அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் மாநிலத்தில் உள்ள பிரவுன் (Brown) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரை பொலிஸ் தீவிரமாக தேடி வருகிறது.
வீதியில் நடந்து செல்கின்ற ஒருவரின் வீடியோ பொலிஸாரால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்ததாகவும், முகம் தெளிவாக தெரியாத நிலையில் முகமூடி அணிந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 08 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறியியல் துறை கட்டடத்திற்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதுடன், வளாகத்தில் உள்ள அனைவரும் கதவுகளைப் பூட்டி, கைபேசிகளை ஒலியின்றி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெருக்கடி நிலை தொடர்வதாக பல்கலைக்கழகம் தனது X சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது.
இதுவரை எந்த சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் ஒருவர் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அது தவறான தகவல் என பல்கலைக்கழகம் விளக்கமளித்தது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோட் ஐலண்ட் மாநிலத்தில் பள்ளி அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கு முன் 2008ஆம் ஆண்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இவ்வாண்டு மட்டும் அமெரிக்க பள்ளிகளில் 70க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.