மட்டக்குளி கந்தஉட பகுதியில் கார் ஒன்று, 03 முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 03 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என சந்தேகநபர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்படி வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (17) வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர் செலுத்திச் சென்ற மின்சாரத்தால் இயங்கும் கார், திடிரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிப் பயணித்துள்ளது. தானகவே வேகத்துடன் முன்னோக்கி சென்றமையால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகையால் வாகனத்தின் இயந்திரம் அல்லது, தொழில்நுட்ப அமைப்பில் கோளாறு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான நிபுணர் குழுவினரால், குறித்த கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அத்தோடு வைத்திய குழுவின் மூலம் சந்தேகநபரின் மனநிலை தொடர்பான மதிப்பிட்டை பெறுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது சேவைபெறுநர் மதுபானம் அல்லது சட்டவிரோத போதைப்பொருளையோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. ஆஸ்த்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்துவருபவர். பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ பரிசோதனையின் போது, போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்தமைக்கு அம்மருந்துகளே காரணம்.
எனது சேவை பெறுநர் செலுத்திய காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்றார். இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குதால் பொதுமக்களிடையே அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளமையால், அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
மட்டக்குளி கந்தஉட பெர்குசன் வீதி சந்திக்கருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை (16) இரவு, வத்தளை பகுதியில் இருந்து அதிக வேகத்தில் வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் காயமடைந்த 13 நபர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 03 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.