சட்டவிரோத வேலைகளை ஒழிப்பதன் மூலம் நிகர இடம்பெயர்வைகுறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், குடிவரவு அமலாக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது.
செப்டம்பர் 2025 வரையிலான ஓராண்டில், குடிவரவு நிலை மற்றும் ஏதேனும் குடிவரவு குற்றங்கள் குறித்து சோதனையிட, வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு 21,858 வருகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் ஓராண்டில் 38 சதவிகித அதிகரிப்பை காட்டுகிறது.
செப்டம்பர் 2012 வரையிலான ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட 13,990 வருகைகளுடன் ஒப்பிடுகையில் இது 56 சதவிகித அதிகரிப்பாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2015 வரையிலான ஓராண்டில் 20,989 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இது ஒரு உச்ச நிலையாக இருந்தது.
அதிகாரிகளின் இந்த அமலாக்க வருகைகள் வணிகங்கள் அல்லது வீட்டு முகவரிகளுக்கு ஒருவரின் நிலையை, அல்லது சட்டவிரோத வேலை அல்லது பிற குடிவரவுக் குற்றங்களை சரிபார்க்க மேற்கொள்ளப்படலாம்.
சட்டவிரோத வேலைகளைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட வருகைகள் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 11,052 ஆக இருந்தது. இது முந்தைய 12 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 7,343 வருகைகளை விட 51 சதவிகிதம் அதிகமாகும்.
மேலும், செப்டம்பர் வரையிலான ஓராண்டில் 8,232 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இது அதற்கு முந்தைய 12 மாதங்களில் இருந்த 5,043 கைதுகளை விட 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, நாட்டிற்கு சட்டவிரோதமாக வருபவர்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் சட்டவிரோத வேலைகளை ஒடுக்குவதற்கு அமைச்சர்களின் முயற்சியாக அமைந்துள்ளது.
உள்துறைச் செயலாளர் ஷபனா மஹ்மூத், “சட்டவிரோத வேலைகள் சட்டவிரோதமாக இந்த நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் நபர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைகிறது. இனியும் அது நடக்காது” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “பியூட்டி சலூன்கள், கார் கழுவும் இடங்கள் மற்றும் டெலிவரி டிரைவர்களாக சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள், தடுத்து வைக்கப்படுவார்கள், மேலும் இந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்” என்றார்.
அத்துடன், இங்கிலாந்தின் எல்லைகளைப் பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
குடிவரவு அமலாக்கத்திற்கு, டேக்அவே கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் கார் கழுவும் இடங்கள் போன்ற தளங்களில் சட்டவிரோதமாக பணிபுரியும் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் மற்றும் வெளியேற்றவும் £5 மில்லியன் நிதி வழங்கப்பட்டது.