இங்கிலாந்தின் பல பகுதிகளில் திங்கட்கிழமை முதல் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்பதால், ‘ஆம்பர்’ மற்றும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் வெப்பநிலை 34°C வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலண்டன், தென்கிழக்கு, கிழக்கு இங்கிலாந்து மற்றும் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 09 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு, யார்க்ஷயர் மற்றும் ஹம்பர், மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகளுக்கு குறைவான தீவிரம் கொண்ட மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் வடக்கு இங்கிலாந்து மட்டுமே இத்தகைய வெப்ப எச்சரிக்கை இல்லாத ஒரே பகுதியாகும்.
இந்த அதீத வெப்பநிலை காரணமாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளில் கணிசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் இடையே உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பிரான்ஸில் இருந்து வரும் வெப்பக் காற்று காரணமாக இன்று திங்கட்கிழமை வாரத்தின் வெப்பமான நாளாக இருக்கும். இலண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை 34°C ஐ எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மிட்லாண்ட்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 30°C அல்லது அதற்கும் அதிகமாக இருக்கக்கூடும்.
அதே சமயம், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு இங்கிலாந்து பகுதிகளில் மேகமூட்டத்துடனும் மழையுடனும் வானிலை காணப்படும். வாரத்தின் நடுப்பகுதியில் இருந்து அட்லாண்டிக் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றினால் இந்த வெப்பம் தணியத் தொடங்கும்.
இந்த வார வெப்பத்தைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதம் முழுவதும் பொதுவாக வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தெற்கு இங்கிலாந்தில் நிலவும் வறட்சி நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் வறட்சி நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.