Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கி முன்வைக்கும் ஒரு கோரிக்கை? | நிலாந்தன்

தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கி முன்வைக்கும் ஒரு கோரிக்கை? | நிலாந்தன்

5 minutes read

வரும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிக் கதைக்கவிருக்கின்றன.விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி;ஈபிஆர்எல்எப்;டெலோ;புளட் இவற்றோடு ஸ்ரீகாந்தா தலைமையிலான கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுமே அவ்வாறு கூடிக்கதைக்க இருக்கின்றன.இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் தமிழரசுக் கட்சி இச்சந்திப்பில் பங்குபெற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறியமுடிகிறது.பெரியதும் மூத்ததுமாகிய தமிழரசுக் கட்சி டெலோ இயக்கத்தின் முன்முயற்சி ஒன்றின் பின் இழுபட்டு செல்ல விரும்பவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்கு கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தரின் ஆதரவு உண்டா என்பதையும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது.இதுதொடர்பாக முன்பு நடந்த சந்திப்புகளில் அக்கட்சி பங்குபற்றவில்லை.அதனால் அக்கட்சிக்கு நடக்கவிருக்கும் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

இச்சந்திப்பு ஏற்கெனவே டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகளின் அடுத்தகட்டம் ஆகும். இச்சந்திப்பில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து கட்சிகள் முடிவெடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கொழும்பின் மீது இந்தியா அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேற்படி கட்சிகள் இந்தியாவை நோக்கி முன்வைக்கவிருப்பதாக அறியமுடிகிறது.

கடந்த சுமார் 12 ஆண்டுகளாக இந்தியா தமிழ்த் தரப்பிடமிருந்து அவ்வாறான ஒரு கோரிக்கை ஒற்றுமையாக முன்வைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அறியமுடிகிறது.அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.பல மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சரும் அவ்வாறு கேட்டிருக்கிறார்.அதாவது 13ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த்தரப்பு ஒரே குரலில் முன்வைக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிகிறது.கடந்த சுமார் 34 ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கு அதுதான் தீர்வு என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.குறிப்பாக அண்மை ஆண்டுகளில் ஐநா தீர்மானத்திற்குள் இந்தியா அதனை உட்செலுத்தியிருக்கிறது.

13வது திருத்தம் எனப்படுவது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விளைவு.இந்திய-இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு எழுதப்பட்டது என்று கூறப்பட்டாலும் அதில் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக கையெழுத்திடவில்லை. எனவே இந்தியாதான் தமிழ் மக்கள் சார்பாக அதில் கையெழுத்திட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.அப்படிப் பார்த்தால் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதில் இந்தியாவுக்கு ஒரு கூட்டுப்பொறுப்பு உண்டு.ஆனால் கடந்த 34 ஆண்டுகளாக இந்தியா அக்கூட்டுப் பொறுப்பை ஏன் நிறைவேற்றவில்லை? புலிகள் இயக்கத்தை ஒரு காரணமாக கூறினால் 2009க்கு பின்னரான. கடந்த சுமார் 12 ஆண்டுகளாக அதைச் செய்வதில் இந்தியாவுக்கு யார் தடையாக இருக்கிறார்கள்? ஆயின், இதுவரையிலும் தான் நிறைவேற்றாத ஒரு பொறுப்பை இந்தியா புதுப்பிப்பதற்கு விரும்புகிறதா?அதனால்தான் அப்படி ஒரு கோரிக்கை தமிழ் தரப்பிலிருந்து ஒரே குரலில் முன்வைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றதா? இலங்கைத்தீவின் யாப்பில்  எழுத்தில் உள்ள ஒரு விடயத்தை இந்தியா நிறைவேற்றித் தரவேண்டும் என்று மேற்படி காட்சிகள் கேட்கப்போகின்றனவா?

எனினும் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.கடந்த சுமார் 12 ஆண்டுகளில்  குறிப்பாக கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்துக்கு தமிழ் மக்களின் ஏகப்  பிரதிநிதிகள் போலக் காட்சியளித்த கூட்டமைப்பு 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்திருக்கவில்லை.கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தர் ஒருமுறை டெலோ இயக்கம் அது தொடர்பாக பேசிய பொழுது 13ஆவது திருத்தத்தை நான் தும்புத்தடியாலும் தொட்டுப்பார்க்க மாட்டேன் என்று கூறியதாக ஒரு தகவல் உண்டு. 13ஜக் கடந்து போக வேண்டும் என்பதே  தனது உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று அக்கட்சி கூறிவருகிறது. சம்பந்தர் கடந்த 12ஆண்டுகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து இரண்டு முயற்சிகளில் ஈடுபட்டார்.முதலாவது முயற்சி மகிந்த ராஜபக்சவின் காலத்தில். அதில் 13பிளஸ் என்று மஹிந்த கூறியதை நம்பி அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.ஆனால் முடிவில் அவை காலத்தைக் கடத்தும் உத்திகளே என்று தெரியவந்தது. அதன்பின் 2015தொடங்கம் 2018இன் இறுதிவரையிலும் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் சம்பந்தர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டார். இதற்கு முன் உருவாக்கப்பட்ட எந்த ஒரு யாப்பும் தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படவில்லை என்றும் தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி இதுவென்றும் சம்பந்தர் கூறி வந்தார். ஆனால் மைத்திரிபால சிறிசேன அந்த உருவாக்க முயற்சிகளைக் குழப்பி விட்டார்.

இது விடயத்தில் கூட்டமைப்பு  அந்த யாப்புருவாக்க முயற்சி குறித்து இந்தியாவோடு உரையாடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இந்தியத் தரப்பில் உண்டு. தனது தனிப்பட்ட மருத்துவ தேவைகளுக்காக இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தர் தீர்வு முயற்சிகள் தொடர்பில் இந்தியாவோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிகிறது. இதுவிடயத்தில் சம்பந்தர் தன்னைப் புறக்கணித்திருப்பதாக இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை கூட்டமைப்பினர் சந்தித்தபோது தூதுவர் தனது அதிருப்தியை கூட்டமைப்பிடம் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் கொழும்பு பத்திரிகைகளில் வெளிவந்தது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாகவேனும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியும் அதன் தோழமைக் கட்சிகளும் அதை ஒரு தொடக்கமாக ஏற்றுக்கொள்கின்றன. கடந்த ஜனவரி மாதம் ஐநாவுக்கு கடிதம் எழுதியபோது இரண்டாவது கடிதத்தை அனுப்ப கூட்டமைப்பு பின்னடித்தது. எனினும் ஏனைய இரண்டு கட்சிகளையும் இணைத்து ஒரு கடிதத்தை எழுத சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சித்தார்கள்.ஆனால் 13வதுதிருத்தம் தொடர்பில் இரண்டு கட்சிகளும் முரண்பட்டன.அதனால்தான் அக்கடிதத்தை அனுப்ப முடியவில்லை.இவ்வாறு 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் தரப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை

வரும் செவ்வாய்க்கிழமை பெரும்பாலும் ஐந்து  காட்சிகளே சந்திக்கக்கூடிய வாய்ப்புகள்தான் தெரிகின்றன. இம்முயற்சியில் மனோ கணேசனையும் ராவூப் ஹக்கீமையும்இணைத்துக் கொள்ளலாம் என்று மேற்படி கட்சிகள் சிந்திப்பதாக தெரிகிறது.இம்முயற்சிக்கு  சம்பந்தரும் தமிழரசுக் கட்சியும் சம்மதித்தால் அது ஒரு பலமான கோரிக்கையாக அமையக்கூடும். இல்லையென்றால்  அக்கோரிக்கைக்கு அதிகம் பலம் இருக்காது.அடுத்த வாரம் ஜனாதிபதி ஸ்கொட்லாந்து போகிறார். காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் அவர் பங்குபற்றவிருக்கிறார்.அதே மாநாட்டுக்கு இந்திய பிரதமரும் வர இருக்கிறார்.இப்படியொரு தருணத்தில் மேற்படி கட்சிகள் இணைந்து மேற்படி கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயல்கின்றன.

அது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியாவுக்குள்ள கூட்டுப்பொறுப்பின் பிரகாரம் இந்தியாவை இனப்பிரச்சினையில் மீண்டும் தலையிட வைக்கும் ஒரு முயற்சியாக அமையுமா? ஆனால் இந்தியா 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்ற நிலைப்பாட்டை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே வலியுறுத்துகிறது. ஆனால், மேற்படி காட்சிகள் அதை ஓர்  இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றனவா?அப்படியென்றால்   ஒற்றையாட்சிக்குட்பட்ட  மாகாணசபையை மேற்படி கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா?

அரசாங்கம் ஒரு மாகாண சபைத் தேர்தலை வைக்கலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.அதேசமயம் ஒரு புதிய யாப்புக்கான வரைபை விவாதத்துக்கு விடலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. தென்னிலங்கையில் தற்போது நிலவும் சமூகப்  பொருளாதார நெருக்கடிகளைக் கருதிக்கூறின்,மாகாண சபை தேர்தலை நடாத்துவது என்பது அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு விஷப்பரீட்சை.அதனை அரசாங்கம் விரும்பாது.சில சமயம் வடக்கு-கிழக்கிற்கு ஒரு தேர்தலை நடத்தலாம் என்ற ஊகங்கள் உண்டு. ஆனால் அது வடக்கு-கிழக்கிற்கு என்று தனித்துவமான பிரச்சினைகள் இருப்பதையும் அங்கே ஒரு அதிகார கட்டமைப்பு தேவை என்பதையும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும்.இதுவும் அரசாங்கத்திற்கு பிரச்சினைதான்.எனவே மாகாணசபைத் தேர்தலை நடத்தப்போவதாகவும் ஒரு புதிய யாப்பை கொண்டு வரப் போவதாகவும் அரசாங்கம் கூறி வருவதெல்லாம் காலத்தை கடத்தும் உத்திகளே என்று ஊகிக்க இடமுண்டு.

எதுவாயினும்,அரசாங்கத்தின் இந்த உத்திகளை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு எதிர் உத்திகளை வகுக்க வேண்டிய ஒரு தேவை உண்டு. அவ்வாறான உத்திகள் அரசாங்கத்தை அம்பலப்படுத்தும் நோக்கிலானவைகளாக அல்லது அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்தோடு அல்லது  இந்தியாவோடு முரண்பட வைக்கும் நோக்கிலானவைகளாக இருக்கவேண்டும்.கொழும்பின் மீது புதுடில்லி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நிலையை உருவாக்குவதே மேற்படி கோரிக்கையின் உள்நோக்கம் என்று மேற்படி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கேட்ட இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 20 மாத கால இழுபறிக்குப் பின் மேற்கு முனையத்தைத்தான் இலங்கை வழங்கியிருக்கிறது.தனக்கு விருப்பமான ஒரு துறைமுக முனையத்தை கேட்டுப்பெறும் விடயத்தில்கூட இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க விரும்பவில்லையா?அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியவில்லையா?என்ற கேள்விக்கும் விடைதேட வேண்டும். அதுபோலவே 13வது திருத்தம் விடயத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று நம்புதற்கு கடந்த 34 ஆண்டு கால அனுபவம் உதவுவதாக இல்லை.

கொழும்புக்கும் புதுடில்லிக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குவது அல்லது கொழும்பின் மீது புதுடில்லியை அழுத்தம் பிரயோகிக்க வைப்பது போன்ற ராஜதந்திர உத்திகளைப்பற்றிச் சிந்திப்பது அவசியமானது. ஆனால் அந்த உத்திகளை ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழர்கள்,கட்சி நோக்கு நிலைகளிலிருந்து முடிவெடுப்பதை விடவும் ஆக்ககூடியபட்ஷம் ஒரு தேசமாகத் திரண்டு நின்று முடிவெடுப்பதே பலமானது.

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More