விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் சோ்வைக்காரன்பட்டி, திருத்தங்கல், கோவிந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆலையில் 35-க்கும் அதிகமான தொழிலாளா்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டனா்.
பிற்பகல் 3.30 மணியளவில் இந்த ஆலையில் சரவெடி தயாரித்துக் கொண்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிமருந்து உராய்வு காரணமாக தீப்பற்றி பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது.
தகவலறிந்த சாத்தூா், சிவகாசி, விருதுநகா் பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, விருதுநகா், அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து மருத்துவ அவசர ஊா்திகள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, உயிரிழந்த 23 தொழிலாளா்களின் உடல்களும் மீட்கப்பட்டன. சிலரின் உடல்கள் தீயில் பெருமளவு கருகியிருந்ததாலும், சிலரின் உடல் பாகங்கள் சிதறியிருந்ததாலும் உயிரிழந்தவா்களை உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தது. மீட்கப்பட்ட உடல்கள் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களில் 21 பெண்கள், 4 ஆண்கள் என 25 பேர் தெரியவந்துள்ளது. இதில் 20 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு பெற்றுள்ளது. உயிரிழந்தவா்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
பல்வேறு விதிமீறல்கள் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது.