தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தார்மீக உரிமை கிடையாது | அநுரகுமார

பாராளுமன்றத்தின் ஊடாக தற்போது உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே தாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதிருப்பது மக்கள் ஆணையற்ற , அவர்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாகும். அந்த அரசாங்கத்தின் பங்குதாரர்களாகுமாறு எமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பினை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர் , நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான வேலைத்திட்டத்தை முன்வைத்தால் சாதகமான பதிலை வழங்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு உண்மையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் காணப்பட்டிருந்தால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய உடனேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த சந்தர்ப்பத்தில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான யதார்த்தமான யோசனைகளை முன்வைத்து , அவை தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களையும் நாம் முன்னெடுத்திருந்தோம். இதன் போது எம்மால் 3 பிரதான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முதலாவது இடைவெளி ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்கு எதிராக அரசியல் அதிகாரம் அற்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு , பாராளுமன்றத்தில் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

எம்மால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது யோசனை , சர்வ கட்சி அரசாங்கத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சம உரிமையுடன் பங்குதாரர்களாகக் கருதி, அந்த அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் எடுத்து, அந்தக் கட்சிகள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகச் சிறிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்பதாகும்.

குறித்த சர்வகட்சி அரசாங்கத்தை இடைக்கால அரசாங்கமாகக் கருதி 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்கு அதனை வரையறை செய்து , அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது எம்மால் முன்வைக்கப்பட்ட மூன்றாவது யோசனையாகும்.

எவ்வாறிருப்பினும் இந்த யோசனைகள் எவற்றையுமே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு , பாராளுமன்றத்தில் ராஜபக்ஷவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் 134 பேருடைய வாக்குகளைப் பெற்று நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டீர்கள்.

அதற்கமைய தற்போதிருப்பது மக்கள் ஆணையற்ற , அவர்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாகும். அந்த அரசாங்கத்தின் பங்குதாரர்களாகுமாறு உங்களால் எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இது உண்மையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆகக்குறைந்தது தற்போது உங்களால் அமைக்கப்பட்டுள்ள ஆட்சிக்காலம் எதுவரையானது என்பது கூட இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. எனவே இவ்வாறான பின்புலத்தில் இனியும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பது யதார்த்தமற்றது.

எவ்வாறாயினும், எமது நாடும் மக்களும் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியிலிருந்து விடுபட குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமான வேலைத்திட்டத்தை நீங்கள் முன்வைத்தால் மக்கள் தரப்பில் இருந்து சாதகமான பதிலை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

மறுபுறம் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை என்பவற்றை அடக்குமுறைகள் ஊடாக முடக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக ‘சர்வ கட்சி’ அல்லது ‘பல கட்சி’ என்ற பெயர்களில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையோ, தார்மீக உரிமையோ கிடையாது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்