சீனாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழைக்கு 225 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ள நிவாரண மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சீனாவின் ஹுபே, ஸிங்ஜிங், ஷாங்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 225-ஆக அதிகரித்துள்ளது. 3.10 லட்சம் பேர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
ஹுபே மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் சிக்கி 105 பேர் உயிரிழந்தனர். மேலும், 104 பேரைக் காணவில்லை.
சீனாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழைக்கு 42 பேர் பலியாகினர். மேலும், 74 பேரைக் காணவில்லை.
ஸிங்ஜிங் மாகாணத்தில் ஜூலை 20-ஆம் தேதி 19 மணி நேரம் அடைமழை பெய்தது. அங்கு 545.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு முழுவதும் பெய்த மழை அளவைக் காட்டிலும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்ஸி மாகாணத்தல் கடந்த 18-ஆம் தேதி பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கிய 6 பேர் உயிரிழந்தனர். 19,000 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர். தொடர் மழை காரணமாக 52,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 1.60 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஏழு லட்சம் ஹெக்டேரிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சுமார், 220 கோடி டாலர் (ரூ.14,520 கோடி) மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெள்ள நிவாரணம் மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளை உள்ளூர் நிர்வாகத்தினர் முறையாக மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 38,750 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.