக்கும் கொடுப்பதிலும், கோவில்பூசை செய்வதிலும் அவரது பொழுதுகள் போயின. மீனாட்சி இறந்த பின்னர் ஒரு வருடத்திற்கு அவர் கோயிலுக்கு செல்லவில்லை.
அன்று காலமை சாப்பிட்டு விட்டு தோட்டத்திற்கு போன கணபதியார் மத்தியான சாப்பாட்டுக்கு வரவில்லை. தான் போய் சாப்பிட்ட பிறகு தான் பொன்னம்மா சாப்பிடுவா என்று தெரிந்தபடியால் அவர் என்ன வேலையிருந்தாலும், அவற்றை விட்டு விட்டு வீட்டிற்கு வந்து விடுவார்.
பொன்னம்மாவிற்கு ஏதோ வித்தியாசமாகப்பட்டது. கமத்தில் வேலை செய்யும் பொடியனை பார்த்து வரும்படி அனுப்பினா, நீண்ட நேரமாக அவனை காணவில்லை. மத்தியான சாப்பாட்டுக்கு வந்த றைவரை அனுப்பினா, அவனும் திரும்பி வரவில்லை.
மணியை வீட்டை பார்க்க சொல்லிவிட்டு பொன்னம்மா தானும் கணபதியாரைத் தேடிப் போனா. பொன்னம்மா தேடுவதைக் கண்ட முத்தர்கணபதியின் பிள்ளைகளும் கந்தையரின் பிள்ளைகளும் தியாகர் வயல், கோயிலை சுற்றியுள்ள பற்றைகள் எல்லா இடமும் தேடிப் பார்த்தார்கள்.
மீனாட்சி இறந்தநாள் தொடக்கம் அவர் வேட்டைக்கு போவதை நிறுத்தி விட்டார். இருந்தாலும் பொன்னம்மா வடக்கு காட்டிலும் தேட வைத்தா. சங்க கடைக்கு சாமான்கள் வாங்க போட்டு வந்த முத்தர்கணபதி “நான் சங்க கடைக்கு போகேக்கை தண்ணி இறைச்சுக்கொண்டு நிண்டவர் அதுக்கிடையிலை எங்கை போனவர்?” என்று யோசனையோடு சொன்னார்.
அயலிலுள்ள ஒரு பெண் “பதினொரு மணிக்கு நான் வந்து காய்கறி வாங்கிக்கொண்டு போனேன், அப்ப நல்லாய் தானே இருந்தவர்.” என்றா. பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு மணியும் வீட்டை பூட்டிக்கொண்டு வந்து விட்டாள். கமத்தில் வேலை செய்யும் பொடியன் “தண்ணி இறைக்கும் போது கேணிக்குள் விழுந்து விட்டாரோ?” என்றான். நீந்தக்கூடிய இருவர் கேணியில் இறங்கி தேடினார்கள். அங்கும் கணபதியார் இல்லை.
பொன்னம்மா நெருக்கமாக நின்ற கத்தரி செடிகளூடாக நடந்து சென்று கூட்டமாக சடைச்சு இருந்த மரவள்ளிகளைப் பார்த்தா. மரவள்ளிகளுக்கிடையில் கிடந்த ஒரு பட்ட பாலை மரக்குற்றியில் கணபதியார் சாய்ந்து படுத்திருந்தார். “மாமா மரவள்ளி நிழலில் படுத்திருக்கிறார்.” என்று பொன்னம்மா சொல்ல, மரவள்ளிக்கூடாக போன பொடியன், “அப்பு மயங்கிப் போனார்.” என்று கத்தினான்.
அவனைத் தொடர்ந்து ஓடிப்போன முத்தர்கணபதி அப்புவின்ரை கைநாடியை பிடித்துப் பார்த்தவர் “அண்ணை எங்களை விட்டிட்டு போயிட்டார்.” என்று நா தழுதழுக்க கூறினார். அவர் சொல்லி முடிக்கவில்லை, எல்லோரும் சத்தமிட்டு கத்தினார்கள். பொன்னம்மா “மாமா, மாமா நான் அவருக்கு என்னெண்டு சொல்லுவன்.” என்று வாய் விட்டு அழ, மணி கதறி அழுதாள்.
அழுகைச் சத்தம் கேட்டு கணபதியாரின் தம்பிமாரான பேரம்பலமும் நல்லையாவும் ஓடி வந்தார்கள். மைத்துனர்களான வல்லிபுரமும் கந்தையாவும் விரைந்து வந்தார்கள். பேரம்பலம் தலையில் அடித்து “அண்ணை, அண்ணை, எங்களை விட்டிட்டு போட்டியளோ?” என்று அழுதார்.
கந்தையர், தன்னை சிறு வயதில் கூட்டி வந்து நல்ல வாழ்வு தந்த அத்தான் போய் விட்டாரே! என்று குலுங்கி குலுங்கி அழுதார். ஏனையவர்கள் கண்ணீர் வழிய நின்றிருந்தார்கள். முத்தர்கணபதி இரண்டு இளைஞர்களிடம் “உடனை போய் மகாலிங்கத்திற்கும் சுந்தருக்கும் சொல்லி கூட்டி வாருங்கள்.” என்று சொல்லி அனுப்பியவர், கணபதியண்ணையுடன் தான் சிறு வயதில் வரம்புகளில் ஓடி விளையாடி கிளிகளை கலைத்ததையும், அவர் எல்லாரோடையும் அன்பாக பழகியதையும், தன்னோடு அவர் மனம் விட்டு கதைப்பதையும், ஊரை முன்னேற்ற பாடுபட்டதையும், இப்பவும் தோட்டம் செய்து காய்கறிகளை சும்மா குடுப்பதையும் நினைத்தவர் அவரது இழப்பை தாங்கமுடியாது தவித்தார்.
மகாலிங்கத்திடம் போனவன் உதவிக்கு நின்ற பிள்ளையை கூப்பிட்டு விசயத்தை சொன்னான். பிள்ளை விதானையாருக்கு கிட்ட போய் “ஐயா, அப்பு போட்டாராம்.” என்று கண்ணீர் மல்க சொன்னாள். மகாலிங்கம் “ஐயோ, என்ரை ஐயாவுக்கு என்ன? காலமை நான் வரேக்கை நல்லாய் தானே இருந்தவர்?” என்று பதட்டப்பட்டார்.
அவரிடம் அலுவலாக வந்து நின்ற, அவரின் காரை திருத்தும் ‘மெக்கானிக்’, “ஐயா, நீங்கள் ஏறி இருங்கோ, நான் காரை ஓடுறன்.” என்று சொல்லி காரை ஓட்டி சென்றான். தபாற்கந்தோர் சந்தியில் ஒழுங்கையால் திருப்பி காரை விடும் படி கூறி, கார் நின்றதும் தகப்பனின் தோட்டத்தை நோக்கி ஓடினார்.
இளைஞன் வந்து சொன்னதும் உதவியாளனிடம் சங்க கடையை ஒப்படைத்து விட்டு, நாதன்ரை காரில் ஏறி பெரிய பரந்தனை அடைந்த சுந்தரைக் கண்டதும் மணி ஓடி வந்து கட்டிப்பிடித்து “அப்புக்கு எங்களை விட்டிட்டு போக என்னெண்டு மனம் வந்தது?” என்று சொல்லி அழுதாள்.
தோட்டத்திலிருந்து கணபதியார் வீட்டுக்கு சென்ற இளைஞர்கள் ஒரு பெரிய பந்தலை போட்டார்கள். ரக்டர் பெட்டியில் படங்கை மடித்து விரித்து, அதன் மேல் பாய் போட்டு, ஒரு வேட்டியை மேலே விரித்து, பேரம்பலமும் சுந்தரும் இன்னும் இருவரும் கணபதியாரை ரக்டர் பெட்டியில் தூக்கி வைக்க, தகப்பனுக்கு வெயில் படாமல் இருக்க போர்வையால் மூடி, றக்டர் அவரை குலுக்கி விடாதிருக்க அவதானமாக மகாலிங்கம் ஓட்டி வந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வந்த படியே இருந்தது.
வல்லிபுரம் சுந்தரைக் கூப்பிட்டு “பொடியங்களுக்கு உடனே தந்தியை அடித்துவிடு” என்று கூற, சுந்தர் ஓடிப்போய் குஞ்சுப்பரந்தன் தபாற்கந்தோரில் நாதனுக்கும் நாபனுக்கும் தந்தி அடித்துவிட்டு வந்தான். கொழும்பு அலுவலகத்தில் தந்தி கிடைத்த உடனே, சக உத்தியோகத்தர்கள் முன் சத்தமிட்டு அழமுடியாத நாதன், துயரத்தை அடக்கிக் கொண்டு லீவு போட்டுவிட்டு, இரவு மெயிலில் பரந்தன் போவதற்கு இரண்டு ‘ரிக்கேற்’ (Ticket) பதிவு செய்து விட்டு இந்திராவிற்கு சொல்வதற்காக வெள்ளவத்தையில் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றான்.
நாபனுக்கு தந்தி பாடசாலை விலாசத்திற்கு வந்து சேர்ந்தது. அவன் கண்ணீருடன் அதிபருக்கும் சக ஆசிரியர்களுக்கும் சொல்லி, லீவும் எடுத்துக் கொண்டு நான்கு மணியளவில் உயிலங்குளத்திற்கு வந்த வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பஸ்சில் ஏறி, ஏழு மணியளவில் பரந்தனில் இறங்கி விட்டான்.
மன்னாரில் இருந்த தங்கும் அறைக்கு போகாமல் பள்ளிக்கூடத்திலிருந்து நேரே வந்ததால் ‘ரவெல்லிங் பாக்’ எதுவும் கொண்டு வரவில்லை. பரந்தனில் கிடைத்த வாகனத்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் மகாலிங்கம் “தம்பி, அப்பு எங்களை விட்டிட்டு போட்டாரடா.” என்று சொல்லி ஓடி வந்து கட்டிப் பிடித்து அழுதார். பொன்னம்மாவும் வந்து மகனை மற்றப்பக்கத்தில் அணைத்தபடி அழுதா.
பேரனுக்கு பக்கத்தில் போய் அவரின் கையை பிடித்தபடி முழங்காலில் இருந்த நாபன் அவரது முகத்தை பார்த்தான். முகம் சலனமற்று தெளிவாக இருக்க, நாபனுக்கு அவர் தன்னைப் பார்த்து கொடுப்புக்குள்ளை சிரிப்பது போல இருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட துடைக்காது ‘பேரன் தனக்கு துவக்கு சுடப்பழக்கியதையும், அவர் ருசியாக சமைத்து உறியில் வைத்த இறைச்சி கறியை அவரறியாமல் எடுத்து சாப்பிடுவதையும், தான் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த போது “தம்பி, உத்தியோகம் கிடைக்காட்டில் என்னடா? உனக்கு வயல் இருக்குது, அதை செய்து சந்தோசமாக சீவிக்கலாம் தானே.” என்று நம்பிக்கையூட்டியதையும் நினைத்து விம்மி விம்மி அழுதான்.
தனது பத்து வயதில் தாய் “கணபதி நாங்கள் பெரியபரந்தனுக்கு போவம்.” என்றதும் மறு பேச்சு பேசாமல் தனது ஊர், படிப்பு, நண்பர்கள், சொந்தங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த கணபதியார் பெரிய பரந்தன் கிராம வாழ்வுடன் ஒன்றிவிட்டார். அந்த கிராம வளர்ச்சிக்காக பாடுபட்டு அதன் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும், மீண்டெழ செய்த முயற்சிகளையும் பார்த்த கணபதியாரின் கண்கள் இன்று நிரந்தரமாக மூடிக் கொண்டன.
பெரிய பரந்தனில் நிகழ்ந்த மற்றொரு சோகம் நிறைந்த இழப்பு அது. பெரிய பரந்தன் மக்கள் அனைவருமே கணபதியாரை தமது வழிகாட்டியாக எண்ணி வாழ்ந்தவர்கள். கணபதியார் செருக்கன், குஞ்சுப்பரந்தன் மக்களுடனும் மிகவும் அன்பாக பழகி வாழ்ந்த மனுஷன். எல்லாரும் அவரது இழப்பை தாங்க முடியாது கவலையோடு வந்து குவிந்தனர்.
மெயில் றெயினில் வந்த நாதனையும் இந்திராவையும் சுந்தர் போய் காரில் ஏற்றி வந்தான். நாதன் பேரனை அணைத்து அழ, இந்திரா மாமியாரையும் மணியையும் கட்டிப்பிடித்து அழுதா. நாதன், தனக்கு முந்தநாள் அப்பு கனவில் வந்து “என்னடா ஒரேயடியாய் கொழும்பிலை நிற்கிறாய். காளியாசியிட்டையும் அடிக்கடி வந்து போ.” என்று சொன்னது இதுக்கு தானா என்று நினைத்து நினைத்து உருகி உருகி அழுதான்.
பீப்பா கட்டாடியாரின் மகன் காசி வந்து வெள்ளை கட்டினார். கணபதியாரின் இழப்பை கேள்விப் பட்ட மூப்பன்மார் ஏழு எட்டு பேர், இரண்டு சோடி பறை மேளங்களுடன் வந்து மாறி மாறி அடித்து, தங்களுக்கு அவர்மேல் இருக்கும் அளவற்ற மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தினார்கள். பரமரும் மிகவும் கவலையோடு வந்து அவரது இறுதிப்பயணத்திற்கு ஆயத்தப்படுத்தினார். மீசாலையிலிருந்து ஐயர் வந்து கிரியைகளைத் தொடங்கினார்.
யாரோ ஒருவர் ஒரு சேர்ட்டை வாங்கி வந்து அப்புவுக்கு போட முயன்றார். மகாலிங்கம் “தம்பி, என்ரை ஐயா உயிருடன் இருக்கும் போது ஒரு நாளும் சேர்ட் போட்டதில்லை. வேட்டியை கட்டி, ஒரு சால்வையை போட்டுக் கொண்டு எளிமையாய் வாழ்ந்து விட்டார். அப்படியே கடைசியாகவும் போகட்டும்.” என்று தடுத்து விட்டார். நாதனின் மாமனாரான சுப்பையா மாஸ்டரும் மனைவியும், சுப்பிரமணியத்தாரும் மனைவியும் மார்க்கண்டு விதானையாரும் மற்ற விதானைமாரும் டீ. ஆர். ஓ. கந்தோர் அலுவலர்களும் வந்திருந்தார்கள்.
முத்தர்கணபதியுடனும் வல்லிபுரத்தாருடனும் கந்தையருடனும் சுப்பிரமணியத்தாரும் சேர்ந்து தேவாரம் பாடினார். பெண்களெல்லாம் ஒப்பாரி வைத்து அழுது வழியனுப்பி வைக்க சுந்தரும் பேரம்பலத்தாரின் மகன்மாரும் கந்தையரின் மகனும் தோளில் சுமக்க, மகாலிங்கம் கொள்ளிக்குடம் தூக்க, நாதனும் நாபனும் பின் செல்ல ஊர்மக்கள் திரண்டு பின்னால் வர கணபதியாரின் இறுதி பயணம், அவர் நேசித்த ஊரை சுற்றிக் கொண்டு ஊரின் எல்லையிலிருந்த காஞ்சிபுரம் சுடலையை நோக்கி நகர்ந்தது.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/
பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/
பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/
பகுதி 36 – https://vanakkamlondon.com/stories/2021/05/111664/
பகுதி 37 – https://vanakkamlondon.com/stories/2021/05/112697/
பகுதி 38 – https://vanakkamlondon.com/stories/2021/05/113713/
பகுதி 39 – https://vanakkamlondon.com/stories/2021/06/114747/
பகுதி 40 – https://vanakkamlondon.com/stories/2021/06/115804/
பகுதி 41 – https://vanakkamlondon.com/stories/2021/06/116949/
பகுதி 42 – https://vanakkamlondon.com/stories/2021/06/118039/
பகுதி 43 – https://vanakkamlondon.com/stories/2021/06/119015/
பகுதி 44 – https://vanakkamlondon.com/stories/2021/07/120022/
பகுதி 45 – https://vanakkamlondon.com/stories/2021/07/121109/
பகுதி 46 – https://vanakkamlondon.com/stories/2021/07/122111/
பகுதி 47 – https://vanakkamlondon.com/stories/2021/07/123126/