செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 2 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 2 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 2 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 2 | மகாலிங்கம் பத்மநாபன்

4 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

மன்னார் நகரிலிருந்து உயிலங்குளம் கிராமம் எட்டு மைல் தூரம். மன்னாரிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கு காலையில் 6.30 மணிக்கு ஒன்று, காலை 7.30 மணிக்கு ஒன்றுமாக இரண்டு பஸ்கள் உண்டு. கொக்குப்படையானுக்கு போவதற்கு ஒரு பஸ் 7.00 மணிக்கு உண்டு. இந்த மூன்றிலுமே முருங்கன் வரையும் கடமை புரியும் ஆசிரியர்களும், ஏனைய உத்தியோகத்தவரும் செல்வார்கள். நான் காலை 6.30 மணிக்குச் செல்லும் பஸ்ஸில் செல்வது என்று தீர்மானித்துக் கொண்டேன். இரண்டு வருடங்கள் இவ்வாறே சென்று வந்தேன்.

mannar-harththaal-1-600x400

காலை 6.30 மணிக்கு நான் பாடசாலை செல்வது கூட சிலருக்கு என் மீது எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. அது பற்றி சமயம் வரும்போது எழுதுவேன். வாழ்க்கை என்பது ஆச்சரியம் நிறைந்தது அல்லவா? நல்ல செயல்களும் எம்மத்தியில் வாழ்பவர்களில் சிலருக்கு இடைஞ்சலாக அமையலாம்.

6.30 மணிக்கு புறப்படும் பஸ் 6.50 மணிக்கு, அல்லது 6.55 மணிக்கு உயிலங்குளம் சென்றுவிடும். உயிலங்குளத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு நடந்து செல்ல 7.30 மணி ஆகி விடும். மணற்குளத்தில் ஒரு சிறு புகையிரத நிலையம் உண்டு. நாநாட்டான் வீதியில் நிலையத்தின் இருபுறமும் இரண்டு பலசரக்குக்கடையுடன் இணைந்த தேனீர்ச்சாலைகள் உண்டு. ஒன்று இந்திய வம்சாவழித் தமிழருடையது. மற்றது கம்பளையிலிருந்து வந்த ஒரு இஸ்லாமிய முதலாளிக்குரியது.

புகையிரதம் காலை வேளைகளில் மணற்குளத்தில், சாரதி மற்றும் ஊழியர்கள் உணவு உண்பதற்காக சற்று கூடுதலாக தரித்து நிற்கும். முதல்நாள் புகையிரதம் குறுக்காக என்னை மணற்குளத்தில் மறித்து விட்டது. ஏனையவர்களுடன் சேர்ந்து நானும் புதினம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மணற்குளத்தைத் தாண்டி பாடசாலை செல்லும் வீதியில் எனக்கு காத்திருக்கும் இரண்டாவது அதிர்ச்சியை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பாடசாலை வீதியில் நான் திரும்பிய போது இருமருங்கும் இளைஞர்கள் வரிசையாக நிற்பதைக் கண்டேன். அவர்களுக்கு இடையே நான் சென்றதும் எல்லோரும் ஒரே நேரத்தில் கை தட்டிக்கொண்டு “லெப்ட், றைற்” என்று சத்தமிட, ஒரு இளைஞன் யாழ் ஒழிப்பு நோட்டீஸைக் கொண்டு வந்து எனது கையில் திணித்தான். அவனது முகத்தை உற்றுப் பார்த்தேன். அப்பாவி இளைஞன். யாரோ வற்புறுத்தி கொடுக்கச் சொல்லியிருக்க வேண்டும்.

நான் ஒன்றுமே நடவாததைப் போல நோட்டீஸை வாசித்தபடி பாடசாலை சென்று திறந்த கட்டிடமொன்றில் அமர்ந்து கொண்டேன். திடீரென உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. எதிர்பாரத சம்பவம் என்பதால்  சற்று ஈடாடித்தான் போனேன். ஆனாலும் இதே சமூகத்திடம் நல்லாசிரியர் என்று பெயரெடுக்கும் வரை இப் பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெறுவதில்லை என்ற என் தீர்மானம் மேலும் உறுதியாயிற்று.

எனது 33 வருட 8 மாத சேவையில் முதற் பாடசாலையில் மட்டும் 5 வருடங்களும் 9 மாதங்களும் சேவையாற்றியிருக்கின்றேன். இப் பாடசாலையில் கடமை செய்யும் போது பல மகிழ்வூட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருமணம் செய்து மனைவியுடன் வந்த பின்னர் நாங்கள் அவர்களுள் ஒருவராகவே மாறிவிட்டோம். அவை முதலிரு நாட்களும் நடைபெற்ற சம்பவங்கள் உண்மை தானா என நினைக்க  வைத்தன.

இப்பாடசாலையில் எனது காலத்தில் நான்கு அதிபர்கள் கடமை புரிந்தனர். முதலாவது அதிபர் பிரியாவிடையின் போது “நான் தானா பத்மநாபனைப் பற்றி அப்படிக் கூறியது. நான் அப்படிக் கூறியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று மனம் வருந்தி கூறினார். யாழ் ஒழிப்பு நோட்டீஸ் தந்த இளைஞன் நாங்கள் பிரியாவிடை பெற்ற போது எனது கையைப் பற்றி “என்னை மன்னித்து விடுங்கள் சேர். உங்களுக்கு அந்த நோட்டீஸ் தந்தது நான் தான்” என்று அழுதான்.

இனி வரும் நாட்களில் இப்பாடசாலையில் நடந்தவை யாவும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகளே. நான் முதல் நாளே நேரசூசியின் படி செயல்படத் தொடங்கி விட்டேன். ஒவ்வொரு வகுப்பிலும் மிகவும் குறைவான மாணவர்கள். எனவே தனிப்பட ஒவ்வொருவரினதும் திறமை அறிந்து கற்பிக்கக் கூடியதாகவே இருந்தது. சகலரையும் கணிதத்தை செய்ய வைத்து பிழை திருத்தம் செய்யப் பண்ணி, மீண்டும் திருத்தி ஒப்பமிட்டுக் கொடுப்பேன்.

ஒவ்வொரு கிழமை ஆரம்பத்திலும் பாடக் குறிப்புக்கு அதிபரிடம் காட்டி ஒப்பம் பெற்றுவிடுவேன். பாடப்பதிவையும் ஒழுங்காக பதிந்து விடுவேன். விஞ்ஞான பாடத்தையும், கூடிய அளவிற்கு செயல்முறையுடன் கற்பிப்பேன். திரு. இம்மானுவேல் குரூஸ், திரு. அந்தோனிப்பிள்ளை, திரு.சுந்தரமூர்த்தி, திரு.அலெக்சிஸ் பெர்னாண்டோ என்ற நான்கு அதிபர்களின் கீழ் கடமை புரிந்தேன். முதலாவது அதிபர் மாணவர் மன்றப் பொறுப்பையும்  தோட்ட வேலைப் பொறுப்பையும் என்னிடம் தந்தார்.

Back Veggie Garden Planting_thumb[2]

பாடசாலை வளாகத்திற்கு நேரே முன்னுக்கு குளம். அதுவரை தோட்டம் செய்யாதிருந்தது மிகவும் பெரிய குற்றம் என்றே கூறலாம். தோட்டக்காணியை மாணவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தேன். கணித ஆசிரியர் என்றபடியால் போலும் அவை சதுர, செவ்வக, முக்கோண வடிவில் இருந்தன.

அதிபரிடம் அனுமதி பெற்று ,அத்தோட்டத்து வருமானத்தை அந்தந்த மாணவர்களே பிரித்து எடுக்கலாம் என்றும், ஆசிரியர்கள் காய், கறி பெறுவராயின் சம்பள தினத்தில் காசைக் கொடுத்து விட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. காலையில் முதலாவதாக நான் செல்வதால் மாணவர்களும் வேளைக்கு வந்து தோட்ட வேலை செய்யத்தொடங்கினர்.

garden-th

சம்பள நாளில் நானே முன்னின்று ஆசிரியர்களிடம் காசை வாங்கிக் கொடுத்து விடுவேன். மாணவர்கள் கொப்பிகளை தம் காசில் வாங்கக் கூடிய நிலை உருவாகிற்று.

மன்னார் மாவட்ட பாடசாலைகளை பார்வையிட திரு.ஜோர்ஜ் மென்டிஸ் எனும் கல்வியமைச்சின் செயலாளர் வருகை தந்தார். மன்னார் நகர, கிராம பாடசாலைகளையெல்லாம் தரிசித்து, வெய்யிலில் வாடி, களைத்து வந்த அவர் எங்கள் பாடசாலைக்கு வந்தவுடன், தோட்டத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகையில் உள்ள மாணவர்களின் கதிரையில் சென்று அப்பாடா என்று ஆறுதலாக அமர்ந்துவிட்டார். தோட்டத்தின் குளிர்மையான சூழல் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிபரிடம் விசாரித்து, அறிந்து, என்னை நேரில் அழைத்துச் பாராட்டினார். பின்னர் சம்பவத்திரட்டுப் புத்தகத்திலும் என்னைப் பாராட்டி(Commendation) எழுதியிருந்தார்.

அங்கு என்னுடன் திரு. மடுத்தீன், திரு. மரியாம்பிள்ளை, திரு.சம்சுதீன், திரு.கணபதிப்பிள்ளை என்ற ஆண் ஆசிரியர்களுடன் ஒரு தமிழ் ஆசிரியையும், ஒரு இஸ்லாமிய ஆசிரியையும் கடமை புரிந்தனர். திரு சம்சுதீன் ஆசிரியர் தான் முதலில் நண்பரானார். படிப்படியாக எல்லா ஆசிரியர்களும் நட்புடன் பழகப் தொடங்கினர். நாநாட்டான் ம.வி இல் நடைபெற்ற வட்டார விளையாட்டுப் போட்டிக்கு றக்ரர் வண்டியில் மாணவர்களை அழைத்துச் சென்றேன். அங்கு எமது கிராமத்து இளைஞர்களும் வந்திருந்தனர்.

அம்முறை எமது பிள்ளைகளுக்கு சில இடங்களும் கிடைத்தன. இவ்வளவு இடம் கிடைத்தது இம்முறை தானென்று கூறி , கிராமத்து இளைஞர்களும் என்னுடன் நன்கு பழகத்தொடங்கினர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் சென்ற சில ஆசிரியர்களும் அதிகாரிகளும், மிகுந்த சமுதாய சிந்தனையுடன் சேவை புரிந்திருந்தனர். ஆனால் எல்லா இடங்களிலும் சில புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்தனர். அவர்களின் செயற்பாடு, சில பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் அரசியல் வாதிகளுக்கு வாய்ப்பாயமைந்தது.

பொதுவாக ஒரு யாழ் ஒழிப்பு பிரசாரம் நடைபெற்ற போதும், கிராமங்களில் சிறப்பாக கற்பித்த ஆசிரியர்கள் வீடுகளுக்கு உறவினர்கள் போல கிராம மக்கள் செல்வதும், இடம் மாறி, இளைப்பாறி சென்ற ஆசிரியர்கள் குடும்பத்துடன், கிராமங்களுக்கு வந்து தங்கி, மடுக்கோவிலுக்கு செல்வதும் வழமையாக இருந்தது.

கிராமத்து பிள்ளைகளில் பலருக்கு யாழ்ப்பாண ஆசிரியர்களும், அலுவலர்களும் தொட்டப்பா, தொட்டம்மாவாக இருந்தனர். திருமணம் செய்த அடுத்த கிழமை எனது மனைவியையும் அழைத்து வந்து கிராமத்திலேயே வாழத்தொடங்கினோம். இனிமையான பல நிகழ்வுகளும் நடைபெற்றன.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

 

முன்னையபகுதி ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.