பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 500 இந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டம், குண்டாவில் நடைபெற்ற ஸ்ரீ ராம கதா மகோத்சவத்தில் பங்கேற்ற அவர்கள், குடியுரிமை வழங்கப்படாத தங்களது நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
ஜன் சத்தா தளம் கட்சியின் தலைவரும் குண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜா பையா ஏற்பாடு செய்திருந்த இந்த ஆன்மிக நிகழ்வில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறப்பு முகாமில் தங்கியிருக்கும் 500 பாகிஸ்தான் இந்துக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் 10 பஸ்களில் நேற்று ஜோத்பூருக்குத் திரும்பினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஹீராலால் என்பவர், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஜோத்பூரில் தஞ்சமடைந்த தாங்கள், அங்குள்ள சிறப்பு முகாமில் வசித்து வருவதாகவும், இதுவரை தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். எனவே, குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
