டெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
இதில் பெகாசஸ் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, புதிய வேளாண் சட்டங்களை நீக்குவது தொடர்பாகவும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், விவாதம் நடத்த அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால், கடும் அமளி காரணமாக கூட்டத் தொடர் தொடர்ந்து முடங்கி உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பேச்சை கேளுங்கள் மோடி என்று வாசகங்களுடன் 10 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை அடங்கிய 3 நிமிட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விவாதம் கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கைகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்ற முடக்கத்துக்கு மத்திய அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.