Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும்!

3 minutes read

புதுடெல்லி: தமிழகத்துக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், கூடுதலாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை, ஒன்றிய அமைச்சர்களிடம் டெல்லி சென்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலையின் பாதிப்பு அதிகமாக இருந்த இக்கட்டான காலகட்டத்தில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து அவர் எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக, தற்போது கொரோனா நோய் பரவல் தமிழகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழப்பு சரிந்தது. எனினும், தடுப்பூசி விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப கொடுக்காமல் ஒன்றிய அரசு குறைத்து வழங்கி வருகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மாநிலங்களுக்கு இடையேயான பாரபட்சம் என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்கும் விதமாக, ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க விமானம் மூலம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

இதையடுத்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழநாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர் பயணத்தின் முதலாவதாக நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து 3மணிக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த இரண்டு சந்திப்பின்போதும் நீட் தேர்வு, தடுப்பூசி உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.


இதையடுத்து, புதிய தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஒன்றிய அமைச்சர்களை அவர்களது அமைச்சகத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்துக்கு தேவையான அனைத்து கோரிக்கைகள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் முதலாவதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானை சந்தித்தேன். அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் இந்த தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகின்றனர். கடந்த நான்கு ஆண்டில் மட்டும் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேப்போன்று மாநில கல்வி, மத்திய கல்வி ஆகிய பாடத்திட்டங்களில் பல வேறுபாடுகள்உள்ளன. ஒன்றிய அரசு அதனை கருத்தில்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டோம். இதனை கேட்ட ஒன்றிய அமைச்சர், நீட் தேர்வின் சாதக பாதகங்கள் அனைத்தும் தெரியும். இருப்பினும் பிராந்திய மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே என தெரிவித்தார். ஆனால், நீட் தேர்வில் இருந்து முழுமையாக தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதுதான் எங்களது முக்கிய கோரிக்கை என மீண்டும் வலியுறுத்தினோம். அதேபோன்று நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை தொடர்பாகவும் அவரிடம் எடுத்துரைத்தோம். இதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கோரிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக அவர் கூறினார். உங்களது கோரிக்கை கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதியளித்தார். ஒருவேளை, நடப்பாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவது தாமதம் ஆனாலும், அடுத்தடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் கண்டிப்பாக விலக்கு பெறுவதற்கான அத்தனை முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில் குறிப்பாக கடந்த 2006- 2007ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறப்பு ஆணையம் அமைத்து அதன் மூலம் நீதிமன்றத்தை நாடி விலக்கு பெற்றார். தற்போதும் அவ்வாறு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.


அடுத்ததாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன். கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் பற்றாக்குறையாக உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும்போது அதற்கான தடுப்பூசிகள் போதிய அளவு இல்லாமல் இருக்கிறது. அதனால் கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும். இதைத்தவிர மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதையடுத்து கட்டிட பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மதுரையை போன்று கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி உள்ளோம். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அமைச்சர், இரண்டு நகரத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என எங்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு அதுகுறித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும், அதில் இடஒதுக்கீடும் முறையாக வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 


₹800 கோடி ஒதுக்கீடு

கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவும், 3ம் அலையில் இருந்து தப்பிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும் தமிழகத்துக்கு ரூ.1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம். இதனை கேட்ட ஒன்றிய அமைச்சர் முதல் தவணையாக ரூ. 800 கோடியை இன்றே(நேற்று) ஒதுக்கீடு செய்து தமிழகத்துக்கு கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததோடு, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக உள்ளது என்பதை கவனித்து வருவதாக கூறி அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டும் தெரிவித்ததாக, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


நான்கு கூடுதல் மையங்கள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நகரங்களை சேர்த்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்கள் 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More