இங்கிலாந்தின் டயன்சைடு (Tyneside) பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள், தாங்கள் தினசரி எதிர்கொள்ளும் கடுமையான பெண் வெறுப்பு மற்றும் வன்முறை மிரட்டல்கள் குறித்துப் பேசியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விழிப்புணர்வுப் படம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
பாடசாலைகளில் சிறுவர்கள், தங்களுக்குப் பிடித்தமான மாணவிகளின் வரிசையை ‘பாலியல் வன்புணர்வுப் பட்டியல்’ என்ற பெயரில் தயாரிப்பதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இது தங்களை மதிப்பற்றவர்களாகவும், அச்சமாகவும் உணர வைப்பதாக ஒரு மாணவி கூறினார்.
வன்முறை மற்றும் பாலியல் ரீதியான கருத்துகள் பெரும்பாலும் ‘நகைச்சுவை’ என்ற பெயரில் முன்வைக்கப்படுகின்றன.
பாதுகாப்பாக உணர மாணவிகள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்கின்றனர். குறிப்பாக, இரவில் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பது மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள நீண்ட தூரப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்க மனப்பான்மை, சிறுவர்களிடையே ஆக்ரோஷமான மொழியைத் தூண்டுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறுவர்களுக்குச் சரியான எதிர்கால வழிகாட்டுதல்கள் இல்லாதது இத்தகையப் போக்குகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் அலெக்ஸ் ப்ளோவர் குறிப்பிடுகிறார்.
மேலும், 15 முதல் 17 வயதுடைய மாணவிகள் தங்களின் முதல் உறவிலேயே வன்முறையைச் சந்திப்பதையும், அதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதுவதையும் காண முடிகிறது என்று சமூக ஆர்வலர் கேத்தரின் மார்ச்சண்ட் கவலை தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பாதியாகக் குறைக்கும் நோக்கில் இங்கிலாந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகப் பாடசாலைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த 16 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், ஆரோக்கியமான உறவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் குறித்துப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.