கட்டாரில் ஊள்ள அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் சில மத்தியக் கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடின.
இதனால் டுபாய் மற்றும் கட்டாரின் டோஹா விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் நிர்க்கதியாகியுள்ளனர்.
டுபாய் விமான நிலையத்தில் சுமார் 145 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 450க்கும் அதிகமான விமான சேவைகள் தாமதமாகியுள்ளன. இந்தத் தகவல்களை FlightRadar24 சுட்டிக்காட்டியுள்ளது.
டுபாய் விமான நிலையத்தை கடந்த ஆண்டு 92.3 மில்லியன் பயணிகள் கடந்துசென்றனர். நாளொன்றுக்குச் சுமார் 250,000 பேரை டுபாய் விமான நிலையம் கையாள்கிறது.
உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கும் டுபாய் விமான நிலைய சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளமையால் விமான நிலையத்தில் பயணிகள் பலர் நீண்ட வரிசையில் நிற்பதாகச் சொல்லப்பட்டது. எனினும், இது தொடர்பில் டுபாய் விமான நிலையமும் டுபாய் அரசாங்க ஊடக அலுவலகமும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அத்துடன், டோஹா விமான நிலையத்தில் சுமார் 25,000 பேர் காத்திருப்பதாக Virgin Australia விமான நிறுவனம் கூறியது.
ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பல்லாயிரம் விமானச் சேவைகள் மத்தியக் கிழக்கு நாடுகள் வழி செல்கின்றன. ஏற்கெனவே, British Airways, Lufthansa ஆகியவை மத்திய கிழக்கிற்குச் செல்லும் சில விமானச் சேவைகளை நிறுத்தி வைத்திருந்தன.
வார இறுதியில் கட்டாரில் உள்ள விமானத்தளம் தாக்கப்பட்டதும் டுபாய் போன்ற பெரிய விமான நிலையங்களுக்கான சேவையையும் நிறுத்திவிட்டன.