Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை இயக்குனர் மனோ பாலா – வெறும் காமெடியன் அல்ல

இயக்குனர் மனோ பாலா – வெறும் காமெடியன் அல்ல

3 minutes read

மனோபாலாக்கான பட முடிவுகள்"

தமிழ் சானல் ஒன்றில் இளம் நிருபர் ஒருவர் இயக்குனர் மனோ பாலாவுடன் உரையாடிக்கொண்டிருந்தார் அதைப்பார்த்த போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது காரணம் இளம் நிருபர் மனோ பாலாவையும் அவரது உடல் மொழியையும் கிண்டல்பண்ணி பார்ப்போருக்கு சிரிப்பு ஏற்படுத்துவதிலேயே கண்ணாக இருந்தார்.

இப்போதெல்லாம் மனோபாலாவைக் காமெடியனாகவே பார்க்க முடிகிறது, அதனால்தான் அவரிடம் அந்த நிருபர் அப்படி நடந்துகொண்டார் என எண்ணத்தோன்றுகிறது. மனோபாலாவிற்கு இன்னொரு பக்கமிருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இவர் பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராக இருந்து சினிமாவைக் கற்றவர். அங்கிருந்து வெளிவந்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர் , அப்போதைய பல முன்னணி நடிகர்களை இயக்கியவர், இவை அனைத்திலும் இவரின் திறமையின் உச்சம் என நான் கணிக்கும் சம்பவமொன்றுள்ளது.

மனோபாலாக்கான பட முடிவுகள்"

80 களில் நடிகர் “மைக் ” மோகன் மிக மிக மிகப் பிஸியாக இருந்தகாலம். மனோபாலாவுக்கு அவரை வைத்து எப்படியாவது ஒரு படம் இயக்கிவிடவேண்டுமென்று ஒரு அவா. ஏதோவிதமாக மோகனின் கையைக் காலைப் பிடித்து சம்மதம் வாங்கிவிட்டார் ஆனால் இரவுபகலாக ஓடியோடி நடித்துக்கொண்டிருந்த மோகன் ஒரு கண்டிஷன் போட்டார். அதாவது வெறும் 9 நாட்கள் மட்டும்தான் நடிக்கும் தேதி தருவேன் இவற்றில் பெரும்பாலானவை இரவு நேரங்கள். இதற்கு சம்மதமென்றால் நடிக்கத் தயார். மனோபாலா மகிழ்ந்துபோனார், உடனேயே சரி என ஒப்பந்தம் போட்டுவிட்டார் , அவருக்குத் தன் திறமைமேலேயும் தன் திறமையை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு தனக்கு உதவப்போகும் இன்னொருவர் மேலேயும் அதீத நம்பிக்கையிருந்தது. அந்த இன்னொருவர் ……. இசைஞானி.

மனோபாலாக்கான பட முடிவுகள்"

தன் நிலையைச் சொன்னதும் ஞானியார் அழகான அற்புதமான இரு பாடல்களைப் போட்டுக் கொடுத்தார். அதிலே ஒன்று ஜெயச்சந்திரன் தனியாகவும் ஜானு அம்மா குழந்தைக் குரலிலும் பாடி அசத்திய ராஜாமகள் ரோஜாமகள் என்ற சுப்பர் மெலடியும் மற்றயது அழகே அழகே என்னோடு வா என்ற வாசுவின் பாட்டும். இந்தப்பாட்டில் ஞானியாரின் ஆஸ்தான தப்லாக் கலைஞர் ஐயா கண்ணையா தப்லா வாசிப்பில் பிரிச்சு மேய்ந்திருப்பார்.

இளையராஜா மனோபாலாக்கான பட முடிவுகள்"

கொடுக்கப்பட்ட அந்தக் குறுகிய தேதிக்குள் மோகனுக்கான அட்டகாசமான திரைக்கதையமைத்து காட்சிகளைக் கவித்துவமாகப் படமாக்கி முடித்துவிட்டு ஞானியாருக்குப் போட்டுக் காட்டினார் மனோபாலா. அது ஒரு திறில்லர் படம். மோகனுடன் அப்போதைய பேபி ஷாலினி ( இப்போது அஜித்தின் மனைவி ) மோகனின் மகளாக முக்கிய பாத்திரத்தில் பின்னிப்பெடெலெடுத்திருப்பார். அதைப் பார்த்து மகிழ்ந்த ஞானியார் அந்தத் திரில்லருக்குப் போட்டுக்கொடுத்த பின்னணியிசைதான் தமிழ்த் திரைவரலாற்றின் முதல் இசைத்தட்டில் வெளியாகிய பின்னணியிசை.

மோகன்க்கான பட முடிவுகள்"

படம் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட்.. அப்போது யாழ்ப்பாணத்தில் அதை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர்களில் நானும் ஒருவன். உண்மையில் அப்போது தமிழ்த்திரையில் அதுதான் சிறந்த த்ரில்லர். அந்தப்படம் வெளியாகி ஒரே இரவில் மனோபாலாவை புகழின் எங்கோ உயரத்துக்குக் கொண்டு சேர்த்தது வரலாறு. அதன்பின் எத்தனையோ தரமான வெற்றிப்படங்களைக் கொடுத்த திறமையான இயக்குனர் அவர். அப்பேற்பட்ட திறமைசாலியை மட்டமாக கேலி பண்ணுகிறார் ஒருவர்.

இளையராஜா imageக்கான பட முடிவுகள்"

இறுதியில் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

அரைவேக்காடு பொடியர்களால் வெறும் நகைச்சுவையாளனாக கணிக்கப்பட்டு கேள்வி கேட்கப்பட்ட மனோபாலாவை விஜயகாந்த் சத்யராஜ் போன்ற உச்ச நட்சத்திரங்கள் அவர்கள் மிக உச்சத்தில் இருந்த காலத்தில்கூட ஒருபோதும் பேர்சொல்லி அழைத்ததில்லை, விஜயகாந் இவரை டைரக்டர் சார் என்றும் சத்யராஜ் தலைவா என்றுமே அழைப்பார்கள் என நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தவர் மனோபாலா .

ம்ம்ம்ம் யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே!

-கலைச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More