கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் பலி

நாட்டின் இருவேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேராதனை

பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலபிட்டிய பிரதேசத்தில் நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற தகராறு வலுபெற்று மோதலாக மாறியுள்ளது.

இதன்போது நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய கிரிபத் கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹகும்புக்கடவல

மஹகும்புக்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கவயன்குளம் பிரதேசத்தில் உள்ள வயல் பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய கொன்வௌ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர்