திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அதிகஅளவு தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மகர விளக்கு பூஜையின் போது பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:-
மகர விளக்கு சீசனின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
இம்முறை சுமார் 1 ½ லட்சம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. இதற்காக கோவிலில் கூடுதல் வசதிகள் செய்யப்படும். மகர ஜோதி தரிசனம் காணவும், அதிக இடங்கள் ஒதுக்கப்படும்.மேலும் பம்பை ஹில்டாப்பிலும் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் காலங்களில் இதுவரை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
அப்பம், அரவணை விற்பனை மற்றும் காணிக்கை மூலம் வருவாய் ரூ.110 கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விடஅதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.