உலக அளவில் முன்னிலை வகிக்கும் டாப் 10 வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு இது!
விக்டோரியா அசரென்கா (23)
மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக அசத்தி வருகிறார். பெலாரஸ் நாட்டை சேர்ந்த இவர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, குவித்தோவா (செக்.) ஆகியோரின் கடும் போட்டியை சமாளித்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்த ஆண்டு 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் (26)
உலகின் அதிவேக வீராங்கனை. லண்டன் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்திய இந்த ஜமைக்கா மங்கை, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் முதலிடம் பிடித்தவர். உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் 2 முறை தங்கம் வென்றுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக 100 மீட்டர் ஓட்டத்தில் இவரது ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்து வருகிறது.
நதாலி காப்ளின் ஹால் (30)
அமெரிக்க நீச்சல் வீராங்கனை. ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம் உள்பட 12 பதக்கம் வென்றவர். 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில், ஒரு நிமிடத்துக்கும் குறைவாக பந்தய தூரத்தைக் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். இதே பிரிவில் தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையும் இவருக்கே சொந்தம்.
ஜூடி பீல்ட்ஸ் (28)
ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை 6வது முறையாக வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் திறமை வாய்ந்தவர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தவருக்கு, கேப்டன் பதவியை கூப்பிட்டுக் கொடுத்தார்கள். முதல் போட்டியிலேயே, அணி 28 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் அதிரடியாக 139 ரன் விளாசி தலைமைப்பொறுப்புக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்தார். அடுத்த முறையும் உலகக் கோப்பை எங்களுக்குத்தான் என்கிறார் நம்பிக்கையுடன்.
யானி செங் (24)
நம்பர் 1 கோல்ஃப் வீராங்கனை. தைவானை சேர்ந்த இவர், மிக இளம் வயதில் 5 சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனை படைத்தவர். ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட 2012ம் ஆண்டுக்கான டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். ‘கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் போல நீண்ட காலம் நம்பர் 1 ஆக நீடிப்பேன்’ என்கிறார் நம்பிக்கையுடன்.
லி ஸுவருயி (22)
சீன பேட்மிண்டன் வீராங்கனை. உலக தரவரிசையில் முதலிடம். ஆல் இங்கிலாந்து ஓபன், லண்டன் ஒலிம்பிக், உபெர் கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் என்று பெரிய அளவில் சாதித்தவர். சாய்னா நெஹ்வாலுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்.
நிகோல் டேவிட் (29)
மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை. நம்பர் 1 இடம் பிடித்த முதல் ஆசியர் என்ற பெருமைக்குரியவர். பிரிட்டிஷ் ஓபனில் 4 முறை, உலக ஓபன் தொடரில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக ஜூனியர் பட்டத்தை 2 முறை வென்ற முதல் வீராங்கனை (1999, 2001).
அப்பி வாம்பாக் (32)
அமெரிக்க கால்பந்து வீராங்கனை. இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம். கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பிபா விருது. அமெரிக்காவின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை 5 முறை பெற்றுள்ளார். முன்களத்தில் இவரது துடிப்பான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜெனிபர் சுஹர் (31)
கொம்பு ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் (போல் வால்ட்) உலகின் நம்பர் 1 வீராங்கனை. லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம். அமெரிக்காவின் தேசிய சாம்பியன் பட்டத்தை 11 முறை வென்றுள்ளார். ரஷ்யாவின் இசின்பயேவா ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில், இவரது கை ஓங்கியுள்ளது.
கேபி கிறிஸ்டினா டக்ளஸ் (17)
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் மற்றும் குழு ஆல் ரவுண்ட் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்த அமெரிக்க சிறுமிதான் இன்று உலகின் நம்பர் 1 ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. 2011ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க அணியிலும் இடம் பெற்றவர்.
நன்றி : பா.சங்கர் | குங்குமம் தோழி