
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்களுக்கு பிற்போக்கான அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற்றிட்டங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை தொடர்பில் மிகவும் மூத்த இடதுசாரித் தலைவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, நவ சம சமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன, பிற்போக்கான அரசாங்கம் சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அவ்வாறான நிலைமையின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு உங்களால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு தொடர்பில் தாம் மகிழ்ச்சி அடைகின்றோம் என ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பிற்போக்கான தற்போதைய அரசாங்கம் சிறுபான்மையினருக்கு கவலையை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மூத்த இடதுசாரி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு நாம் வழங்கும் ஒத்துழைப்பு சிறுபான்மை சமூகங்களின் அச்சத்தை போக்க உதவும் எனவும் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.
பிற்போக்கான அரசாங்கத்தினால் சிறுபான்மையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது அவர்களை அரசாங்கத்தினால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது தொடர்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன எந்தவொரு விடயத்தையும் குறிப்பிடவில்லை.
முன்னதாக கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தமிழ் சமூக படுகொலையாளியான சாஜன்ட் சுனில் ரத்நாயக்கவை விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து விக்ரமபாகு கருணாரத்ன கடுமையாக விமர்சித்திருந்தார்.
எனினும் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் இனவாதம், மதவாதம் மற்றும் இராணுவ வாதத்திற்கு எதிராக பல தசாப்தகாலமாக போராடும் முற்போக்கான ஒருவராக பார்க்கப்படும் நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
தற்போதைய பாசிச ஆட்சிக்கு எதிராக போராடும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் நவ சம சமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.