எச்சரிக்கை: இங்கு இருக்கும் சில ஓவியங்கள் வன்முறைக் காட்சியை சித்தரிக்கின்றன

இத்தாலியின் மகத்தான ஓவியக் கலைஞர்களில் ஒருவரான கரவாஜ்ஜோ வரைந்ததாகக் கருதப்படும் ஒவியம் ஒன்று தெற்கு ஃப்ரான்ஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் கிடைத்திருக்கிறது.
இதன் மதிப்பு 94 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
விவிலியக் கதை ஒன்றின்படி, அசிரிய போர்த் தளபதி ஹோலோஃபெர்னஸின் தலையை ஜூடித் துண்டிக்கும் காட்சியை விவரிக்கும் இந்தப் படம், தூலோஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்த வீட்டின் உரிமையாளர், வீடு ஒழுகுவதை சரிசெய்வதற்காக மேலே ஏறியபோது இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு, ஓவியக் கலைநிபுணரான எரிக் டர்க்கினிடம் அனுப்பிவைக்கப்பட்டது. 1599ல் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
இந்த ஓவியத்தின் மீது சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்காக, இந்த ஓவியத்தை 30 மாதங்களுக்கு நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்லக்கூடாது என பிரெஞ்சு அரசு உத்தரவிட்டது.
இந்த ஓவியம் வரையப்பட்டு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.
இந்த ஓவியத்தின் இன்னொரு வடிவம் – அதுவும் காணாமல் போனதாக கருதப்பட்டது – 1950ல் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்த ஓவியம் ரோம் நகரத்தின் நேஷனல் கேலரி ஆஃப் ஏன்சியன்ட் ஆர்ட்டில் உள்ளது.
தற்போது இந்த ஓவியத்தை பாரிஸீன் லூவ்ரு அருங்காட்சியகத்தின் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இருந்தபோதும், இந்த ஓவியத்தை வரைந்தது யார் என்பதில் சர்ச்சை நீடிக்கவே செய்யும் என்கிறார்.
இது உண்மையான ஓவியம் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், இந்த ஓவியத்தை விலைக்கு வாங்குவதற்கு பிரெஞ்சு அரசு முயற்சி செய்யும்.

கரவாஜ்ஜோவின் உண்மையான பெயர் மைக்கெலாஞ்சலோ மெரிசி. இவர் 1571 அல்லது 1573ல் பிறந்திருக்கலாம். மிகச் சிக்கலான வாழ்க்கையை வாழ்ந்த அவர், மர்மமான முறையில் 38வது வயதில் மரணமடைந்தார்.
வெளிச்சத்தையும் நிழலையும் கூர்மையாக வேறுபடுத்திக்காட்டும் பரோக் என்ற ஓவிய பாணியின் முன்னோடியாக இவர் கருதப்படுகிறது.
எப்போதும் சண்டையிழுக்கும் குணமுடைய இவர், அடிக்கடி சிறை சென்றார். ஒரு கொலைகூட செய்திருக்கிறார்.
தன் வாழ்வின் கடைசி சில ஆண்டுகளில் சட்டத்திற்குத் தப்பி தெற்கு இத்தாலியில் வாழ்ந்த கரவாஜ்ஜியோ, மன்னிப்புக் கோருவதற்காக ரோமிற்கு சென்றுகொண்டிருந்தபோதுதான் மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது.


நன்றி : BBC தமிழ்