கிளிநொச்சி வைத்தியசாலையில் இயங்கும் செயற்கைக் கருக்கட்டல் சிகிச்சை நிலையத்தினை விரிவாக்கும் ‘கிளி மக்கள்’ அமைப்பின் திட்டத்திற்கு, இலண்டன் வர்த்தகர் தங்கராஜா கலாமோகன் அவர்கள் ரூபாய் 5 மில்லியன் நன்கொடை வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இன்று (03) நடைபெற்றது.
தொடர்புடைய செய்தி – ரூ.5 மில்லியன் நன்கொடையில் கிளி. வைத்தியசாலையில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம்!
வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எம். தயாளினி தலைமையில் இத்திட்டத்திற்குப் பொறுப்பாகவுள்ள வைத்திய நிபுணர் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இலண்டனிலிருந்து கலந்துகொண்ட தங்கராஜா கலாமோகன், ‘கிளி மக்கள்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கிருஷ்ணபிள்ளை விஜயராஜா, இலண்டன் மருத்துவ பீட மாணவி அபினயா விஜயராஜா, ‘கிளி மக்கள்’ அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் கிருஷ்ணபிள்ளை விக்கினராஜா ஆகியோர் கலந்துகொண்டு, காசோலையினை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பேராசிரியர் குமரன், கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் கே. விஜயசேகரன், வைத்தியசாலை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ‘கிளி மக்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

