சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையிலும், தை பூசத்தை முன்னிட்டும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு தங்கி தங்கள் மேல்படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், வருகிற 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் இதேநிலைதான் நீடித்து வருகிறது. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பண்டிகைக்கு, 2 தினங்கள் மட்டுமே உள்ளன. தொடர்ந்து விடுமுறை வருவதால் நேற்றே சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதனால் நேற்று பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து 75 சதவீதம் பயணிகளுடன் இயக்கப்பட்டன. ஊருக்கு செல்வதற்கு வசதியாக இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் இன்றும், நாளையும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கலில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து, காய்கறிகள் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பொங்கல் புத்தாடை வாங்கவும் ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் திருநாளை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் வகையிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும் திங்கட்கிழமையை அரசு விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் ஜகந்நாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ம்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வருகிற 14ம்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், வரும் 16ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதாலும், 18ம்தேதி தைப்பூச திருநாள் அன்று அரசு விடுமுறை என்பதாலும், இடைபட்ட நாளான 17ம்தேதி திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைபட்ட நாளான 17ம்தேதி (திங்கட்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் 29ம்தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிவுச் சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை.
எனவே, அவசர அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கான தகுந்த ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 14ம் தேதி பொங்கல் திருநாள், மறுநாள் 15ம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 17ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. 18ம் தேதி தைப்பூசம் என்று தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- பொங்கல் மற்றும் தைப்பூச திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17ம் தேதி (திங்கட்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.