Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 3கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 3

கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 3கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 3

3 minutes read

இவ்வறிவானது மனிதனது பரிணாம வளர்ச்சியில் திட்டமிட்டு மரபணுப் பொறியியல் முறையால் அழிக்கப்பட்டுள்ளதா? இதற்கும் புராதன விண்வெளிக் கோட்பாட்டாளர்கள் கருதுவது போன்று வேற்றுக்கிரக வாசிகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பூமியிலே மனித சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் இடையிடையே ஆட்டம் காணவைப்பவை தான் வெற்றுக்கண்ணால் காணமுடியாத நுண்ணுயிர் கூட்டங்கள்.

இவற்றில் மிக முக்கியமானவை பல மில்லியனுக்கும் மேற்பட்ட இனங்களாக பெருகிக்கிடக்கும் வைரஸ், பக்ட்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள். இவை உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி உயிர்வாழ்வதற்கரிய இடங்களிலும் தமது இருப்பை நிறுவியுள்ளன.

மனித வரலாற்றிலே இக்கிருமிகளால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இதற்கு உதாரணங்களாக 14ம் நூற்றாண்டில் 75 மில்லயனுக்கும் மேற்பட்ட மக்களை காவுகொண்டு ஐரோப்பாவின் சனத்தொகையினை 30% ஆல் குறைத்த பிளேக் (plague) எனும் கொள்ளை நோயினையும் 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுதோறும் 400,000 மக்கள் கொல்லப்படக் காரணமான சின்னம்மை (small pox) நோயினையும் குறிப்படலாம்.

வேகமாக பிறழ்வுக்கு உட்படக்கூடிய இந்நோய்க்கிருமிகள் குறிப்பாக வைரஸ் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதுப்புது வடிவெமெடுத்து பல ஆட்கொல்லி தொற்று நோய்களை பரப்பிவருகின்றன.

இந்நோய்தொற்றுக்கு உட்படும் மனிதர்கள் நோய்க்கிருமிக்கெதிரான பிறபொருள் எதிரிகளை (antibodies) தமது நிர்ப்பீடனத் தொகுதியில் (immune system) தோற்றுவிக்கும் வரை அத்தொற்றிலிருந்து முற்றாக குணமடைய முடியாது. பிறபொருள் எதிரிகளை தோற்றுவிக்கும் மனிதர்கள் அந்நோய்கெதிரான எதிர்ப்புசக்தியைப் பெற்று அதிலிருந்து மீள்வதுடன் அந்நோய் தாக்கம் மீண்டும் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

இந்தவகையில் இந்நோய்க்கிருமிகள் மனிதனின் நிர்ப்பீடனத்தொகுதியை வலுவடைய செய்துள்ளதுடன் டாவினின் இயற்கைத் தேர்வு முறையினால் மனித பரிணாம வளர்ச்சியை நெறிப்படுத்தியுமுள்ளது. தற்போது மருத்துவ வளர்ச்சியின் உதவியுடன் இத்தொற்றுக்கள் வேகமாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் இவற்றைவிட மிக உக்கிரமான நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.

புராதன விண்வெளி கோட்பாடாளர்கள் பூமியில் புதிதாக தோன்றும் நோய்க்கிருமிகளுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளே என்றும் இது மனிதனது பரிணாம வளர்ச்சியை நெறிபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லது பூமியானது அவர்களால் புதிய நோய்க்கிருமிகளை பரிசோதித்து பார்ப்பதற்கான களமாக பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம் என அனுமானிக்கிறார்கள்.

அந்தவகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோற்றம்பெற்ற மனித இனம் இன்றுவரை உடற்கூற்றியல்ரீதியாக பாரிய மாற்றங்கள் எதனையும் எட்டவில்லை. மனித இனத்தின் எதிர்கால பரிணாமவளர்ச்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர்களில், தொல்லுயிரியலாளரான இயன் டெரெர்சோல் (Ian Tattersall)  மனித இனமானது சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து தனிமைப்படுத்தப்படாமல் ஒன்றாக இருப்பதோடு அதற்குள் உள்ள வேறுபட்ட மனித வர்க்கங்கள் தொடர்ச்சியாக தங்களுக்குள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவருவதால் மனித இனத்தினது மரபணுத் தொகுதியில் குறிப்பிடத்தக்க பிறழ்வுகள் ஏற்பட்டு அது நிலைத்தன்மை அடைந்து அதனூடாக மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அரிதென கூறுகின்றார்.

மேலும் நவீன மருத்துவ தொழிநுட்ப உதவிகளால் சூழலுடன் ஒத்துவாழ முடியாத பலவீனமான மனிதர்களும் தமது ஆயுட்காலத்தை அதிகரித்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் டாவினின் இயற்கைத்தேர்வு முறையானது நவீன மனித இனத்தினால் ஓரங்கட்டப்பட்ட ஒரு விடயமாகவேயுள்ளது. இதனால் மனிதன் மேலும் கூர்ப்படைவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவென வாதிடுகிறார்.

 

நவீன டாவின் கோட்பாட்டின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜுலியன் ஹக்ஸ்லி (Julian Huxly) எனும் உயிரியலாளர் மனிதனானவன் தற்போது உடற்கூற்றியல்ரீதியாக பரிணாமவளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் இனிமேல் ஏற்படும் பரிணாம வளர்ச்சியானது மனம் சார்ந்ததாகவே இருக்குமெனவும் அது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான வாசல்படியில் உள்ளதெனவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் மனிதன் இன்னும் சிறிதுகாலத்தில் பேர்மனம் படைத்தவனாக பரிணாம வளர்ச்சியடைய வாய்புண்டு. மனவளர்ச்சி ஏற்படவேண்டுமெனில் அதற்கு மூளையும் வளர்ச்சியடைய வேண்டுமென கருதும் சில விஞ்ஞானிகள் கூர்ப்பில் மூளையின் பருமன் மும்மடங்காக அதிகரித்திருப்பதை ஆதாரம் காட்டி மேலும் மூளையின் பருமன் கூர்ப்பினூடாக அதிகரிக்கும் என எதிர்வு கூறியுள்ளனர்.

ஆனால் சில விஞ்ஞானிகள் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்கின்றார்கள். எவ்வாறெனில் நமது மூளையானது ஏற்கனவே உடலில் பிறப்பிக்கப்படும் சக்தியின் 20% தினை தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதாகவும் இது தனி ஒரு அங்கத்திற்கு தற்போதுள்ள மனித உடலால் வளங்கப்படக்கூடிய சக்தியின் உச்ச அளவென்பதாலும் மூளையின் பருமன் கூர்ப்பிலே மேலும் அதிகரிக்கும்போது அதன் அதிகரித்த சக்திப்பயன்பாட்டை பூர்த்திசெய்ய அதிகளவு குருதி மிக வேகமாக இருதயத்தினால் கூடிய விசையுடன் குருதிக்கலன்களினுள் வெளித்தள்ளப்படவேண்டி வருவதால் இருதயத்தின் பருமனும் அதற்கேற்றால்போல்ஏனைய உடல் அங்கங்களினது பருமனும் விருத்தியடைய வேண்டுமென்கிறார்கள். அதனால் மூளையின் பருமன் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

அத்தோடு நரம்புக்கூற்றியலாளர்கள் (neurologists) மனித மூளையின் பருமனுக்கும் அது கொண்டுள்ள நுண்ணறிவுக்கும் சம்பந்தமில்லையெனவும் அது மூளை எவ்வளவு வினைத்திறனாக தனது ஏனைய பகுதிகளுடன் நரம்பு கணத்தாக்கு தொடர்புகளை கொண்டுள்ளது என்பதினாலும் பெற்றுக்கொண்ட அநுபவத்தினாலுமே தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein) மூளையை ஆராய்ந்த பேராசிரியர் சாண்ட்ரா விட்டில்சன் (Prof. Sandra Witelson) அவரது மூளையானது சாதாரண நுண்ணறிவுடைய மனிதன் ஒருவனின் மூளையின் பருமனை ஒத்ததாகவே இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நவீன மனிதனில் மூளையின் பருமனுக்கும் அதன் நுண்ணறிவுக்குமுள்ள தொடர்பை நிராகரித்த விஞ்ஞானிகள் கூடிய நுண்ணறிவுடைய மனிதர்களின் மூளையானது அதனது ஏனைய பகுதிகளுடன் மிக வினைத்திறனாக தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்கள் மூளையின் அதிகளவு சதவீதத்தினைப் பாவிப்பதாகவும் கூறுகின்றனர்.

சராசரி மனிதன் மூளையின் 10% தினையே பாவிக்கிறான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே பரிணாமவளர்ச்சியில் மூளையின் 100% தினையும் பாவிக்குமாற்றல் வரப்பெற்றவனாக மனிதன் தோற்றம்பெற வாய்ப்புண்டு. அம்மனிதன் பேர்மன ஆற்றல் படைத்தவனாக இருப்பான்.

 

 

தொடரும்……

 

 

நன்றி : பொ. மனோ | பதிவுகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More