Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புலம்பெயர்ந்தோரின் பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு அவசியம்! | ஆஸ்திரேலியா

புலம்பெயர்ந்தோரின் பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு அவசியம்! | ஆஸ்திரேலியா

2 minutes read

ஆஸ்திரேலியாவுக்கு பார்வையாளர் விசாவில் செல்பவர்கள் ‘வெளிநாட்டுப் பார்வையாளருக்கான மருத்துவ காப்பீட்டை’( Overseas Visitor Health Cover) கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை.

Overseas Visitor Health Cover (OVHC) என்பது ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் பணியாற்றுபவர்கள், அல்லது சுற்றுலாவாசியாக வந்திருப்பவர்கள் கொண்டிருக்க வேண்டிய மருத்துவ காப்பீடாகும். 

இந்த நிபந்தனையால், ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது மகன், மகள் அல்லது குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான ஆஸ்திரேலிய மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீடு வழங்க விரும்புவதில்லை. இப்படியான சூழலினால் புலம்பெயர்ந்தவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது என்பது கடினமான ஒன்றாக மாறியுள்ளது. 

கொரோனாவால் ஏற்பட்ட கடுமையான சூழல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த குடியேறியான ஜஸ்லீன் கவுர் அவரது தந்தை மற்றும் மாமியாரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

அவர்களுக்காக மருத்துவ காப்பீடு எடுக்க முயன்ற அனுபவத்தைக் கூறும் ஜஸ்லீன் கவுர்,“நான்  Bupa, Medibank உள்ளிட்ட பெரும்பாலான முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுக்கு அழைத்துப் பேசினேன். ஆனால், அவர்களின் வயது காரணமாக ஒரு நிறுவனம் கூட காப்பீடு வழங்க முன்வரவில்லை,” என்கிறார். 

பார்வையாளர் விசா நிபந்தனை 8501-ன் படி, விசாவாசி ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் நேரத்தில் தேவையான மருத்துவ காப்பீட்டை வைத்திருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார் சிட்னியில் இயங்கும் புலம்பெயர்வு முகவரான ரஜ்வந்த் சிங். 

ஆனால் நடைமுறையில், வயதான பார்வையாளர்களுக்கான காப்பீட்டை Medibank கொண்டுள்ள போதிலும், அவர்களுக்கு 8501 நிபந்தனையின் படி மருத்துவ காப்பீடு வழங்க மறுக்கிறது. 

“இப்படியான நிபந்தனையை விதிக்கும் பொழுது, ஏதாவது ஒரு வகையில் அரசாங்கத்திற்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்,” எனக் கூறும் புலம்பெயர்வு முகவர் ரஜ்வந்த சிங், தாய்நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டைப் பெறுவது தான் இந்த சிக்கலை தவிர்ப்பதற்கான ஒரே சாத்தியமான வழி என்கிறார். 

“ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனம் அவ்வாறான வயதானவர்களுக்கு காப்பீட்டை வழங்குகிறது. ஆனால் காப்பீட்ட பலன்களைப் பெற ஆஸ்திரேலியாவுக்கு வந்த பின் அவர்கள் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்,” என்கிறார் ரஜ்வந்த் சிங். 

ஜஸ்லீன் கவுரின் வயதான பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒருவாரம் காலம் ஆகிறது. “கடைசியாக Allianz எனும் நிறுவனத்திடம் காப்பீட்டைப் பெறுகிறோம். ஆனால், இதற்கிடையில் அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் யார் அதற்கு பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்புகிறார் கவுர். 

“இது ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் வயதானப் பெற்றோர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல்,” என்பது இந்திய குடியேறியான ஜஸ்லீன் கவுரின் கருத்தாக உள்ளது. —

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More