ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியைச் சந்தித்த அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், உக்ரைனுக்கான மேலதிக நிதியுதவியாக 60 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது உக்ரைன் ஜனாதிபதியைக் கட்டியணைத்து வரவேற்ற அவுஸ்திரேலியப் பிரதமர், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்குப் பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகளில் செலென்ஸ்கி வெளிப்படுத்திய விதிவிலக்கான தலைமைத்துவத்துக்குத் தனது பாராட்டுகளையும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 60 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் சேர்த்து, உக்ரைனுக்கு அவுஸ்திரேலியா வழங்கிய ஒட்டுமொத்தப் பங்களிப்புத் தொகை சுமார் 1.9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தினார்.
உக்ரைனின் கடற்படையைப் பலப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தலைமையில் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தில் அவுஸ்திரேலியாவும் இணைந்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையே 10 ஆண்டுகள் காலப்பகுதிக்கான முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றும் இச்சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாகக் கையெழுத்தானது.