கொழும்பின் புறநகர் – பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் வாகனம் நீர்கொழும்பிலுள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை நீர்கொழும்புக்குக் கொண்டு வந்தனர் என நம்பப்படும் தம்பதியினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த வர்த்தகர், நேற்று மாலை பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர், பிரபல புடவைக்கடை உரிமையாளர் ரொசான் வன்னிநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி முதல் தனது சகோதரர் வீடு திரும்பவில்லை என உயிரிழந்தவரின் சகோதரி, பெப்ரவரி 01ஆம் திகதி வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து,சகோதரி உட்பட குடும்பத்தினர் பெலவத்தில் அவரது நிர்மாணப் பணியின் கீழ் உள்ள வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
நீச்சல் குளத்தின் அருகே காணப்பட்ட இரத்தக்கறைகளை வைத்து, மரணம் கொலையா என்பதைத் தீர்மானிக்கப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய, கிட்டம்ப{ஹவ பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர், தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சடலம் நீச்சல் தடாகத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அவரது பணப்பையில் இருந்து நான்கு கடன் அட்டைகள் காணாமல்போயுள்ளன.
இந்தக் கடன் அட்டைகளின் மூலம் இந்தோனேசியாவுக்கு ஐந்து விமான அனுமதிச்சீட்டுக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு விற்பனையகம் ஒன்றில் இருந்து 5 இலட்சம் ரூபாவுக்குப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.