ஜெருசலேமில் உள்ள பரபரப்பான ஒரு சந்திப்பில், பஸ் ஒன்றில் புகுந்த இரு துப்பாக்கிதாரிகள் பயணிகளை நோக்கிச் சுட்டதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் நேற்று (செப்டம்பர் 8, 2025) காலை 9:28 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஜெருசலேமின் வடக்கு நுழைவாயிலில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பில், யூத குடியேற்றப் பகுதிகளுக்குச் செல்லும் வீதியில் இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
துப்பாக்கிதாரிகள் பஸ்ஸில் ஏறி “தானியங்கி ஆயுதங்களால்” சுட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். தாக்குதலின் காணொளிகளில், காலை உச்சநேரப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து டஜன் கணக்கான மக்கள் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு இஸ்ரேலிய பொலிஸாரும் மீட்புப் படைகளும் விரைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவப் பணியாளர்கள், அப்பகுதி குழப்பமாக இருந்ததாகவும், உடைந்த கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததாகவும், பஸ் நிறுத்தம் அருகே வீதியிலும் நடைபாதையிலும் காயமடைந்தவர்களும் மயங்கிய நிலையில் இருந்தவர்களும் கிடந்ததாகவும் தெரிவித்தனர்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சம்பவ இடத்திற்கு வந்து தனது பாதுகாப்புத் தலைவர்களுடன் நிலைமையை மதிப்பீடு செய்தார். காஸா போர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு பகுதிகளிலும் வன்முறையை அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனியப் போராளிகள், இஸ்ரேலிலும் மேற்கு கரையிலும் இஸ்ரேலியர்களைத் தாக்கிக் கொன்றுள்ளனர். அதேவேளை, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்துள்ளது.