செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சிரியா – ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் அகதிகள் மீள்குடியேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம்

சிரியா – ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் அகதிகள் மீள்குடியேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம்

1 minutes read

சிரியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வரும் நிலையில், அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படலாம் என ஐரோப்பிய இராஜதந்திரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மனித உரிமைகள், அரசியல் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் போன்ற முக்கிய விடயங்கள் புறக்கணிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சிரியாவில் பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வர்த்தகம், அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் பரந்த ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தால் எஞ்சியுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு சிரியா முன்னுரிமை அளித்து வருகின்றது. அதேவேளை, சிரிய அகதிகளை மீள அழைத்துச் செல்வது மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐரோப்பிய ஒன்றியம் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற போரின்போது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். ஐரோப்பாவில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அகதிகள் தொடர்பான விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், பல ஆண்டுகளாக இடம்பெற்ற போர் மற்றும் ஆட்சியின் பாதிப்புகளிலிருந்து சிரியா இன்னும் முழுமையாக மீளவில்லை. வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அடிப்படைச் சேவைகளின் பற்றாக்குறை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் தொடர்கின்றன.

சுமார் ஒரு மில்லியன் சிரியர்கள் ஏற்கனவே தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் லெபனான், துருக்கி மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிரியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக அகதிகளை விரைவாகத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்றும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக அந்நாட்டின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நிவாரண அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.