ஐரோப்பாவின் பாதுகாப்பு அமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை நோர்வே மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் தங்களின் இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, ஐரோப்பிய பாதுகாப்பு தன்னாட்சியை மேம்படுத்தும் நோக்கத்திலும் செயல்படுகின்றன.
இதுவரை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவையே பெரிதும் நம்பி வந்த நோர்வே, தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு புதிய பாதுகாப்பு அணுகுமுறையைத் தேர்வு செய்துள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் தங்களது சொந்த பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் முன்னெடுத்து வரும் அணுசக்தி பாதுகாப்பு வளையத்தில் இணைய நோர்வே சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பிரான்ஸின் அணுஆயுதத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உத்திகளில் நோர்வே முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைதிக்காலங்களில் நோர்வே நிலப்பரப்பில் எந்தவோர் அணுஆயுதமும் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளும் பிரான்ஸின் பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருந்த நிலையில், தற்போது நோர்வேயும் அதில் இணைவது ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் நேட்டோ அமைப்பின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வலிமையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, பாதுகாப்புச் செலவுகளை ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து ஷகொள்ளும் வாய்ப்பையும் இது உருவாக்குகிறது. இதன்மூலம் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, ஐரோப்பா தன்னாட்சி பாதுகாப்பு திறனை வளர்த்துக்கொள்ளும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.