தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர். பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களினால் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு திசைதடுமாறியுள்ளனர். நாளாந்தம் மூன்று வேளை உணவைக்கூட பூர்த்தி செய்ய முடியாத இலட்சக்கணக்கான மக்கள் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் காணப்படும் ஒரேயொரு மாற்றுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே காணப்படுகின்றது.
விவசாய வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள மக்களின் விவசாயத்தை மேம்படுத்தி, கைத்தொழில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, உற்பத்தித் தொழில்களை ஏற்படுத்தி விரைவான அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியும்.
கிராமத்தைக் கட்டியெழுப்பி, நகரங்களை உருவாக்கி, நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவை எமக்கு பெற்றுத் தாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக்கொண்டார்.