‘அரகலய’ வெற்றிபெற்ற அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் பெற்றிபெறாதது ஏன்? | அம்பிகா

ராஜபக்ஷாக்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்திய ‘அரகலய’ போராட்டம் வெற்றிபெற்ற அதேவேளை, நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் வெற்றிபெறாதது ஏன்? ஏனெனில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அவர்களுக்கு வாக்களித்தவர்களையும் உள்ளடக்கிய சிங்களவர்களேயாவர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் போராட்டத்தை அங்கீகரிப்பதில் ஏற்படும் தோல்வி என்பது ‘அழித்தலின்’ ஓர் வடிவமேயாகும் என்று தெரிவித்துள்ள அவர், ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஏனைய தரப்பினரின் போராட்டங்களை அங்கீகரிப்பது அவசியமாகின்றது. அதிலிருந்து பாடங்கற்றுக்கொள்வதும் அதற்கு ஆதரவளிப்பதும் இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும்கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் நேற்றைய தினம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், அதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

உண்மை மற்றும் நீதியைக்கோரி காணாமல்போனோரின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவந்த கவனயீர்ப்புப்போராட்டம் நேற்றுடன் 2000 நாட்களை எட்டியுள்ளது. அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடைவிடாத கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள், பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாவதற்கான அழைப்புக்கள், சமூக – பொருளாதார மற்றும் குடும்பநெருக்கடிகள் என்பன நிலவியபோதிலும் அவர்கள் மிகத்துணிவாகத் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்போதுகூட இது இலங்கையில் மிகநீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்பதைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்ஷாக்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்திய ‘அரகலய’ போராட்டம் வெற்றிபெற்ற அதேவேளை, இந்தக் குடும்பங்களின் போராட்டம் வெற்றிபெறாதது ஏன்? ஏனெனில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அவர்களுக்கு வாக்களித்தவர்களையும் உள்ளடக்கிய சிங்களவர்களேயாவர்.

ஆனால் தமிழ்ப்பெண்களாகிய இவர்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை. அரசுக்கு அவர்களுடைய குரல்கள் மிகச்சொற்ப பெறுமதிவாய்ந்தவையேயாகும். அரசியல் விமர்சகர்களும் செயற்பாட்டாளர்களும் மனித உரிமைகள் பாதுகாவலர்களும் அரச வன்முறைகளுக்கு எதிரான அமைதிவழிப்போராட்டங்கள் தொடர்பில் பேசும்போது அடிக்கடி இப்போராட்டத்தை அங்கீகரிப்பதற்குத் தவறிவிடுகின்றார்கள்.

தெற்கிலுள்ள அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் இந்தப்போராட்டங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கீகாரத்தில் ஏற்படும் தோல்வி என்பது ‘அழித்தலின்’ ஓர் வடிவமேயாகும். இதன்மூலம் அவர்களுடைய கோரிக்கைகள் மாத்திரமன்றி, காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழிகோலிய இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணமும் அழிக்கப்படுகின்றது.

ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஏனைய தரப்பினரின் போராட்டங்களை அங்கீகரிப்பது அவசியமாகின்றது. அதிலிருந்து பாடங்கற்றுக்கொள்வதும் அதற்கு ஆதரவளிப்பதும் இன்றியமையாததாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்