இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பொதிகளைச் சோதனை செய்ததில், 34 கிலோகிராம் மொத்த எடையுள்ள 60 ஆயிரத்து 460 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகள் பொதுவாக நரம்பு தொடர்பான சிகிச்சைகளுக்குப் பயன்படுகின்றன. இருப்பினும், இது ஹெராயினுக்கு மாற்றாக போதைக்கு அடிமையானவர்கள் மத்தியில் இது பிரபலமாகியுள்ளது.
தலை முடிக்கான நிறப்பூச்சு பைக்கற்றுகளுக்குள் இந்தக் கடத்தல் பொருட்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் திகன, ரஜவலை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை மேலதிக விசாரணைகளுக்காக ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.