Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை!

3 minutes read

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு தொகையும் முதல்வர் வழங்கினார். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் உலகம் போற்றும் திருக்குறள் நூலை இயற்றிய அய்யன் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர், 1970ம் ஆண்டு முதல் தைத்திங்கள் இரண்டாம் நாள் ‘‘திருவள்ளுவர் திருநாள்” எனவும், அதனை விடுமுறை நாளாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு தைத் திங்கள் இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை மாலை அணிவித்தும், மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளுவருக்கான நினைவகமாக 1976ம் ஆண்டு சென்னையில் வள்ளுவர் கோட்டம் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மேலும், 2000ம் ஆண்டு கலைஞர் கன்னியாகுமரியில் 133 அடி உயர பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலையை நிறுவி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருக்குறளின் சிறப்பினை மாணவ செல்வங்கள் அறிந்து கொள்ளும் வகையில், 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களை பாராட்டி குறள் பரிசு தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது ரூ.10,000 குறள் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று காலை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ‘‘தீராக்காதல் திருக்குறள்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘குறளோவியம்’ பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, அதனை தொடர்ந்து, வான்புகழ் வள்ளுவன் இயற்றிய, முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய, உலக பொதுமறையாம் திருக்குறள், இன்றைய தலைமுறையினரை சென்றடையும் வகையில் ‘‘தீராக்காதல் திருக்குறள்” என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நிதிஉதவியோடு, தமிழ் இணைய கல்விக்கழகத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவதாக, ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, குறட்பாக்களின் செம்மாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தினசரி மேசை நாட்காட்டியாக அச்சிடப்பட்டும், அழகுற வரையப்பட்ட சிறந்த ஓவியங்களை தொகுத்து காலப்பேழை புத்தகமாகவும், நிகழும் திருவள்ளுவராண்டு 2053, தைத்திங்கள் 2ம் நாளான திருவள்ளுவர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் எழுப்பிய வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வெளியிட்டார். மேலும், இப்போட்டியில் பங்கேற்று பள்ளி அளவிலான பிரிவில் முதல் பரிசு பெற்ற செல்வி கு.ஜெய்கீர்த்தன்ஹா (சிந்திமாடல் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை), இரண்டாம் பரிசு பெற்ற செல்வன் பு.கீர்த்திவாசன் (வேலம்மாள் வித்யாலயா, ஆலப்பாக்கம், சென்னை) மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற செல்வி மோ.சு.பிருந்தா (ஸ்ரீராமகிருஷ்ணாமிஷன் வித்யாலயா, சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்) மற்றும் கல்லூரி அளவிலான பிரிவில் முதல் பரிசு பெற்ற வெ.ராஜேஷ், (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்), இரண்டாம் பரிசு பெற்ற திரு.ஆ. பாலாஜி (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்), மூன்றாம் பரிசு பெற்ற க.ராஜேஷ் (அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை) ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அத்துடன், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் திரு.மு.பாலாஜி பிரசாத் சிறப்பாக ஓவியம் வரைந்ததைப் பாராட்டி அவருக்கு முதலமைச்சர் சிறப்பு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More