“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது ஒருவர் பிறந்த நாடாகும்.
தேசப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அப்பற்று மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை.
இவ்வாய்வுகள் மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம்.
பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும்.
பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வால் விளைந்த அலைந்துழல்வு (Nostalgia) வாழ்க்கை தருகின்ற துயரத்திலிருந்தும், ஏக்கத்திலிருந்தும் எம்மைத் தற்காலிகமாகவேனும் ஆறுதல்படுத்துவது நாம் சார்ந்த ஊர் பற்றி அவ்வப்போது எமக்குக் கிடைக்கும் செய்திகளாகும். எமது இனத்துவ அடையாளங்களை நமது அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்ல உதவுவதும் இத்தகைய பிரதேச வரலாற்று நூல்களே.
தாம் வாழ்ந்த மண்ணின் பிரதேச, சமூக வரலாறுகளைத் தம் சந்ததியினர் அறிந்துகொள்ளவென வழங்கிவிட்டுச் சென்ற நம் முன்னோர்களின் மண்மணம் மறவாத படைப்புக்கள் பல இன்றும் எம்மை நாம் இழந்தவிட்ட அந்தக்காலத்துக்கு அழைத்துச்சென்று புளங்காகிதமடையச் செய்கின்றன. தாம் பிரிந்துவந்த மண்ணின் நினைவுகளை பிரதேச வரலாறுகளாகப் பதிவுசெய்யும் நடைமுறை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது.
அதே வேளை உள்ளக இடப்பெயர்வுகளால் தாம் இழந்த மண் பற்றிய துயரப் பதிவுகளை மேற்கொண்டு வரலாறாக்கும் பணிகளும் அண்மைக்காலத்தில் தாயகத்தில் முனைப்புப்பெற்று வந்திருக்கின்றன. ஆகமொத்தம் பிரதேச வரலாறென்பது வளர்ந்துவரும் ஒரு ஆய்வுப்பரப்பாக மாறிவிட்டதெனலாம்.
இன்று நமது புகலிடங்களில் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் கோவில்கள் கூட, தாயகத்துக் கோயில்களின் நினைவுகளைத் தாங்கியே இயங்குவதை ஆழ்ந்து அவதானிக்கமுடிகின்றது. ஆங்காங்கே உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்வுகளை மேற்கொண்டு கூடிப் பேசிப் பிரியும் ஊர்ச் சங்கங்கள் கூட, பிரதேச வரலாற்றின் கூறுகளாகவே அமைகின்றன. அவை அவ்வப்போது வெளியிடும் மலர்களும் அவ்வப் பிரதேசத்தின் வரலாற்றுப் படிமங்களாகவே காணப்படுகின்றன. பாடசாலை பழைய மாணவர் சங்கங்களும் இந்த வகைக்குள் அடங்குகின்றன.
இன்று ஈழத்தமிழர்களால் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுவரும் பிரதேச வரலாற்றுக் கூறுகளைத் தொகுத்துப் பகுத்துப் பார்ப்பதே ஒரு வரலாற்று ஆவணமாகி விடும். அத்தகையதொரு விரிந்த தேடலுக்குத் தேவையான ஆய்வுப்பரப்பினை அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
பிரதேச வரலாறுகள் ஒரு குறித்த புவியியல் எல்லைக்குட்பட்டதொரு பிரதேசத்தின் வரலாற்றை, அந்த மண்ணின் வளத்தை, மக்களின் பண்பாட்டை, குடித்தொகையை, அப்பிரதேசத்தில் எழுந்த கோவில்களை, அந்த மண்ணில் பிறந்து புகழ்பெற்ற மைந்தரைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்த தனி நூல்களாகவும் அமைகின்றன. அலைகடல் ஓரத்தில் தமிழ்மணம் என்ற பெயரில் உடப்பூர் வீரசொக்கன் எழுதி, உடப்பு இளம் தாரகை வட்டம் 1997இல் வெளியிட்டிருந்த ஒரு நூல் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
இலங்கையில் புத்தளம் மாவட்டத்தின் வடமேல் கரையில் உள்ளது உடப்பூர். புத்தளம் மாவட்டத்தில் தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்துவரும் கிராமங்களில் உடப்பு கிராமமும் முன்னிலையில் திகழ்கின்றது. இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து மன்னார்க் கரையினை அடைந்து கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக இவ்வூரிலேயே நிலைகொண்டு வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களின் பிரதேச வரலாறு இதுவாகும். இம்மக்களிடையே வழங்கும் கர்ணபரம்பரைக் கதைகளையும் அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் கலை பண்பாட்டு அம்சங்களையும் உற்றுநோக்கி இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது.
உடப்பூர் விஷேட குறிப்புகள், குடியேறிய வரலாறு, தொழில், கிழக்குக் கடலோர மீன்பிடித் தொழில், உடப்பில் வழக்கிலுள்ள பழமொழிகள், வில்லிசை, திரௌபதையம்மன் வழிபாடு, சித்திரைச் செவ்வாய், உடப்பின் நாட்டுப்பாடல், மரபுவிளையாட்டுகள், அம்பா பாடல், இந்து ஆலயங்கள் என்று பல அம்சங்கள் பற்றி இந்நூல் விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது.
ஒரு பிரதேச வரலாறு அப்பிரதேச மக்களின் இனவரலாறாகவும் எழுதப்படுவதுண்டு என்பதற்கு உதாரணமாக, அக்கரைப்பற்று வரலாறு என்ற நூலைக் குறிப்பிடலாம். யு.சு.ஆ.சலீம் அவர்களால் அக்கரைப்பற்று பள்ளிவாசல்களின் சம்மேளன வெளியீடாக, 1990 இல் இந்நூல் வெளிவந்தது. அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் இயற்கைவளமும் கலாச்சாரமும் ஆக்கங்களும் சாதனைகளும் பெரியார்கள் உத்தமர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
தொடரும்……
நன்றி : என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் | பதிவுகள் இணையம்