இளவரசி டயானாவின் சகோதரரான ஸ்பென்சர் பிரபு எழுதியுள்ள ‘ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்’ (Swan Song: Diana, My Sister) என்ற சுயசரிதைப் புத்தகத்தில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
1997ஆம் ஆண்டு பாரிசில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்த செய்தி உறுதி செய்யப்பட்டபோது, அப்போதைய இளவரசர் சார்லஸ் தொலைபேசியில் பேசிய குரல் “லாட்டரி வென்றவரைப் போல மகிழ்ச்சியில் மிதந்தது” என்று ஸ்பென்சர் பிரபு அதில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 1981 ஜூலை மாதம் நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில், சார்லஸ் டயானாவிடம் “திருமணம் செய்வதில் மகிழ்ச்சி. ஆனால், உண்மையில் காதலிக்கவில்லை” என்று கூறியதாக டயானாவின் தோழி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டயானா கவனக்குறைவு மற்றும் மிகைச்செயல்பாடு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்பென்சர் பிரபுவின் இந்தக் குற்றச்சாட்டுகளை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதியாக மறுத்துள்ளது.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முன்னாள் செய்திச் செயலாளரான டிக்கி ஆர்பிட்டர், இந்த கூற்றுகளை முற்றிலும் “வெற்றுப் பேச்சு” எனக் குறிப்பிட்டுள்ளார். டயானாவின் மறைவின் போது சார்லஸ் மிகுந்த மனவேதனையில் இருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்து வர்ணனையாளரான ஜென்னி பாண்ட், ஸ்பென்சரின் இந்த பதிவை ஒரு “பழிவாங்கும் நடவடிக்கை” என்று விமர்சித்துள்ளார்.
அதே வேளையில், இளவரசர் ஹாரியின் பிரதிநிதிகள் இப்புத்தகம் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.