ராய்ப்பூர்: ‘வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் எதிர்காலத்தைப் பறிக்க விரும்புகிறது மத்திய அரசு,’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூரில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நேற்று முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
காந்திபேசியதாவது:
விவசாயிகளுக்கு காங்கிரஸ் என்ன வாக்குறுதி கொடுத்ததோ, அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதற்கு நேர் எதிரான வேறு பாதையில் சென்று கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானத்தையும், எதிர்காலத்தையும் பறித்து 2, 3 பெரும் முதலாளிகளிடம் கொடுக்க முயன்று வருகிறது.
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பையும், ஜிஎஸ்டியையும் கொண்டு வந்ததின் விளைவாக இன்று வேலைவாய்ப்பின்மை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு மாறாக சட்டீஸ்கர் அரசு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.