20ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலத்திலிருந்து பின்வாங்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “20 ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.
நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அமைச்சரவைக்கு இது தொடர்பில் கால அவகாசம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்பட்டன.
அவற்றைக் கருத்தில் கொண்டு அவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இதனைத் தயாரிப்பதற்கு முன்னிற்கு செயற்பட்டவர் ஜனாதிபதி.
இருப்பினும் இது தொடர்பில் முழுமையான பொறுப்புடன் செயற்படுவது அமைச்சரவையாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.