ஈழத்தமிழரின் மரபுரிமைச் சின்னங்களைத் தேடிப்பாதுகாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நல்லூர் இராசதானியில் மன்னன் சங்கிலியன் காலத்தில் கட்டப்பட்ட தோரணவாசலைப் பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் முன்னெடுப்பில் இன்று 25.02.2022 வெள்ளிக் கிழமை பகல் 12.00 மணிக்கு நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ், பொருளாளர் பேராசிரியர் சந்திரசேகரம், செயலாளர் ரமேஷ், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் மற்றும் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான நிதியினை யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் உப தலைவரும், யாழ் மருத்துவ பீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் ரவிராஜ் அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து கொடை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








