ஈரானில் தயாரிக்கப்படும் ‘ஷாஹெட்’ (Shahed) வகை தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான விசேட இராணுவ ஒத்துழைப்பை வழங்குமாறு அமெரிக்கா உக்ரேனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ‘X’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானிய ஷாஹெட் ட்ரோன்களை கையாள்வதில் “குறிப்பிட்ட ஆதரவு” வழங்குமாறு, அமெரிக்கா கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவற்றை எதிர்கொள்ள உக்ரேன் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நீடித்து வரும் போரின் போது, ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஷாஹெட் ட்ரோன்களை உக்ரேனிய இராணுவம் எதிர்கொண்டுள்ளது. இதன் மூலம் அவற்றை குறைந்த செலவில் கண்டறிந்து தடுக்கவும் அழிக்கவும் உக்ரேன் முக்கியமான அனுபவத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் முன்னேற்றமான ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டிருந்தாலும், ஈரானிய ட்ரோன் தொழில்நுட்பத்தை நேரடியாக போர்க்களத்தில் எதிர்கொண்ட அனுபவம் தற்போது அமெரிக்காவுக்கு தேவையாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தனது பதிவில் உக்ரேனின் நிலைப்பாட்டை விளக்கிய செலென்ஸ்கி, “எமது நாட்டின் பாதுகாப்பிற்கும் எமது மக்களின் உயிரைக் காக்கவும் உதவி செய்த பங்காளி நாடுகளுக்கு உக்ரேன் எப்போதும் தனது ஆதரவை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்போதைய போர் சூழ்நிலை குறித்து உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையில் தினசரி ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.