பெண் கல்வியறிவு பெற்றிருந்தால், அந்த வம்சமே கல்வி பெற்று விடும் என்ற நம்பிக்கை எப்படி உண்மையோ, அதுபோலவே, தனக்கான சுதந்திரத்தை ஒரு ஆண் தவறாய் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், அந்த குடும்பத்தை மட்டும் பாதிக்கும் என்பதும் உண்மை.
நண்பர் ஒருவர் சொல்லி வருந்திய ஒரு விஷயம், என்னை மட்டுமல்ல, உங்களையும் யோசிக்க வைக்கும். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் நேரத்தில், மகளின் வெளி வட்டார நட்பை மீறிய உறவவுகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சொன்னார்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், நண்பர்களாக இருக்கும் போது, அவர்களில் இரண்டு, மூன்று ஆண்களை, ஒருவருக்கு தெரியாமல் மற்றவர்களை காதலர்களாய் பாவித்து பழகுவது, தற்போதைய இளம் பெண்களின் ஸ்டைலாக இருக்கிறது. இது தான் நண்பரின் பிரச்னை.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமா?
இப்படிப்பட்ட மனநிலைக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என யோசிக்க
ஆரம்பித்ததில், வேகமாய் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, நல்லதை மட்டும் கொடுக்காமல், எதிர்விளைவுகளையும் கொடுக்கிறது. இளம் பருவம் என்பது நல்லதை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும், அதில் உள்ள எதிர்மறையான விஷயங்களையே, ஒரு திரில் அனுபவமாக எடுத்துக் கொள்ளும். அதில் உள்ள, ஒரு நன்மையைக் காட்டிலும், 10 தீமைகளை தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர்.
சுய கட்டுப்பாடு, சுய அறிவு இவையெல்லாம் ஏதோ கட்டுப்பட்டித்தனமான வார்த்தைகள் என்கிற அளவிற்கு வந்து விட்டோம். தேர்வு சமயத்தில் மாணவியர் குடித்துவிட்டு வந்து பரீட்சை எழுத முடியாமல் வாந்தி எடுத்து, கலாட்டா செய்ததற்கு காரணம் கேட்டபோது, பள்ளிக்கு வரும் வழியிலேயே மதுக்கடை இருந்தது, வாங்கி குடித்து தான் பார்ப்போமே என்று நினைத்தோம் என்றனர்.
எது சுதந்திரம்?
இது எங்கோ, எவருக்கோ நடந்தது அல்ல. நம் பக்கத்து ஊரில் நடந்த சம்பவம். இது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து, இப்போது இரண்டு காதலர்களை வைத்துக் கொள்ளும் அளவிற்கு வந்துள்ளது. ஆண்களை விட, நாங்கள் குறைந்தவர் இல்லை; சளைத்தவர் இல்லை. எங்களாலும், பல ஆண் நண்பர்களை வைத்துக் கொள்ள முடியும் என்று, சம உரிமை காட்ட ஆரம்பித்து விட்டனர், நம் இளம் பெண்கள்.
என் அழகிற்கு, எனக்கு இத்தனை ஆண் நண்பர்கள் வருகின்றனர், நான் பழகுகிறேன்; இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கும் அளவிற்கு பொருளாதாரத்திலும், தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.
இவ்வளவு குறைகளையும், ஒட்டு மொத்தமாய் இளம் பெண்கள் மீது வைக்கும் நிலைக்கு கொண்டு வந்தது, பெற்றோராகிய நாம் தான். நம் வீட்டுப்பெண் பார்த்து ரசிக்கிற மாதிரி உடை அணிகிறாளா, முகம் சுளிக்கும் அளவிற்கா என்பது நம்மை தாண்டிதானே வெளியில் போயிருக்க முடியும்? பெண் பிள்ளைகள் அப்பா, அம்மாவின் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு நம்மால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.
கையிலேயே உலகத்தைக் கொண்டு வந்துள்ள தொழில்நுட்பம், பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தவறான நம்பிக்கை, வந்தாலும் என்னால் தனியே வாழ முடியும்; அந்த அளவிற்கு என்னிடம் படிப்பு, வேலை, பொருளாதாரம், சமூகத்தில் வாய்ப்பு, வசதிகள், கருத்து சுதந்திரம் எல்லாமே இருக்கிறது என்பது போன்ற தவறான எண்ணங்கள் மேலோங்கியிருக்கின்றன.
பெற்றோர் காரணமா?
பெற்றோர் கொடுக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த தெரியவில்லையா, கொடுக்கும் சுதந்திரத்தை சரியாகத்தான் பயன்படுத்துகின்றனரா என்பதை சரிவர
கண்காணிக்க பெற்றோர் தவறி விட்டனரா? யாரை இங்கு குற்றம் சொல்வது? காரணங்கள் எவையாக இருந்தாலும் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டியது நம் கடமை. இளம் பெண்களும் தன் சுய கவுரவம் எதில் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்குரிய சுதந்திரத்தை
வழங்காத வரை
ஒரு நாடு சுபிட்சம் அடையாது
– நேரு
வழங்கப்படுகிற சுதந்திரத்தை மிகச் சரியாக பயன்படுத்துவதில் தான் அடைந்த சுபிட்சம் மேலும் வளரும், செழிக்கும். இது கண்டிப்பாய் நம் இளம் பெண்களுக்கு தெரியும் என்றே நம்புவோம்.
நன்றி : ம. வான்மதி | தினமலர்