அமெரிக்க நீதித்துறை, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வைத்திருந்த ஆவணங்களில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளியிடப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்ற பல புகைப்படங்கள் மறைக்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பாக டோனல்ட் டிரம்ப் தொடர்புடைய ஒரு படம் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆவண வெளியீட்டில் அரசியல் நோக்கத்துடன் கூடிய சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் செனட் சபைத் தலைவர் சக் ஷுமர், “ஆவணங்களில் இன்னும் என்னென்ன தகவல்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜெஸ் மைக்கல்ஸ், வெளியிடப்பட்ட ஆவணங்களில் தாம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் இடம்பெறவில்லை என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணங்களில் பல பிரபலங்களும் அரசியல்வாதிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களில் ஒருவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தற்போது வெளியிடப்பட்டவை மொத்த எப்ஸ்டீன் ஆவணங்களில் ஒரு பகுதியே என துணைத் தலைமைச் சட்ட அதிகாரி டொட் பிளான்ச் விளக்கமளித்துள்ளார்.
சிறு பிள்ளைகளை பாலியல் குற்றங்களுக்காகக் கடத்திய குற்றச்சாட்டில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு 17 ஆண்டுகளுக்கு முன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர் 6 ஆண்டுகளுக்கு முன் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.