மேற்கு ஸ்கொட்லாந்தில் பஸ் பயணங்களுக்கான கட்டணம், எதிர்வரும் திங்கட்கிழமை காலை முதல் £2ஆக வரையறுக்கப்படும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி அறிவித்துள்ளார்.
கிளாஸ்கோ, ரென்ஃப்ரூஷயர், அயர்ஷயர், டன்பார்டன்ஷயர், லானார்க்ஷயர் மற்றும் இன்வர்க்லைட் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பஸ் பயணங்களுக்கு இந்தக் கட்டண வரையறை நடைமுறைக்கு வருகிறது.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை விளக்கும் Programme for Government ஆவணத்தில், ஸ்கொட்லாந்தின் சுகாதார வாரியங்களின் எண்ணிக்கையை 14இல் இருந்து இரண்டாகக் குறைக்கும் திட்டத்தையும் ஸ்வின்னி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவையில் மேற்கொள்ளப்படவுள்ள “மிகவும் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சீர்திருத்தம்” இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
2031ஆம் ஆண்டுக்குள் எந்தவொரு நோயாளியும் தமக்குத் தேவையான சிகிச்சைக்காக 26 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் ஸ்வின்னி உறுதியளித்துள்ளார். எனினும், 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிமொழியுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த இலக்காகக் கருதப்படுகிறது. அப்போது, நோய் கண்டறியப்பட்ட பின்னர் உள்நோயாளி அல்லது ஒரு நாள் சிகிச்சைக்காக நோயாளிகள் 12 வாரங்களுக்கு மேல் காத்திருக்கக் கூடாது என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் ஏழாவது அமர்வுக்கான முதலாவது Programme for Government இதுவாகும். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சட்டமியற்றும் இலக்குகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒரு வழிப் பஸ் பயணத்திற்கான கட்டணத்தை இந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்குள் £2 ஆகக் குறைப்பது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) தேர்தல் அறிக்கை உறுதிமொழியாகும்.
தற்போது ஹைலண்ட்ஸ் மற்றும் தீவுகள் பகுதிகளில் ஏற்கனவே £2 கட்டண வரையறை நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தத் திட்டம் ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்கும் எப்போது விரிவுபடுத்தப்படும் என்பதை ஸ்வின்னி குறிப்பிடவில்லை.