செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முன்னணி நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்தின் மூத்த அமைச்சரான லூயிஸ் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து அரசு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சேவைகளை மேம்படுத்துவதிலும், வணிகம் மற்றும் அறிவியல் முன்னேற்றங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் பெரும் நன்மைகளைத் தரும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, முன்னணி ஏஐ நிறுவனங்கள் அதன் வாய்ப்புகளுடன் ஆபத்துகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசுவதை வரவேற்பதாக இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆய்வாளர் எவன் ஹூபிங்கர், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக எச்சரித்துள்ளார். தற்போதைய வளர்ச்சி வேகம் குறைக்கப்படாவிட்டால் மனிதகுலத்துக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என முன்னாள் ஆந்த்ரோபிக் ஊழியர் ஜேக்கப் காக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏஐ வளர்ச்சியின் வேகத்தைக் குறைத்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாகி டாரியோ அமோடாயின் கோரிக்கைக்கு எலான் மாஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் ஏஐ தொடர்பான பொருத்தமான ஒழுங்குமுறை சட்டங்கள் இல்லை என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் சோபெல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆபத்தான ஏஐ அமைப்புகளை அவசரகாலத்தில் முடக்குவதற்கான ‘கில் சுவிட்ச்’ சட்டத்தை உருவாக்கும் திட்டத்தை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் அணுகலைத் தடுப்பது பிற இடங்களில் ஏஐ உருவாக்கப்படுவதையோ தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ தடுத்துவிடாது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, ஏஐ மனிதகுலத்தை அழிக்கும் என்ற அச்சங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு ஏமாற்று வேலை எனக் கூறி நிராகரித்துள்ளதுடன், சர்வதேச ஏஐ போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.