தனது புற்றுநோய் சிகிச்சை குறித்து சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி செய்திக்கு கிடைத்த நேர்மறையான எதிர்வினைகள் மன்னர் சார்லஸை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
சேனல் 4 இன் Stand Up To Cancer பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையில், தனது புற்றுநோய் சிகிச்சை தற்போது குறைக்கப்பட்டுவருவதாக மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.
அத்தடன், “ஆரம்பகால நோயறிதல் எளிமையாகவே உயிர்களைக் காப்பாற்றும்” எனக் கூறி, புற்றுநோய் பரிசோதனை வாய்ப்புகளை மக்கள் தவறவிடக் கூடாது என்றும் மன்னர் வலியுறுத்தினார்.
மன்னருக்கு எந்த வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது வெளியிடப்படவில்லை. அவர் தொடர்ந்து சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
புற்றுநோய் பரிசோதனை திட்டங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதில் இந்த உரை உதவியிருப்பதை மன்னர் குறிப்பாக பார்த்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தனது தனிப்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல பயன் கிடைத்தால், அதைச் செய்வது தனது கடமை என்றும் மன்னர் கருதுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களை பராமரிப்பவர்களுக்கும் மன்னரின் எண்ணங்களும் அன்பான வாழ்த்துகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த உரை ஒளிபரப்பப்பட்ட பின்னர், Cancer Research UK அமைப்பின் புதிய ஆன்லைன் ஸ்கிரீனிங் செக்கரை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 5 முதல் இதுவரை சுமார் ஒரு இலட்சம் பேர் அந்த இணைய கருவியை பயன்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மன்னரின் உரை ஒளிபரப்பப்பட்ட வெள்ளிக்கிழமை இரவுக்குப் பிறகே வந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆன்லைன் கருவி மூலம், மக்கள் தங்கள் வாழும் பகுதியில் NHS மற்றும் பொது சுகாதார அமைப்புகள் வழங்கும் புற்றுநோய் பரிசோதனைகளுக்குத் தகுதியுடையவர்களா என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.